காட்டு யானை ரோட்டில் உலா

பெ.நா.பாளையம்: கோவை - ஆனைகட்டி ரோட்டில் நீண்ட நேரம் சாவகாசமாக நடமாடிய காட்டு யானை, மரத்திலிருந்த புளியங்காய்களை சுவைத்து தின்றது. இதனால், போக்குவரத்து பாதித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். கோவை - ஆனைகட்டி ரோட்டில் மாங்கரை அடுத்துள்ளது செம்மேடு பகுதி.

இங்குள்ள ரோட்டோரத்தில் நிறைய புளியமரங்கள் உள்ளன. நேற்று காலை இப்பகுதியில் நுழைந்த காட்டுயானை மரத்திலுள்ள புளியங்காய்களை சுவைத்தபடி அங்குமிங்குமாக நடமாடியது. ரோட்டின் மைய பகுதியில் நின்றிருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. ஆனைகட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ், நோயாளியை அழைத்துச் செல்ல முடியாமல், 'யானையின் மறியலில்' சிக்கிக்கொண்டது. இதே போன்று ஒரு தனியார் பஸ், இரண்டு அரசு பஸ்களும் கோவைக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர் பஸ்சில் இருந்தபடி தவித்தனர். யானை, வழியில் நிற்பது குறித்து மாங்கரை வனத்துறையினருக்கு மக்கள் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் யாரும் வரவில்லை.

வழியில் நின்ற அனைத்து வாகனங்களும் ஒருசேர தொடர்ந்து 'ஹார்ன்'களை ஒலித்தன. ஒரு மணி நேரத்திற்கு பின், காட்டு யானை அவ்விடத்தை விட்டு அகன்றது. யானை வழியில் நின்றதால் நேற்று காலை 8.00 மணியிலிருந்து 9.00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.


மாங்கரை பொதுமக்கள் கூறியதாவது: மாங்கரை மற்றும் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் 20க்கும் மேற் பட்ட யானைகள் சுற்றுகின்றன. இதில், ஆண் யானை ஒன்று மட்டும் காலை, மாலை நேரத்தில் ரோட் டிற்கு வருகிறது. ரோட்டோர மரத் தில் உள்ள புளியங்காய்களை பறித்து நிதானமாக உட்கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ரோட்டுக்கு யானைகள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர். கோவை - ஆனைகட்டி ரோட்டில் இரவு நேரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ளதால், வாகனங்களில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

0 comments: