தமிழகத்தில் பொதுத் தேர்வு: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

IPL Season 5

சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 4ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.

கிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது 2ம் பட்சமாக கருதப்படுகிறது. வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியாதாக உள்ளது.

ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

ஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார ஆஇஇஐஐ, மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.

பணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தையும் அவர்கள் பொதுத்தேர்வில் பெரும் மதிப்பெண்ணையும் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை (ஏப்ரல் 23 ஆம் தேதி) நடத்த அனுமதிக்க கூடாது.

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்ஸ் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 comments: