ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி:லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏழை மாணவர்களுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் சட்டம் செல்லும் என்பதுதான் அது. ஏழை மாணவர்கள் அகரம் படிக்க பள்ளிக்குச் செல்வது அரசுப்பள்ளிக்குத்தான். அரசுப் பள்ளிகள் தொலைவில் இருக்கும் பட்சத்தில் ஏழைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் பணம் செலவழித்து சேர்ப்பதற்கு இயலாத சூழ்நிலையில் அவர்களுக்கு கல்வி என்பது கனவாகவே போய்விடுகிறது. இதை மனதில் கொண்டுதான் கடந்த 2009 ம் ஆண்டு கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை என்பதை உணர்த்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி அனைத்து மாநில அரசுகளும் 6 வயதில் இருந்து 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கட்டாயமாக இலவச கல்வி அளிக்கவேண்டும் அனைத்து பள்ளிகளும் ஏழைகளுக்கு 25 சதவிகித இடத்தை இலவசமாக ஒதுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. தனியார் பள்ளிகள் எதிர்ப்பு: மத்திய அரசின் சட்டம் தனியார் பள்ளிகளுக்கு உள்ள உரிமைகளை மீறும் வகையில் உள்ளது, இதை ரத்து செய்யவேண்டும் என்று அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் அரசுதரப்பு, தனியார் பள்ளிகள் தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வாதந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமையன்று வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய தீர்ப்பினை அளித்துள்ளது. கல்வியை அடிப்படை உரிமையாக்கி மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாய கல்வி உரிமைச் சட்டம் செல்லும். இந்த சட்டம் அரசு உதவிபெறாத சிறுபான்மையினர் பள்ளிகளைத் தவிர இதர அனைத்து பிரிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். அனைத்து பள்ளிகளும் 25% இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை அமைப்புகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும், அரசிடம் இருந்தோ, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தோ நிதி உதவி பெறாத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் நீதிபதி ராதா கிருஷ்ணன் கூறிய தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் அமர்வில் இடம்பெற்றிருந்த மற்ற நீதிபதிகள் அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என தீர்ப்பளித்தன. கபில் சிபல் வரவேற்பு: உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்றார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் அடிப்படை வசதியற்ற ஏழை மாணவர்களுக்கும் கல்விச் செல்வம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு திருத்தம்: இதனிடையே கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் சேரும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments: