ஆண்களைவிட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்

ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படுவதாக இங்கிலாந்து நிபுணர் தெரிவித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த லாப்பரோ யுனிவர்சிட்டியின் உறக்க ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜிம் ஹார்ன். தூக்கம் குறித்து அவர் கூறியதாவது:


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான் தூக்கம். சோர்வடைந்த மூளைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதுதான் தூக்கத்தின் முக்கிய பணி. மூளையின் ஒரு பகுதி கார்டெக்ஸ். இது நினைவாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகிய பணிகளை செய்கிறது.

ஆழ்ந்த தூக்கத்தின்போது, இது வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு பகல் நேர இயக்கத்தை மறுஆய்வு செய்கிறது. எனவேதான், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு இரவில் அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது.
பெண்களின் மூளை ஆண்களின் மூளையிலிருந்து மாறுபட்டது. குழந்தைகள், கணவன் என குடும்ப பொறுப்பு மட்டுமல்லாது, அலுவலக பொறுப்புகளையும் பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது. எனவே,

ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது. சராசரியாக 20 நிமிடமாவது பெண்கள் கூடுதலாக தூங்க வேண்டும்.
நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஆண்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுடைய மூளை மிகவும் சோர்வடைகிறது.

அவர்களுக்கும் சராசரி ஆண்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்றார்.

0 comments: