பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்து அபாரம்


பத்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பான்மையாக எட்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்ற எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து அபார சாதனை படைத்தார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் மூலம் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 761 மாணவர்கள், நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 519 மாணவியர் என, எட்டு லட்சத்து 44 ஆயிரத்து 280 பேர், மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 145 பேர், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,674 பேர், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை 1,548 பேர் எழுதினர். இதன் முடிவுகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி நேற்று காலை வெளியிட்டார். 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.9 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்களில் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 764 பேரும், மாணவியரில் மூன்று லட்சத்து 68 ஆயிரத்து 940 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 79.4 சதவீத தேர்ச்சியும், மாணவியர் 85.5. சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


வழக்கம்போல, மாணவியர் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளனர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வில் 88.2 சதவீதம் பேரும், மெட்ரிக் தேர்வில் 94.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் வித்யாலயா மெட்ரிக்., பள்ளி மாணவி பவித்ரா 495 மார்க் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இந்த தேர்விலும் மாணவர்களை விட, மாணவியர் 3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.2 சதவீதம் பேரும், மாணவியர் 96.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலோ இந்தியன் தேர்வில் 96.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மாநில பாடத்திட்டத்தில் நெல்லை மாவட்ட மாணவி முதலிடமும், நீலகிரி, கரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இரண்டாம் இடமும், மூன்றாம் இடத்தை பத்து மாணவர்களும் பிடித்துள்ளனர். 15 மாணவர்களில் நான்கு மாணவர்கள் தவிர, மற்ற 11 மாணவர்களும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மாநில ரேங்க்கில், புதுச்சேரிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் தலா ஒரு இடத்தை பிடித்துள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த 15 மாணவர்களில் ஜாஸ்மின் தவிர, மற்ற 14 மாணவர்களும், அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சாதிக்க பிரபலமான பள்ளி தேவையில்லை: நிரூபித்தார் மாநகராட்சி பள்ளி மாணவி: பிரபலமான பள்ளியில் படித்தால் தான் சாதிக்க முடியும்; அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை கருத்தை, நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்த்தெறிந்து, மாபெரும் சாதனை படைத்துள்ளார். தனியார் பள்ளிகள் மீது, பொதுமக்களுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பள்ளிகளில் மட்டுமே, குறிப்பாக மிகப்பெரிய பள்ளிகளில் மட்டுமே, தரமான கல்வி வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் தான், எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்ற கருத்து, பொது மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால், அவரவர் வசதிகேற்ப தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் தரமான கல்வியை வழங்கினாலும், மக்களிடமுள்ள மோகத்தை பயன்படுத்தி, காசு பார்க்கும் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.


நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவிலான ரேங்க்குகளையும், பாட வாரியான ரேங்க்குகளையும், அதிகம் பெற்றவர்கள் கிராமப்புற மாணவர்கள் தான். நகர்ப்புறங்களிலுள்ள மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பெரிய பள்ளி என்று படையெடுப்பவர்களின் கண்களை திறக்கும் வகையில், சாதிப்பதற்கு பள்ளி முக்கியமல்ல; உழைப்பு தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார், நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், இவர் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


பெரிய தனியார் பள்ளிகளிலுள்ள கட்டமைப்பு வசதிகள், உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்கள், பல்வேறு வகையான கற்பிப்பு முறைகள் ஆகியவை மாநகராட்சி பள்ளிகளில் இருக்குமென கூற முடியாது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஓரளவுக்கு தான் வசதிகள் இருக்கும். முக்கியமாக, படிப்பில் சுமாரான மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள் அட்மிஷன் கொடுப்பதில்லை. மாறாக, மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அட்மிஷன் கொடுத்து, அவர்கள் சாதனையை, தங்கள் சாதனையாக பள்ளிகள் பறைசாற்றி கொள்கின்றன. இதற்கு மத்தியில், சாதாரண பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும், அதற்கு ஈடுபாடும், முழுமையான உழைப்பும் மட்டுமே தேவை என்பதை எடுத்து காட்டியுள்ளார் ஜாஸ்மின்.


மிகவும் ஏழ்மை நிலையில் அபார சாதனை: தந்தை பெருமிதம்: மிகவும் ஏழ்மை நிலையில், மாநில அளவில் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாநில முதல் ரேங்க் பெற்ற மாணவியின் தந்தை தோவூது கூறினார். சாதனை மாணவியின் தந்தை தோவூது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகளின் சாதனை குறித்து தோவூது கூறியதாவது: நான் மோட்டார் சைக்கிளில் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். விற்பனையை பொறுத்துதான் லாபம் ஏதாவது கிடைக்கும். குறைந்தது மாதத்திற்கு ஏழு அல்லது எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் மாநில அளவில் முதலாவது ரேங்க் பெற்றார் என்ற தகவல் கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.


ஒரு தந்தையாக அவளது கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஜாஸ்மின் வேறு பள்ளியில் படித்தார். 6ம் வகுப்பு முதல் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். ஆரம்பம் முதலே பள்ளியில் நன்கு படித்து முதல் ரேங்க் பெறுவார். தொடர்ந்து நன்கு படித்து, தற்போது மாநில அளவில் முதலாவது ரேங்க்கை பெற்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் மிகவும் உறுதுணையாகவும், ஊக்கமும் அளித்தனர். எனவே, தொடர்ந்து இதே பள்ளியிலேயே படிக்க வைப்பேன். வேறு எந்த பள்ளியிலும் சேர்க்க மாட்டேன். எனது மகளின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஊக்கத்தையும் அளிப்பேன். இவ்வாறு சாதனை மாணவியின் தந்தை கூறினார்.

0 comments: