போராட்டம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான தீர்ப்பு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. சுமார் 450 ஆண்டுகள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியில் தொழுகையே நடைபெறவில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மசூதியில் 1949, டிசம்பர் 23-வரை தொழுகை நடந்துள்ளது.


அதன்பிறகு, கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், அங்கு தொழுகையே நடைபெறவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது.


இந்துக்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே! உணர்வின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நாங்கள் உரிமையின் அடிப்படையில் போராடுகிறோம். முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவி உள்ளோம். நாட்டில் வாழும் இந்து சகோதரர்கள் முஸ்லிம்களின் தொப்புள்கொடி உறவுகள்தான் என்பதில் ஐயமில்லை. அதற்காக, உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.


நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்துத்தான் 60 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் ராமர் பிறந்த இடம், பள்ளிவாசலுக்கான கூறுகள் போன்ற வழக்கிற்கு தொடர்பில்லாதவை குறித்தெல்லாம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன.


காங்கிரஸ் காரணம்: அயோத்தி பிரச்னையில் பாபர் மசூதிக்கு பூட்டு, பூட்டை உடைத்து பூஜை, மசூதியை தரைமட்டமாக்கியது போன்ற நிகழ்வுகளின்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துள்ளதை வரலாறு நிரூபிக்கிறது. அணு உலை விபத்துகான இழப்பீடு மசோதா, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்ற விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சியினரை திருப்திபடுத்தும் நோக்கில் காங்கிரஸ் செயல்படுகிறதோ என ஐயம் எழுந்துள்ளது.


போராட்டம்: அயோத்தி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகளை ஒன்று திரட்டி மத்திய, மாநில அரசுகளுக்குப் எதிராகப் போராட்டம் நடத்த உள்ளோம். இதுகுறித்து ஆலோசனை நடத்த எங்கள் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) சேலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது என்றார் பாக்கர். பேட்டியின்போது அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் செய்யது இக்பால், மாநிலச் செயலாளர் அபுபைசல், ஆகியோர் உடன் இருந்தனர்

நன்றி: தினமணி

0 comments: