திருமாவளவன் தலைமையில் கலைஞருக்கு பாராட்டு விழா

தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களைத் நடைமுறைப்படுத்தியதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு `அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தொல். திருமாவளன் எம்.பி. நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, `தாட்கோ' மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ததற்காகவும், ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் என்கிற பெயரில் 21 லட்சம் காரை வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்புச் செய்ததற்கும், அரசுப் புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பித்ததற்காகவும் அவர் நன்றி தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விமர்சனம் செய்துள்ளதை பொருட்படுத்தாமல் உள் ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வரும் கருணாநிதியை பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010-ம் ஆண்டுக்கான `அம்பேத்கர் சுடர்' விருதினை வழங்குவது என்ற முடிவுக்கு முதலமைச்சர் கருணாநிதி மகிழ்வுடன் இசைவளித்துள்ளார்.
இதற்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் 14-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மற்ற விருதுகள் பெறுவோர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்’’கூறப்பட்டுள்ளது.

0 comments: