தஞ்சை தாலுகா, நகராட்சியில் இதுவரை 86,145 டிவிக்கள் வழங்கி அரசு சாதனை :மத்திய அமைச்சர் தகவல்

தஞ்சை தாலுகா மற்றும் நகராட் சியில் இதுவரை 86 ஆயிரத்து 145 இலவச டி.வி.க்களை வழங்கி அரசு சாதனை படைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் கூறினார்.தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் இலவச டி.வி. வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் பிரபாவதி வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் துரை சந்திரசேகரன், மகேஷ்கிருஷ்ணசாமி, பஞ். தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இலவச டிவிக்களை வழங்கி பேசியதாவது:முதல்வர் கருணாநிதியின் சிறப்பு திட்டமான இலவச டி.வி வழங்கும் திட்டத்தில் தஞ்சை தாலுகா வில் உள்ள 78 கிராமங்கள் மற்றும் தஞ்சை நகராட்சியில் உள்ள 47 வார்டு களுக்கும் இதுவரை 86 ஆயிரத்து 145 டி.விக்கள் வழங்கப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டி ஊராட்சியில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 27 சாலைப்பணிகள் ரூபாய் 43 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், 21 குடிநீர் திட்டப்பணிகளும், ரூபாய் 7 லட்சம் மதிப்பில் தெரு விளக்கு பணிகள் என்று பல சாதனைகள் நடந்து உள்ளது.


இந்நிலையில் இப்போது 2 ஆயிரத்து 254 பயனாளிகளுக்கு இலவச டி.வி வழங்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்க விவசாயிகள் தயங்கக்கூடாது. அப்போது தான் மழை வளம் நிலைத்து நிற்கும். இவ்வாறு பழனி மாணிக்கம் பேசினார். ஒன்றியக்குழு தலைவர் துரைராஜன், வேளாண் விற்பனைக்குழு தலைவர் செல்வம், மாவட்ட பஞ். உறுப்பினர் அருளானந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன், கிராம கல்விக்குழு தலைவர் கோகுலகிருஷ்ணன் பெரியநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஏப்., 13ம் தேதி ரத்து

தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஏப்ரல் 13ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர, ரயில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, ரயில்வே கோட்ட பி.ஆர்.ஓ., சிவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு விபரமாவது:

ரயில் வண்டி எண் 892ஏ, 899ஏ தஞ்சை - மயிலாடுதுறை - தஞ்சை பயணிகள் சிறப்பு ரயில் ஏப்ரல் 13ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அன்று ரயில் வண்டி எண் 824 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், திருச்சி - குத்தாலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே இயக்கப்பட்டு, குத்தாலம் - மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.


ரயில் வண்டி எண் 825ஏ மயிலாடுதுறை - நெல்லை பயணிகள் ரயில் 13ம் தேதி மயிலாடுதுறை - குத்தாலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு, மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக குத்தாலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கி தவித்த பெண்ணை தன் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய வைகோ

பழநி அருகேயுள்ள சத்திரப்பட்டி தாசிரிப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி மனைவி பழனியம்மாள்(45), தாசிரிப்பட்டியில் இருந்து தனியார் பஸ்சில் பழநிக்கு சென்றுள்ளார். இவர் பஸ்சில் ஏறும் போது தவறி கீழே விழுந்தார்.


இந்த நேரத்தில் பழநியில் நேற்று விபத்தில் இறந்த, ம.தி.மு.க., தொண்டர் பிரபுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திண்டுக்கல்லுக்கு காரில் வைகோ திரும்பிக் கொண்டிருந்தார்.


பெண் விழுந்ததை பார்த்து காரை நிறுத்திய வைகோ, தனது காரிலேயே கீழே விழுந்த பழனியம்மாளை பழநி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மற்றொரு காரில் திண்டுக்கல் வந்தார்.


பழநி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பழனியம்மாள், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மறுவாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ண்டி மாவட்டத்தில் உள்ள 34 வாக்குச்சாவடிகளில் நேற்று மோசடி நடைபெற்றதாகவும், இதையடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் இம்மாவட்டத்திற்கான தேர்தல் பொறுப்பு அலுவலர் கோத்தபய ஜயரத்ன கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது

சானியா திருமணம் நடைபெறவில்லை

சானியா-சோயிப்மாலிக் திருமணம் ஐதராபாத்தில் வரும் 15-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமையான இன்று உகந்தநாள் என்பதால் இன்றே திருமணத்தை நடத்தி விடுவது என்று திடீரென தீர்மானிக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் நடந்தன.

இந்த நிலையில் திடீரென சட்ட சிக்கல்கள் எழுந்தன.

சோயிப் மாலிக் வெளிநாட்டுக்காரர் என்பதால், அவர் தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும், தன் மீதான வழக்கு முடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், முதல் மனைவி ஆயிஷாவின் புகாரின்பேரில், போலீசார் சோயிப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, உள்ளூர் கோர்ட்டில் ஒப்படைத்து இருந்தனர்.

கோர்ட்டில் விண்ணப்பித்துத்தான், அந்த பாஸ்போர்ட்டை திரும்பப்பெற வேண்டும். அதற்கு கால அவகாசம் இல்லாததால், சோயிப் மாலிக் தனது பாஸ்போர்ட்டை திரும்பப்பெறவில்லை.

இதனால் இன்று திருமணத்தை நடத்த முடியவில்லை. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, 15-ந் தேதிக்கு சானியா திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தரமாட்டோம்

இலங்கையிலும் ஆப்கானிலும் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. எனவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இனி அடைக்கலம் தரமாட்டோம் என்று ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் இதுகுறித்து, ’’இலங்கையில் போர் முடிவுற்றுவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைந்துள்ளது. ஏற்கெனவே இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் தருவதை மற்ற நாடுகள் நிறுத்திவிட்டன.

தற்போது ஆஸ்திரேலியா அந்த நிலையை கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. எனினும், ஆப்கான் அகதிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா தான் முதன்முறையாக அடைக்கலம் தருவதை நிறுத்த முடிவு செய்துள்ளது’’ என்கிறார்.

அரியவகை நீல வைரம்

ஹாங்காங்கில், அரிய வகை நீல வைரம் ஒன்று, 28.80 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இந்த வைரம், பாரம்பரியமான 'டீ பியர்ஸ்' மில்லேனியம் கலெக்ஷனை சேர்ந்தது.உலகின் முன்னணி வைர உற்பத்தியாளர்களான, 'டீ பியர்ஸ்' கடந்த 2000ம் ஆண்டு, மில்லேனியம் என்ற புத்தாயிரம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், 12 அரிய வகை வைரங்களை காட்சிக்கு வைத்தது. அதில் தற்போது தான், முதல் முறையாக, இந்த அரிய வகை நீல வைரம் ஏலம் மூலம் விற்கப்பட்டுள்ளது. 5.16 கேரட் எடை கொண்ட, இந்த வைரம் பேரிக்காய் வடிவத்தில் காணப்படும்.இந்த வைரத்திற்கு, பிரபல ஏல நிறுவனமான 'சூத்பி', 20.70 கோடி ரூபாய் முதல் 26.10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்த வைரத்தை, லண்டனை சேர்ந்த விலையுயர்ந்த கற்கள் விற்பனை செய்பவரான, அலிசா மவுசேப் என்பவர் 28.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

இதுகுறித்து இந்த வைரத்தை வாங்கிய அலிசா மவுசேப் கூறுகையில்,'எனக்கு இந்த விலை திருப்திகரமாக உள்ளது. மக்கள், இந்த வைரத்தின் மதிப்பை உணர்ந்து, அதை விரும்புவர் என நம்புகிறேன்' என்றார்.தேடியும் அதிகம் கிடைக்காத, உயர்தரமான அரிய பொருளை, மக்கள் எப்போதும் விரும்புவதால், இந்த அளவு விலை கிடைக்கிறது என்றும் கூறப்பட்டது.

அணு குண்டுகளை அழிக்க ரஷியா-அமெரிக்கா ஒப்பந்தம்

உலகின் இரண்டு பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷியாஇடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. அந்த சமயங்களில்இரண்டு நாடுகளும் ஏராளமான அணு குண்டுகளை தயாரித்தன.

இந்த
சூழ்நிலையில், உலகின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணுஆயுதங்களை குறைக்க இரண்டு நாடுகளும் முன் வந்தன. அது தொடர்பாகநீண்டகாலமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

வரலாற்று
சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷிய அதிபர் மெத்வதேவும் கையெழுத்திட்டனர்.

சிகரெட் தயாரிக்க தடை

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டு கம்பெனிகள் சிகரெட் தயாரிப்பதற்கு தடை விதிக்க மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று நடந்தது. இதில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

’’அந்நிய நேரடி முதலீட்டு கம்பெனிகள் சிகரெட்டை இந்தியாவில் தயாரிப்பதற்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்து இருக்கிறது.

இது உள்நாட்டு உபயோகத்துக்காக இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்குடன் தயாரிக்கப்பட்டாலும் சரி அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் சிகரெட் தயாரிக்கப்படுவது தடை செய்யப்படுகிறது.

இது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் பொருந்தும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தைச் சார்ந்த தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு குழுவின் பரிந்துரையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரை யாரும் சந்திக்கலாம்

''அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தை விட, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது,'' என தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். சட்டசபையில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதாக இங்கே பறைசாற்றிக் கொண்டனர். தி.மு.க., ஆட்சியில் தான், அதிக தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமில்லாமல், மாநிலம் முழுவதும் பரவலாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 45 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் துறையில் மூலதனம் செய்யப்பட்டுள்ளது. மூன்று லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதற்கு முன் முதல்வராக இருந்தவரை, அவ்வளவு எளிதில் யாரும் பார்க்க முடியாது. இப்போதைய முதல்வரையும், துணை முதல்வரையும், அதிகாரிகளையும் தொழிலதிபர்கள் எளிதில், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கின்ற நிலை இருக்கிறது. அவர்களது குறைகளை தெரிவிக்கின்றனர். அதனால், தொழில்துறை வளர்ச்சி பெறுகிறது.

கடந்த ஆட்சியில் பட்ஜெட் வருகிறது என்றால், என்ன அறிவிப்பு வருமோ என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் பட்ஜெட்டுக்கு முன்னதாக அனைத்து தரப்பினரையும் அழைத்துப்பேசி, நல்ல பட்ஜெட்டை அன்பழகன் தாக்கல் செய்திருக்கிறார். மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தை, முந்தைய ஆட்சி முடக்கி வைத்திருந்தது. ஆனால், இந்த ஆட்சி வந்ததும் அத்திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, இந்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்துடன் ஆலோசனை நடத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று 'பெர்த்' என்ற இடத்தில் ஆஸி., வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து, ஸ்மித், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 'ஆஸி.,யில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்கு ஆஸி., அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டது. மேலும், இருதரப்பிலான கல்வி தொடர்பான உறவுகள் பற்றியும் விவாதிக்கப் பட்டது. இருதரப்பு அரசியல் ரீதியான உறவுகளில் கபில் சிபல் உறுதியான ஆதரவோடு உள்ளார்' என்று தெரிவித்தார்.


ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், கல்வித் துறை அமைச்சருமான ஜூலியா கில்லார்ட்டையும் கபில் சிபல் சந்திக்க உள்ளார். அதையடுத்து, ஆண்டுதோறும் நடக்கும் இருதரப்பு கல்விக் கூட்டுறவு தொடர்பான அமைச்சக கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார். ஆஸ்திரேலிய பல்கலைகளின் பிரதிநிதிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்களையும் அவர் சந்தித்துப் பேச இருக்கிறார்.

ஒபாமாவின் ஆண்டு சம்பளம் ரூ.1.80 கோடி


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் 1.80 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர், வரி செலுத்த வேண்டும். அமெரிக்காவில் பெரும் தொழிலதிபர்கள் பெறும் சம்பளத்தை ஒப்பிட்டால், இது மிகவும் குறைவாகும்.

இதைத் தவிர, அவருக்கு வரிகளற்ற வகையில் 22 லட்சம் ரூபாய் கூடுதல் சலுகையும் கிடைக்கிறது. இந்த தொகையை அவர், அலுவலக ரீதியான பயன்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும். அதிபர் ஒபாமாவின் தற்போதைய சம்பள வீதப்படி, அவர் ஆண்டுக்கு 95 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, அமெரிக்க அதிபரின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதில், 'அமெரிக்க அதிபராக ஒருவர் பதவி வகிக்கும் போது, அவரின் சேவைக்காக சம்பளம் வழங்கப்படும். அந்த சம்பளத் தொகை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆட்சிக் காலத்தில் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. மேலும், அவர் அதிபராக பதவி வகிக்கும் காலத்தில், அமெரிக்காவில் மற்ற பணிகளில் ஈடுபட்டு சம்பளம் பெறக் கூடாது.


அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பொது விதிமுறைகள் படி, அதிபராக பதவி வகிக்கும் ஒருவர், மீண்டும் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் போது, அவரது சம்பளத்தை அதிகரிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அப்போதைய அதிபர் பில் கிளின்டன் ஆட்சிக் காலத்தில், அதிபரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான சட்டம், அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் நிறைவேற்றப்பட்டு, அதில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்க சட்டப்படி, அதிபர் ஒபாமாவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில், அவரது சம்பளத்தை அதிகரிக்க முடியாது. அமெரிக்க அதிபருக்கான சம்பள முறை, கடந்த 1789ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது, அதிபரின் சம்பளம் 12 லட்சம் ரூபாயாக இருந்தது. அது முதல், 1873, 1909, 1949,1969 மற்றும் 1999 என, ஐந்து முறை மட்டுமே அதிபரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் லுங்கி அணிய தடை?

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவில், பொது இடங்களில் லுங்கி அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் லுங்கி அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் பலர், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணி புரிகின்றனர். இவர்கள் பொது இடங்களில் லுங்கி அணிந்து சென்று வந்தனர்.

கடந்த வாரம் ஷார்ஜாவில் லுங்கி அணிந்து சென்ற ஆசிய நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள தெற்காசிய நாட்டவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அரசிடமிருந்து முறையான அறிவிப்பு ஏதும் வராத நிலையில் லுங்கி அணிந்து சென்றவரை போலீசார் ஏன் கைது செய்ய வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ளனர். அரபு நாடுகளை பொறுத்தவரை உடல் முழுக்க மறைக்கும் படியான ஆடைகளை அணிய வேண்டும். 'கைது செய்யப்பட்ட நபர் லுங்கியை இருபுறமும் தைக்காமல் வேட்டியை போல அணிந்து சென்றிருப்பார். இதனால், காற்றில் லுங்கி பறக்கும் போது அவரது கால்கள் மற்றவர்கள் பார்க்கும் படியாக தெரிந்திருக்கும். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்' என, கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அவர், வீட்டைத் தவிர வெளியிடங்களில் லுங்கி அணிவதில்லை, என தெரிவித்துள்ளார்.

தாமதத்தை நோக்கி சேது சமுத்திர திட்டம்

மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆய்வுப் பணியால், அத்திட்டம் மேலும் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக, சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இத்திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்காக முடங்கியது. யார் மனதையும் புண்படுத்தாமல், மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்ற முன்வருமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இத்திட்டம் தொடர்பாக பச்சேரி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், மாற்றுப் பாதை ஆய்வுகள் நடக்கவில்லை. இது குறித்து, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் விளைவாக, தேசிய கடல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தற்போது, தென்மாநில கடல் எல்லையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தான் நீரின் ஓட்டம், அலையின் வேகம் போன்றவை கணக்கிடப்பட்டு வருகிறது.

இவை நிறைவு பெறவே சில ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. அதன் பின், மாற்றுப் பாதை பணிகள் துவங்கி, திட்டம் நடைமுறைக்கு வருவது என்பது நீண்ட இடைவெளிக்கு பின்னரே நடக்க வாய்ப்புள்ளது. ஆய்வுப் பணியை குறிப்பிட்ட சில மாதங்களிலேயே முடிக்கும் வாய்ப்புகள் இருந்தும், பணியை தாமதப்படுத்தும் நோக்கிலேயே ஆய்வுகள் நடந்து வருகின்றன.

நடந்து வரும் பணிகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. பச்சேரி கமிட்டியின் உறுப்பினராக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் இருந்தும், அந்த வகையிலும் அவருக்கு தகவல்கள் வரவில்லை.

காட்டு யானை ரோட்டில் உலா

பெ.நா.பாளையம்: கோவை - ஆனைகட்டி ரோட்டில் நீண்ட நேரம் சாவகாசமாக நடமாடிய காட்டு யானை, மரத்திலிருந்த புளியங்காய்களை சுவைத்து தின்றது. இதனால், போக்குவரத்து பாதித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். கோவை - ஆனைகட்டி ரோட்டில் மாங்கரை அடுத்துள்ளது செம்மேடு பகுதி.

இங்குள்ள ரோட்டோரத்தில் நிறைய புளியமரங்கள் உள்ளன. நேற்று காலை இப்பகுதியில் நுழைந்த காட்டுயானை மரத்திலுள்ள புளியங்காய்களை சுவைத்தபடி அங்குமிங்குமாக நடமாடியது. ரோட்டின் மைய பகுதியில் நின்றிருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. ஆனைகட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ், நோயாளியை அழைத்துச் செல்ல முடியாமல், 'யானையின் மறியலில்' சிக்கிக்கொண்டது. இதே போன்று ஒரு தனியார் பஸ், இரண்டு அரசு பஸ்களும் கோவைக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர் பஸ்சில் இருந்தபடி தவித்தனர். யானை, வழியில் நிற்பது குறித்து மாங்கரை வனத்துறையினருக்கு மக்கள் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் யாரும் வரவில்லை.

வழியில் நின்ற அனைத்து வாகனங்களும் ஒருசேர தொடர்ந்து 'ஹார்ன்'களை ஒலித்தன. ஒரு மணி நேரத்திற்கு பின், காட்டு யானை அவ்விடத்தை விட்டு அகன்றது. யானை வழியில் நின்றதால் நேற்று காலை 8.00 மணியிலிருந்து 9.00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.


மாங்கரை பொதுமக்கள் கூறியதாவது: மாங்கரை மற்றும் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் 20க்கும் மேற் பட்ட யானைகள் சுற்றுகின்றன. இதில், ஆண் யானை ஒன்று மட்டும் காலை, மாலை நேரத்தில் ரோட் டிற்கு வருகிறது. ரோட்டோர மரத் தில் உள்ள புளியங்காய்களை பறித்து நிதானமாக உட்கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ரோட்டுக்கு யானைகள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர். கோவை - ஆனைகட்டி ரோட்டில் இரவு நேரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ளதால், வாகனங்களில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.