பொங்கல் நாளன்று நெல்லை மாவட்டத்தில் ரூ. 3 கோடி மது விற்பனை

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் நாளான்று டாஸ்மாக் கடைகளில் ரூ. 3.1 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.36 லட்சம் அதிகம் ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் 223 டாஸ்மாக் மதுகடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 49 கடைகள் மாநகராட்சி பகுதியிலும், 174 கடைகள் மற்ற பகுதிகளிலும் இயங்கி வருகின்றன.


நெல்லை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சராசரியாக நாளொன்றுக்கு 1 கோடி் ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாகிறது. விழாக்காலங்களில் விற்பனை கூடுதலாகி வருகிறது.


கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரூ.3 கோடியே 34 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்னையானது. இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ரூ.3 கோடியே 1 லட்சத்து 5,800க்கு விற்பனையாகி உள்ளது.


கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஓப்பிடும்போது இந்த ஆண்டு ரூ.36 லட்சம் அதிகமாகும். இதன் மூலம் 13 சதவீதம் விற்பனை

பழம்பெரும் கம்யூ. தலைவர் ஜோதிபாசு மரணம்

பழம்பெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு இன்று பிற்பகல் கொல்கத்தா மருத்துவமனையில் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 95. ஜனவரி 1ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜோதிபாசு. அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சில நாட்களுக்கு முன்பு அவரது இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. முதலில் சிறுநீரகம் செயலிழந்தது. பின்னர் நுரையீரல், இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

நேற்று இரவு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஜோதிபாசு மரணமடைந்தார். இதுகுறித்து இடதுசாரி கூட்டணி கமிட்டியின் தலைவர் பிமன் போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜோதிபாசு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற சோகச் செய்தியை உங்களிடம் பெருத்த வருத்தத்துடன், கனத்த இதயத்துடன் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

ஜோதிபாசுவின் தனி மருத்துவர் டாக்டர் அஜீத் குமார் மைத்தி கூறுகையில், 11.47 மணிக்கு ஜோதிபாசு மரணமடைந்தார் என்றார்.

ஜோதிபாசுவுக்கு சந்தன் என்ற மகன் உள்ளார். அவருடைய மனைவி கமலா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 23 ஆண்டுகள் இருந்து பெரும் சாதனை படைத்தவர் ஜோதிபாசு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் சிறந்த காராக நானோ தேர்வு

உலகின் மலிவு விலை காரான டாடா நானோ, இந்த ஆண்டின் சிறந்த காருக்கான ÔÔஆட்டோகார் விருது 2010ÕÕக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதை தனியார் வர்த்தக சேனல் குழுமம் ஆண்டுதோறும் அளித்து வருகிறது.

மும்பையில் இந்த ஆண்டுக்கான சிறந்த கார் தேர்வு விழா நேற்று நடந்தது. அதில் டாடா நானோ பெயர் அறிவிக்கப்பட்டது.

அதைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும். காரின் விலையும் ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கேபிள் டி.வி.யில் ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பியதால், கேபிள் டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஒளிபரப்பு தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் கேபிள் டிவிகளில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், ஈரோடு, பவானி, கோபி சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள திரைப்பட சி.டி. கடைகள் மற்றும் கேபிள் ஒளிபரப்பு மையங்களில் போலீசார் நேற்று முன்தினம் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பெரும்பாலான சி.டி. கடைகள் பூட்டியிருந்ததால் யாரும் சிக்கவில்லை.


கேபிள் ஒளிபரப்பு நிலையங்களில் மேற்கொண்ட சோதனையில் பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையம் சக்தி கேபிள் நெட்வொர்க் மையத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வேட்டைக்காரன் படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேபிள் உரிமையாளர் யுவராஜ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அங்கிருந்த ஒளிபரப்பு சாதனங்கள், கம்ப்யூட்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட புதுப்பட சிடிகளை பறிமுதல் செய்தனர்.


இது குறித்து எஸ்.பி.ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘கேபிள் சேனல் ஒளிபரப்புகளை கண்காணித்து வருகிறோம். உரிமம் இல்லாத புதுப்படங்களை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுப்போம். கேபிள் டிவி மற்றும் சி.டி. கடைகளில், உரிமம் இல்லாமல் புதுப்பட சி.டி.கள் வைத்திருந்தால் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

கசாப்பை மீட்க முயன்ற லஷ்கர் இ தொய்பா

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்ட அஜ்மல் கசாப்பை மீட்க பாகிஸ்தானிய லஷ்கர் இ தொய்பா சதியாளர்கள் முயன்றதாக அமெரிக்க கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லி, ராணா மீதான குற்றச்சாட்டுப் பதிவின்போது சிகாகோ கோர்ட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினரிடம் கசாப் சிக்கிக் கொண்டதை அறிந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினர், தாஜ், டிரைடன்ட் ஹோட்டலில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தவர்களை விடுவிப்பதாகவும், கசாப்பை மட்டும் விட்டு விடுமாறும் இந்தியத் தரப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்குள் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் இந்தியப் படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதி நுழைவு போராட்டம்

வேலூர் கோட்டையில் அமைந்துள்ள மசூதியில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த அனுமதிக்குமாறு பல முறை மத்திய மாநில மற்றும் தொல்பொருள் துறைக்கு முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கபட்டு வந்துள்ளன.

இதனை கண்டித்து வருகின்ற ஜனவரி 20 வேலூர் கோட்டை மசூதியில் நுழைவு போராட்டம் நடத்த உள்ளனர் இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.

உலக காதலர்களை மயக்கும் ஓசூர் ரோஜா

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 4 கோடி ரோஜா மலர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம், கடல் மட்டத்தை விட 1500 அடி உயரத்தில் உள்ளது.

எல்லா மாதங்களிலும் சீரான தட்பவெப்பம் நிலவுவதால் இங்கு காய்கறிகள், ரோஜா மலர்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3125 ஏக்கர் நிலப்பரப்பில் மலர் சாகுபடி நடக்கிறது.

இதில், 700 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை குடில் அமைத்து மலர் உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், ஹாலந்து, போலந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலே சியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்று மாட்டுப் பொங்கல்-நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் வழக்கம் போல பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்து குடும்பத்தினர் அதை சுவைத்தும், கரும்புகளைக் கடித்து ருசித்தும் பொங்கலைக் கொண்டாடினர்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகவும் மக்களால் கொண்டாடப்பட்டது. கோவில்களில் கூட்டம் அலை மோதியது. தை முதல் நாள் மிகவும் விசேஷமான தினம் என்பதால் கல்யாண நிச்சயதார்த்தங்கள் உள்ளிட்ட மங்கள காரியங்கலும் நேற்று முதல் தமிழகம் முழுவதும் களை கட்டியுள்ளன.

இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளை அலங்கரித்து, கொம்புகளில் வர்ணம் தீட்டி பொங்கலிட்டு அவற்றுக்கு படையல் இட்டு கிராமங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

திருமணத்துக்கு பின் டென்னிசுக்கு 'குட்-பை

திருமணத்துக்கு பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

சானியாவுக்கும் அவரது பால்ய கால நண்பர் சொஹ்ராப் மிர்சாவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் பேட்டியளித்த சானியா மிர்சா, ‘திருமணத்துக்கு பிறகு நான் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன், ஆனால் அதற்கு இன்னும் சில காலம் இருக்கிறது’ என்றார்.

திருமணம் எப்போது நடக்கும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார். அவரது தந்தையான இம்ரான் மிர்சா, 'திருமணத்திற்கு பிறகு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவது முழுக்க முழுக்க சானியாவின் முடிவு' என்றார்.

ரூ.1,900க்கு கம்ப்யூட்டர் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

கிராம மக்களுக்கு தவணை முறையில்,1900 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் திட்டத்தை பி.எஸ்.என்.எல்., துவக்கி உள்ளது. பி.எஸ்.என்.எல்., சேவை பற்றி தெரிந்து கொள்ளவும், சலுகை விலையில் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கி ஏராளமான திட்டங்கள் பற்றி அறியவும் சிவகாசியில் இரண்டு நாட்கள் 'மெகா மேளா' நடத்தப்பட்டது.

கிராம எக்ஸ்சேஞ்சுகள் மூலம் நோவாநெட் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. பராமரிப்பு தேவையில்லை, இரண்டாண்டு உத்தரவாதம், சிக்கலற்ற மல்டி மீடியா, வைரசிலிருந்து முழுமையான பாதுகாப்பு, வாழ்நாள் முழுவதற்கும் மென்பொருள் உத்தரவாதம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மானிட்டர், கீபோர்டு, மவுஸ் வாடிக்கையாளரிடம் இருக்கும்.


மெமரி கன்ட்ரோல் பி.எஸ்.என்.எல்., வசம் இருக்கும். ஐந்து ஆண்டு உத்தரவாதம் உள்ளது. இதன் விலை 1,900 ரூபாய். மாதாந்திர கட்டணங்கள் ரூ.274, ரூ.325 க்கு உள்ளன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு 2,550 ரூபாய் செலுத்தி புதிய கம்ப்யூட்டர் பெறலாம்.


மாதம் ரூ.300 வீதம், 60 மாதங்களுக்கும், ரூ.455 வீதம் 36 மாதங்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் திட்டங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு கிராமப்புற டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளை தொடர்பு கொள்ளலாம்.

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்… பதற வைக்கும் ஹைதி பேரிழப்பு!

போர்ட் -அவ்-பிரின்ஸ்: அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸில் நடந்த பெரும் நில நடுக்கத்தில் பல ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.23 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹைதியின் நேரம் மாலை 4.35 மணி. மக்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம் என்பதால், உயிரிழப்பு கற்பனை செய்ய முடியாத அளவு கடுமையாக உள்ளதென ஏபிஸி செய்தி தெரிவிக்கிறது.


7.3 ரிக்டர் அளவு பதிவான இந்த நில நடுக்கத்தில் தலை நகர் போர்ட் அவ் பிரின்ஸ் உருக்குலைந்து போயுள்ளது. அடுத்தடுத்து 13 முறை அங்கு பூமி குலுங்கியது.


ஹைதி நாட்டு அதிபர் மாளிகையும் இந்த அதிர்வுக்கு தப்பவில்லை. ஜனாதிபதி மாளிகையின் 60 சதவீத பகுதி நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவமாக ஹைதி ஜனாதிபதி ரேனி பிரிவல் காயமின்றி உயிர் தப்பினார்.


அமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைதியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்திற்கு பின்பு சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கியூபாவின் பராக்கோ நகரில் கடலோர பகுதியில் உள்ளவர்கள் கட்டிடங்களை காலி செய்து வெளியேற தொடங்கினர்.


போர்ட் அவ் பிரின்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ தொலைவை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.23க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தகவலில் கூறப்பட்டுள்ளது.


உலகின் மிக ஏழை நாடுகளுள் ஒன்றாக அறியப்படும் ஹைதியில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் நிதிஉதவிகளை வழங்க முன்வந்துள்ளன.


தற்போதைய சூழலில் எந்த விதமான உதவிகளை அளிக்கவும் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் உதவிகள் வழங்க முன்வந்துள்ளன.

இந்தியர்கள் நிலை?

ஹைத்தியில் ஐ.நா அமைதிக் குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.


ஹைத்தியில் இந்தியர் விவகாரங்களை கவனிக்கும் கியூபாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


இதற்கிடையே, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்காக ஹைத்திக்கு சென்றிருந்த 950 இலங்கை ராணுவப்படை வீரர்களை நிலநடுக்கத்திற்கு பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்தது.


பின்னர் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாயணக்கரா அறிவித்துள்ளார்.

ஈரான் அணு விஞ்ஞானியை கொன்ற யுஎஸ்-இஸ்ரேல்

ஈரான் அணு விஞ்ஞானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவது அபத்தமானது என்று வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

டெஹ்ரான் பல்கலைக் கழக பேராசிரியரும், ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானியுமான மசூத் அலி முஹம்மதி நேற்று ரிமோர் குண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

டெஹரான் அருகே இவரின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த, பயங்கர வெடிகுண்டு பொருத்திய மோட்டார் சைக்கிள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.

இதில் உடல் சிதறி விஞ்ஞானி பலியானார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. வாஷிங்டனில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து அமெரிக்க கவலை கொண்டிருப்பது உண்மை தான்.

அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் இது கவலை அளிக்கத்தக்க விஷயமே. அதற்காக அணுசக்தி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துடன் அமெரிக்காவை தொடர்புபடுத்துவது அபத்தமானது.

ஈரானில் உள்ள விஞ்ஞானியை கொல்ல அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாகக் கூறுவதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது' என கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தான் கொலை செய்ததாக ஈரான் மீண்டும் கூறியுள்ளது. இந்தக் கொலையைத் தொடர்ந்து ஈரானின் பல பகுதிகளிலும் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ரூ.1,600 கோடி முதலீட்டில் வீடியோகான் தொழிற்சாலை

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1,600 கோடி முதலீட்டில் வீடியோகான் நிறுவனம், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கிறது.

இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குவது குறித்து, தொழில் துறை அதிகாரிகளுடன் வீடியோகான் நிறுவனம் பேச்சு நடத்தியது. இதையடுத்து தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிப்காட் வளாகத்தில் 70 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வீடியோகான் நிறுவனம் தனது முதல்கட்ட உற்பத்தியை ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் என்.தூத், தலைமை செயலகத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, வீடியோகான் நிறுவனம் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும் என்று துணை முதல்வர் உறுதி அளித்தார்.


மேலும், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்குவது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.

ஹீரோ தேடும் நடிகை

தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோவை டி.வி. மூலம் தேர்வு செய்கிறார் பூஜா காந்தி.
‘கொக்கிÕ, ‘தலை எழுத்துÕ ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. இவர் கன்னட படமொன்றில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் புதுமுக ஹீரோவை பூஜாவே நேரடியாக தேர்வு செய்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இதுவரை நடித்தவை எல்லாமே கலைப் படங்கள்தான். இனி கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்துவேன். அந்த வரிசையில் நடிக்கும் படத்துக்குத்தான் எனக்கு ஜோடியாக நடிக்கும் புதுமுக நடிகரை டி.வி.மூலம் தேர்வு செய்கிறார்கள்.

கன்னடத்தில் நிறைய ஹீரோக்கள் இருந்தாலும் வெளிவராத திறமையாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களை வெளிக்கொண்டுவருவதுதான் இதன் நோக்கம். டிவி நிகழ்ச்சியில் சில புதுமுகங்கள் நடித்து காட்டுவார்கள். அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய உள்ளேன். இந்நிகழ்ச்சி கர்நாடகாவில் உள்ள 6 முக்கிய நகரங்களில் நடக்கிறது. முன்னணி திரையுலக கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். புதுமுகங்களுடன் நானும் மேடையில் நடிக்க உள்ளேன்.
இவ்வாறு பூஜா காந்தி கூறினார்.

இந்தியாவில் 5000 பேரை பணியமர்த்தும் ஐபிஎம்

சர்வதேச அளவில் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் இந்தியாவில் மட்டும் 5000 புதிய பணியாளர்களை அமர்த்துகிறது.

தனது பிபிஓ சேவைப் பிரிவை விரிவாக்கம் செய்வதன் மூலம் இத்தனை பேருக்கு புதிய வேலை வாய்ப்பு தரவிருக்கிறார்களாம்.

சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் குரைத்து வரும் நிலையில், இந்தியாவில் பொருளாதார நிலைமை சீராக உள்ளதால், பிபிஓ பணிகளை விரிவாக்குவதாக ஐபிஎம் அறிவித்துள்ளது.

தற்போது மும்பை, ஹைதராபாத், புனே, குர்கான் மற்றும் கொல்கத்தாவில் ஐபிஎம் பிபிஓ கிளைகள் உள்ளன. இந்த கிளைகளை மேலும் விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் யாரையும் வேலை நீக்கம் செய்யும் திட்டமும் இல்லை என ஐபிஎம் கூறியுள்ளது.