200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்… பதற வைக்கும் ஹைதி பேரிழப்பு!

போர்ட் -அவ்-பிரின்ஸ்: அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸில் நடந்த பெரும் நில நடுக்கத்தில் பல ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.23 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹைதியின் நேரம் மாலை 4.35 மணி. மக்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம் என்பதால், உயிரிழப்பு கற்பனை செய்ய முடியாத அளவு கடுமையாக உள்ளதென ஏபிஸி செய்தி தெரிவிக்கிறது.


7.3 ரிக்டர் அளவு பதிவான இந்த நில நடுக்கத்தில் தலை நகர் போர்ட் அவ் பிரின்ஸ் உருக்குலைந்து போயுள்ளது. அடுத்தடுத்து 13 முறை அங்கு பூமி குலுங்கியது.


ஹைதி நாட்டு அதிபர் மாளிகையும் இந்த அதிர்வுக்கு தப்பவில்லை. ஜனாதிபதி மாளிகையின் 60 சதவீத பகுதி நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவமாக ஹைதி ஜனாதிபதி ரேனி பிரிவல் காயமின்றி உயிர் தப்பினார்.


அமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைதியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்திற்கு பின்பு சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கியூபாவின் பராக்கோ நகரில் கடலோர பகுதியில் உள்ளவர்கள் கட்டிடங்களை காலி செய்து வெளியேற தொடங்கினர்.


போர்ட் அவ் பிரின்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ தொலைவை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.23க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தகவலில் கூறப்பட்டுள்ளது.


உலகின் மிக ஏழை நாடுகளுள் ஒன்றாக அறியப்படும் ஹைதியில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் நிதிஉதவிகளை வழங்க முன்வந்துள்ளன.


தற்போதைய சூழலில் எந்த விதமான உதவிகளை அளிக்கவும் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் உதவிகள் வழங்க முன்வந்துள்ளன.

இந்தியர்கள் நிலை?

ஹைத்தியில் ஐ.நா அமைதிக் குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.


ஹைத்தியில் இந்தியர் விவகாரங்களை கவனிக்கும் கியூபாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


இதற்கிடையே, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்காக ஹைத்திக்கு சென்றிருந்த 950 இலங்கை ராணுவப்படை வீரர்களை நிலநடுக்கத்திற்கு பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்தது.


பின்னர் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாயணக்கரா அறிவித்துள்ளார்.

0 comments: