டப்பிங் படம்... டாப் இடம்

கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளரும் இயக்குநருமான ராம நாராயணன் படங்களே தயாரிக்கவில்லை, இயக்கவுமில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ், ஏவிஎம் போன்ற ஜாம்பவான்களை விட அதிக லாபம் ஈட்டிய தயாரிப்பாளர் அவராகத்தான் இருப்பார்... காரணம் ஹாலிவுட் படங்கள்!.2009-ம் ஆண்டில் ராமநாராயணன் வாங்கி வெளியிட்ட திரைப் படங்களுள் முக்கியமானது அருந்ததீ. அனுஷ்கா முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்தப் படம் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டது. இந்தப் படம் பல கோடி லாபம் சம்பாதித்துக் கொடுத்தது ராம நாராயணனுக்கு.

இந்தப் படத்துக்கு போட்டியே இல்லாத நிலை இருந்தது ஒரு கட்டத்தில். சென்னை உட்லண்ஸில் இந்தப் படம் தொடர்ந்து 35 நாட்கள் அவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியது குறிப்பிடத்தக்கது. கிராமப் புறங்களிலும் அருந்ததிக்கு அட்டகாசமான வரவேற்பு இருந்தது.

இன்னொரு முக்கியமான டப்பிங் படம் '2012'. இந்தப் படம் குறித்து பண்டிதர்கள் தாறுமாறாக திட்டித் தீர்த்தாலும், தமிழகத்தில் முதல் வாரத்திலேயே ரூ 9 கோடியைக் குவித்தது 2012. ஒரிஜினல் தமிழ்ப் படங்கள் ஒரு வாரத்தைத் தாண்டவே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருந்தபோது, 2012 மட்டும் ஐம்பது நாட்களைத் தாண்டி ஜம்மென்று ஓடியது. அவ்வளவு ஏன்.. புறநகரில் ஒரு பெரிய காம்ப்ளெக்ஸில் புதிதாக ரிலீசான டாப் நடிகரின் படத்தைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இந்தப் படத்தைத்தான் திரையிட்டார்கள். கிட்டத்தட்ட 80 சதவிகித ரசிகர் கூட்டத்துடன் இரண்டு வாரங்களாக ஓடுகிறதாம் இந்தப் படம்.


இந்தியா முழுவதும் நான்கு வாரங்களில் 90 கோடியைத் தாண்டியுள்ளது இந்தப் படத்தின் வசூல். 2012-ன் தமிழக உரிமை வெறும் ரூ 35 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.

அப்படியெனில் லாபத்தின் சதவிகிதம் எவ்வளவு என்று கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது, இப்போது ஓடிக்கொண்டுள்ள அவதார். இதன் தமிழக உரிமையை சத்யம் மற்றும் ராம நாராயணன் இணைந்து வாங்கி வெளியிட்டார்கள். இதுவரை எந்தப் படத்திலும் கிடைக்காத லாபம் அவதார் மூலம் கிடைத்துள்ளது. இன்னும் கூட அவதாருக்கு சத்யம் திரையரங்கில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நகரில் மட்டும் முதல் வார இறுதியில் ஒரு கோடி வசூலித்தது அவதார். இந்தப் படத்தை வாங்கிய விலை இதை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் எக்ஸ்மேன் வல்வொரைன், மிரட்டல் அடி போன்ற படங்களும் வாங்கியவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் வசூல் சாதனை நிகழ்த்தின.

0 comments: