ஈரான் அணு விஞ்ஞானியை கொன்ற யுஎஸ்-இஸ்ரேல்

ஈரான் அணு விஞ்ஞானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவது அபத்தமானது என்று வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

டெஹ்ரான் பல்கலைக் கழக பேராசிரியரும், ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானியுமான மசூத் அலி முஹம்மதி நேற்று ரிமோர் குண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

டெஹரான் அருகே இவரின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த, பயங்கர வெடிகுண்டு பொருத்திய மோட்டார் சைக்கிள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.

இதில் உடல் சிதறி விஞ்ஞானி பலியானார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. வாஷிங்டனில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து அமெரிக்க கவலை கொண்டிருப்பது உண்மை தான்.

அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் இது கவலை அளிக்கத்தக்க விஷயமே. அதற்காக அணுசக்தி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துடன் அமெரிக்காவை தொடர்புபடுத்துவது அபத்தமானது.

ஈரானில் உள்ள விஞ்ஞானியை கொல்ல அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாகக் கூறுவதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது' என கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தான் கொலை செய்ததாக ஈரான் மீண்டும் கூறியுள்ளது. இந்தக் கொலையைத் தொடர்ந்து ஈரானின் பல பகுதிகளிலும் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

0 comments: