இஸ்ரேலிய படையின் படுகொலைகள் .

2009 ஆம் ஆண்டு 473 குழந்தைகள், 126 பெண்கள் உட்பட 1594 பலஸ்தீனர்களை

காஸா மீதான இஸ்ரேலிய யுத்தத்தில் உயிருடன் எரிந்துபோன பலஸ்தீன் குழந்தைகள்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கொன்று குவித்துள்ளது என Tadamun எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (30.12.2009) மேற்படி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1460 பேர் காஸா மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும், ஏனைய 134 பேரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்குக் கரை, காஸா பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதும் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்துவரும் அரபு- இஸ்ரேலிய மோதல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் மிக மோசமான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள மாதமாகும். அந்த மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் என்ற வீதத்தில் 1076 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மனித உரிமைகளுக்கான பலஸ்தீன் மையம் குறிப்பிடுகையில், கடந்த வாரம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கைகளின்போது ஆறு பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒரு பெண்மணி, ஒரு குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை மேற்படி பலஸ்தீன் மையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கடந்த ஒருவார காலத்துக்குள் மட்டும் மேற்குக் கரையில் 28, காஸாவில் 2 என அடுத்தடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, 26 பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் அனைத்து எல்லைக் கடவைகளையும் மூடிவைத்துள்ளதோடு, ஒருசிலவற்றைத் திறந்தாலும் கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் செல்லும் பலஸ்தீன் மீனவர்களை விரட்டிவிடுவதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

0 comments: