செப். 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும்.


இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வீடு வீடாக நடத்தப்பட்டதால் ஜனவரியில் வெளியிடப்பட வேண்டிய வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1-ம் தேதி தான் வெளியிடப்பட்டது.


மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும் நீக்கவும் அவகாசம் தரப்பட்டது. ஜூலை 1-ந்தேதி முதல் 16-ந்தேதிவரை இந்த பணிகள் நடந்தன.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிகம் பேர் மனு செய்ததால் இறுதி பட்டியல் தயாரிக்க கால அவகாசம் தேவைப்பட்டது.


தற்போது புதிதாக சேர்க்க வந்த வாக்காளர் மனுக்கள் மீது வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.


இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், வருகிற 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.


இந்த பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர்கள்தான் தேர்தலில் ஓட்டு போட முடியும். இனி 2011 ஜனவரியில்தான் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெறும் என்றார்.

0 comments: