மின்னலுக்கு 2 பேர் பலி

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மின்னல் தாக்கி 2 பேர் இறந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிக்கு ஒட்டியுள்ள இலங்கை, தமிழ்நாடு, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இதனால், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியில் அனேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஓரிரு கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள்...

நேற்று மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

நேற்று 2-வது நாளாகவும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

நேற்று மதியம் 1.45 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்தது. பின்னர் லேசானதூறலுடன் காணப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு 17 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இது நேற்று காலை 12 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 3 மணியளவில் 8 ஆயிரம் கனஅடியாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.06 அடியாக இருந்தது.

திருச்சியில் சூறாவளி - மழை...

திருச்சியில் நேற்று பிற்பகல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருச்சியை அடுத்த நத்தமாடிபட்டி பகுதியிலும் நேற்று மதியம் இடி மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது நத்தமாடிபட்டி மேலத்தெருவை சேர்ந்த தாமஸ் (40) என்ற விவசாயி தனது வயலில் நடந்து வந்த நாற்று நடவு பணிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். திடீர் என மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. அரியலூரில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

மரத்தடியில் நின்றவர் பலி...

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (53). நேற்று பிற்பகல் 3 மணிக்கு கே.ஆலங்குளத்துக்கு சென்றார். அங்கு ரேஷன் கடை அருகே உள்ள மரத்தடியில் நின்றபோது மின்னல் தாக்கியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் ஆகிய இடங்களில் நேற்று காலை லேசான மழை பெய்தது. அதன்பின்னர் விட்டு, விட்டு மழை தூறிக் கொண்டே இருந்தது.

வால்பாறை பகுதியில் நேற்று காலை முதலே கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குமரியில் விடிய விடிய மழை...

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்தது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், அருமனை, களியக்காவிளை, கொல்லங்கோடு, கருங்கல் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. பெருஞ்சாணி அணை மூடப்பட்டது.

அணைகளில் நீர்மட்டம் உயர்வு:

நெல்லை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

மழை காரணமாக மாவட்டத்தில் கிணறுகள், கால்வாய்கள், அணைகளில் நீர் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரி்த்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணை 64.90 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 370 கனஅடி தண்ணீர் வருகிறது. 1398 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மணிமுத்தாறு அணையில் 57.70 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

சேர்வலாறு அணையில் 63.15 அடி நீர்மட்டம் உள்ளது. தொடர்ந்து அணைபகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணைகளில் மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: