டான்ஸ் ஆடச் சொல்லி ராக்கிங் - 3 மாணவர்கள் கைது!

திருச்சி அரசு பிசியோதெரஃபி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை டான்ஸ் ஆடச் சொல்லி, அடித்து உதைத்து ராகிங் செய்த 3சீனியர் மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி பெரியமிளகுபாறையில் அரசு பிசியோதெரபி கல்லூரி உள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த கல்லூரியில் எலும்பு மற்றும் முடநீக்கியல் மருத்துவம் தொடர்பாக சுமார் 200 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இது 4 ஆண்டு படிப்பு ஆகும்.

இங்குள்ள விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சங்கர் (17). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி ஆகும். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மாணவர்கள் தன்னை சினிமா பாட்டு பாடி நடனம் ஆடச்சொல்லி ராகிங் செய்ததாகவும் தான் மறுத்ததால் அவர்கள் தன்னை அடித்ததாகவும் தனது தந்தை பழனிச்சாமிக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பழனிச்சாமி திருச்சிக்கு வந்து, கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி டீன் பாலசுப்பிரமணியனிடம் புகார் செய்தார். உடனே இதுபற்றி விசாரணை நடத்த டீன் உத்தரவிட்டார்.

மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் செல்வபாண்டியன், டாக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

இதில் முதலாமாண்டு மாணவர்களான சங்கர், கார்த்திக் , சிவனாண்டி ஆகியோரை நடனம் ஆடச் சொல்லி துன்புறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார் செய்தது. கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணைக்குப் பின்னர் முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை ராகிங் செய்ததாக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பிரகாஷ் (19), தர்மராஜ் (19), நான்காம் ஆண்டு மாணவர் அஜின் (20) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பந்தப்பட்ட 3 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு முடியும் வரை இவர்களால் தேர்வு எழுத முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தி்ல் கோவை பொறியியல் கல்லூரியில் மாணவர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உடனடியாக அனைவரும் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: