டெல்லி காமன்வெல்த் போட்டி

டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்கான ஜோதியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இங்கிலாந்து ராணி எலிசபெத்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இதற்கான நிகழ்ச்சி லண்டனில் கோலாகலமாக நடந்தது. அப்போது காமன்வெல்த் போட்டிக்கான ஜோதியை கான்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் மைக்கேல் பென்னல், ராணி எலிசபெத்திடம் கொடுத்தார். அதை வாங்கிய எலிசபெத், பிரதீபா பாட்டீலிடம் வழங்கினார். அவர் அதைப் பெற்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லிடம் ஒப்படைத்தார். அவர் அதை, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் கொடுத்தார்.

கல்மாடி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவிடம் கொடுத்தார். இதையடுத்து ஜோதி ஓட்டம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ், இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மான்டி பனீசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக ஜோதி ஓட்டம் காமன்வெல்த் நாடுகளில் நடைபெறுவது வழக்கம். காமன்வெல்த் போட்டிகள் தொடங்கிய (முதல் போட்டி கார்டிப் நகரில் நடந்தது) நாள் முதலே இது நடைமுறையில் இருந்து வருகிறது.

காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாட்டிடம் ஜோதியை இங்கிலாந்து ராணி வழங்குவார்.

முன்னதாக பக்கிங்காம் அரண்மனையில் நடந்த கலை நிகழ்ச்சியில் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும், விளையாட்டு ப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி ராணி எலிசபெத்தின் விடுத்த செய்தி இடம் பெற்ற மடல், 18 காரட் தங்கத்தால் ஆன பனை இலை வடிவில் குடியரசுத் தலைவரிடம் தரப்பட்டது.

காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாட்டின் தலைவரிடம் இங்கிலாந்து ராணி போட்டி ஜோதியை ஒப்படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காமன்வெல்த் போட்டி...

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது காமன்வெல்த் போட்டி.

2010ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை
டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 71 நாடுகள் இதில் கலந்து கொள்கின்றன.

காமன்வெல்த் போட்டி ஜோதி ஓட்டம், இந்த 71 நாடுகளில் தரை, வான் மற்றும் நீர் வழியாக 240 நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கும் ஜோதி ஓட்டம் டெல்லியில் நிறைவடைகிறது.

இந்தியாவில், 28 மாநிலங்களில் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ஓட்டம் நடக்கிறது. டெல்லியில் அக். 3ம் தேதி நடக்கவுள்ள பிரம்மாண்டமான தொடக்க நிகழ்ச்சியின்போது நேரு ஸ்டேடியத்தில் காமன்வெல்த் சுடர் ஏற்றப்படும்.

0 comments: