நாகையில் கடும் எதிர்ப்பு

நாகை அருகே அனல் மின் நிலையம் அமைவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரைக் கண்டித்து கோஷம் போட்டதால் பெரும் பரபரப்பு எழுந்தது. நாகை அடுத்த கீவளூர் வட்டத்தில் காரப்பிடாகை, விழுந்தமாவடி, கீழப்பிடாகை கிராமங்களில் நிலக்கரியைப் பயன்படுத்தி, "டிரைடம் போர்ட் அண்ட் பவர் கம்பெனி' - "நாகப்பட்டினம் எனர்ஜி பிரைவேட் லிட்.,' கம்பெனி சார்பில் 1,820 மெகா வாட் மற்றும் 150 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க, 9,830 கோடி ரூபாய் மதிப்பில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், காரப்பிடாகையில் நேற்று நடந்தது. காரப்பிடாகை, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளியைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனல் மின் நிலைய அதிகாரிகள் இத்திட்டத்தைப் பற்றி விளக்கி கூறியவுடன், பொதுமக்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அவர்கள் பேசியதாவது: கடைமடையின் வடிகால் பகுதியில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், வடிகால்கள் அடைக்கப்பட்டு, வரும் காலங்களில் பெரும் சேதத்தையும், கடலோரக் கிராமங்களுக்கு அரணாக இருக்கும் வனப்பகுதிகளை அழிப்பதன் மூலம், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
தமிழகத்தில் தரிசு நிலங்கள் அதிகமாக இருக்க, நாகை மாவட்டத்தில் மட்டும் ஏழு பவர் பிளான்ட்களை அமைக்க அரசு தீவிரம் காட்டுவதால், கடலோரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், மீனவர்களும் அகதிகளாக்கப்பட்டு, இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களை, சொந்த பூமியில் வாழ விடுங்கள்; எங்கள் உயிர் உள்ளவரை, அனல் மின் நிலையம் இப்பகுதிக்கு வர அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். "உங்கள் கருத்துக்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும்' எனக் கூறி அதிகாரிகள் வெளியேறியதால், ஆத்திரமடைந்த மக்கள், கலெக்டரைக் கண்டித்து கடுமையாக கூச்சல் போட்டனர். பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், அனைவரையும் வெளியேற்றினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: