தமிழ் இணையதள மாநாடு

கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் சேர்த்து தமிழ இணையதள மாநாட்டை நடத்த முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனியின் கொலோன் நகரில் அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை 8வது தமிழ் இணையதள மாநாடு நடந்தது. இதில் மு. அனந்தகிருஷ்ணன் பங்கேற்றார்.

கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பண்பாடு, வரலாறு, இலக்கியத் துறை மற்றும் தமிழ் துறை (ஐ.ஐ.டி.எஸ்.) சார்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து , ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா , கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் மாநாட்டில் பங்கேற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு அரசு குழுவின் தலைவருமான ஆனந்தகிருஷ்ணன், கொலோன் பல்கலைக்கழகத்தின் தத்துவ இயல் துறை முதல்வர் பொன்கார்ட்ஸ் ஆகியோர் மாநாட்டுக்கு முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் அனந்தகிருஷ்ணன் பேசுகையில்,

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றில் தமிழ் மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான திட்டங்கள் 100-க்கும் குறைவாகவே உள்ளன. எனவே, தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பான புதுமைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் 2010-ல் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுடன், தமிழ் இணையதள மாநாடு 2010-ஐ நடத்த வாருங்கள். அதற்கான முழு வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தரும் என்று அழைப்பு விடுத்தார்.


0 comments: