ஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வரும் 2010-11 கல்வியாண்டில் இடமாறுதல் பெற விரும்பினால் விண்ணப்பங்களை இப்போது அளிக்க வேண்டும்.

இடமாறுதல் கேட்டு ஆசிரியர்கள் அளிக்கும் விண்ணங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், இம்மாதம் 29ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.

இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதற்கான விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். பள்ளி தலைமையாசிரியர்கள், சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை வழங்கி ஒப்புதல் பெறவேண்டும். பின்னர் இவற்றை சரிபார்த்து வரும் 30ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

மேலும், வெளிமாவட்ட இடமாறுதல் கோரும் விண்ணப்பத்தினையும், ஒரு ஆசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும் அவற்றையும் அனுப்பலாம். கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை தொகுத்து மே 4ஆம் தேதிக்குள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என்று பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

0 comments: