ராமேஸ்வரத்தில் மீன்பிடி தடை இன்று முதல் அமல்

தமிழக அரசின் மீன்பிடி தடையை முன்னிட்டு ,ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(ஏப்.14) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தமிழக கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஏப்.15 முதல் மே 31 வரை ஒன்றரை மாத காலம் விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்து ,


ஆண்டு தோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகுகள் ,கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்படும் நிலையில், ராமேஸ்வரத்தில் மட்டும் இன்று முதல் இத்தடை அமல்படுத்தப்படுகிறது. இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் தாக்குதல் பிரச்னை நடந்தபோதும், வழக்கம் போல் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ,நேற்று அதிகாலையில் கரை திரும்பினர்.


தடைக்கு முன் இறுதிக்கடல் நாள் என்பதால், மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் அனைவரும், நேற்று காலையில் கரை திரும்பியதும், படகிலிருந்து பிடித்து வந்த மீன்களை அள்ளியதும்,மீன்பிடி சாதனங்களை இறக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர். படகிலிருந்து இறக்கிய வலை,கயிறு, போட்பலகை போன்றவற்றை டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் ஏற்றிய மீனவர்கள் ,தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.


ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இன்று முதல் மீன்பிடிதடை அமலுக்கு வந்ததால், மீன்துறை அலுவலகத்தில் படகுகளுக்கான டீசல்டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஏராளமான படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூரை சேர்ந்த மீனவ கூலிகள் நேற்று மாலையே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.


மீன்துறை உதவி இயக்குனர் இளம்வழுதி கூறுகையில்,'' தமிழகம் முழுவதும் ஏப்.15 ல் மீன்பிடி தடை அமலுக்கு வந்தாலும், ராமேஸ்வரத்தில் ஏப்.14 முதலே மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை ,'' என்றார்.

0 comments: