எதிர்க்கட்சிகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய 'பந்த்'க்கு மக்களிடம் ஆதரவு இல்லை. கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் சகஜநிலை நிலவியது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் நடத்திய 'பந்த்' கிழிந்து போனது.


பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை, மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்த்தியது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, இடதுசாரி கட்சிகள் தலைமையில், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 13 கட்சிகள், பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, நேற்று நாடு தழுவிய 'பந்த்'க்கு அழைப்பு விடுத்திருந்தன. நேற்று காலை 6 மணிக்கு 'பந்த்' துவங்கியது. இடதுசாரி கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் பந்த் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மாநிலங்களில் பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடங்கியது.கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.


கோல்கட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வீதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மாநிலங்களில் ஆட்டோ, டாக்சி போன்றவையும் இயங்கவில்லை.'பந்த்' காரணமாக மேற்கு வங்கத்தில் மட்டும் 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக, இந்திய வர்த்தக கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஜெயந்த் ராய் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, மாவோயிஸ்ட்களும் நேற்று 'பந்த்' நடத்தினர். மிட்னாபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளங்களை இவர்கள் குண்டு வைத்து தகர்த்தனர்.


ஓரளவு பாதிப்பு :


உ.பி., ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 'பந்த்'திற்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. இருந்தாலும், முழு பாதிப்பு ஏற்படவில்லை. உ.பி.,யில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், தனது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். உ.பி.,யில் நடந்த போராட்டத்தின்போது, மூன்று பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.பீகாரில் 'பந்த்'திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட லோக்ஜன சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உட்பட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவிலும், தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தியதால், ஒரு சில கடைகள் மூடப்பட்டு இருந்தன.


தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, இமாச்சல், ராஜஸ்தான், டில்லி, ம.பி., காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் 'பந்த்' திற்கு மக்களிடையே சுத்தமாக ஆதரவு இல்லை. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை. விமான சேவையும் பாதிக்கப்படவில்லை. ஆட்டோ, டாக்சிகள் வழக்கம் போல் இயங்கின. ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் நேற்று அழைப்பு விடுத்திருந்த 'பந்த்' பெரும்பாலான மாநிலங்களில் கிழிந்து போனது.


தலைவர்கள் 'மிஸ்சிங்!' :


விலைவாசி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., - கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், 'பந்த்' அறிவித்திருந்தன. மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கட்சியினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரயில், பஸ் மறியல் போராட்டங்களை நடத்தினர். ஆனால், எப்போதும் போராட்டங்களில் தலைமையேற்று நடத்தும் கட்சியின் மாநிலச் செயலர்கள், இந்த முறை பங்கேற்கவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


'பந்த்'தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தினர் :


தமிழகத்தில், 'பந்த்'திற்கு அழைப்பு விடுத்த முக்கியக் கட்சி அ.தி.மு.க., தான். ஆனால், சென்னையில் அக்கட்சியின் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டுமே வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். அத்தொழிற்சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்தனர். பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றியதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

0 comments: