வேதாரண்யத்தில் விரைவில் அரசு கல்லூரி

வேதாரண்யத்தில் விரைவில் கல்லூரி அமைக்க ஆவன செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் தெரிவித்தார்.


வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளப்பள்ளம், கள்ளிமேடு, நாலுவேதபதி ஆகிய ஊராட்சிகளில் உள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து இந்த ஊராட்சிகளில் நடந்த விழாவிற்கு கலெக்டர் (பொ) அண்ணாதுரை தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., வேதரத்தினம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் யூசுப், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தொடக்கி வைத்து அமைச்சர்

மதிவாணன் பேசியதாவது:


நாலுவேதபதி ஊராட்சியில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆஸ்பத்திரி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள சித்த மருத்துவமனை சீரமைத்து செயல்படுத்தப்படும். 234 தொகுதிகளிலும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் வேதாரண்யம் தொகுதிக்கு 4 பள்ளிகளை எம்.எல்.ஏ., வேதரத்தினம் தனது முயற்சியால் பெற்றுள்ளார். மேலும் வேதாரண்யத்தில் அரசு கல்லூரி அமைக்க அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு நானும் உறுதுணையாக இருந்து அவருடன் சேர்ந்து தமிழக முதல்வர், துணை முதல்வர், கல்வித்துறை அமைச்சருடன் பேசி அடுத்த நிதியாண்டிற்குள் வேதாரண்யத்தில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எம்.எல்.ஏ., வேதரத்தினம் பேசுகையில், வேதாரண்யம் தொகுதி தன்னிறைவு பெற்று வருகிறது. வேதாரண்யத்தில் அரசு கல்லூரி தொடங்குவது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.


விரைவில் வேதாரண்யம் தொகுதியில் நிச்சயம் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் என்றார். விழாவில் பயனாளிகளுக்கு அரசின் கலைஞர் காப்பீட்டுத்திட்ட அட்டைகளையும், கார்த்திகை கிழங்கு, மூலிகை பயிர் சாகுபடியாளர்களுக்கு மான்யத் தொகைகளையும் அமைச்சர் வழங்கினார். தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் அமிர்தலிங்கம், தாசில்தார் கருணாகரன், ஒன்றிய ஆணையர்கள் மகேந்திரன், குணசேகரன், ஊராட்சித் தலைவர்கள் காமராசு, ஜெயா சுப்பிரமணியன், சண்முகராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: