புதுப்பேட்டையில் மோட்டார் உதிரிபாக கடைகள் சிங்கபெருமாள் கோவிலுக்கு மாற்றம்

சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை சார்பாக பாசனம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை முதலமைச்சர் கருணாநிதி தாக்கல் செய்தார்.


அதில், ’’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரம் மொத்தம் 853 டி.எம்.சி. அண்டை மாநிலங்களில் இருந்து 261 டி.எம்.சி. தண்ணீர் வருகிறது. தமிழ்நாட்டில 78 பெரிய அணைகளும், 7 சிறிய அணைகளும் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 233.20 டி.எம்.சி.

மாநிலத்தின் மொத்த பாசன பரப்பளவு சுமார் 33.93 லட்சம் ஹெக்டேர். வேளாண்மை துறை மூலம் நெல் மற்றும் உணவு பயிர் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கூவம் ஆற்றை சீரமைக்க, சென்னை நதிநீர் சீரமைப்பு அறக் கட்டளைக்கும், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துக்கும் இடையே கடந்த மார்ச் 18-ந்தேதி முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியின் முதல் கட்டமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள கூவம் கரையை ஆக்கிரமித்துள்ள ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரிபாகங்களின் சிறு தொழிற்சாலைகளை சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள ஆம்பூருக்கு மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கூவம் ஆறு மற்றும் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணி 2 மாதத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமித்துள்ளோருக்கு மாற்று இட வசதி வழங்கப்படும்.

இதன் முதல் கட்டமாக புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் இருந்த சுமார் 1150 ஆக்கிரமிப்புகள் கடந்த அக்டோபர் மாதம் அகற்றப்பட்டு மாற்று இடம் தரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் தடுக்க அழகிய பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை ஏற்படுத்துவதற்கு 30.4.2010 வரை கால அவகாசம் அளித்து கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் நலன் கருதி அரசு தொடர்ந்து தன் வாதங்களை அரசியல் சாசன சட்ட அமர்வு முன்பு வைக்கும். இதுபோல பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு, நெய்யாறு-இடகரை பாசன திட்டம், பம்பா அச்சன் கோவில்- வைப்பாறு இணைப்பு, பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்ற தமிழக அரசு கேரள அரசுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் கணேசபுரம் என்ற இடத்தில் நீர்தேக்கம் கட்டப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

2009-2010 நிதியாண்டில் மார்ச் வரை தமிழ்நாட்டில் 130 மணல் குவாரிகள் மூலம் 142.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.840.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு புதிய சட்டமன்ற வளாகம் 425.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதன் மேற்கூரையாக 100 அடி உயர கோபுரம் (டூம்) அமைக்கப்படுகிறது. தேர் வடிவமைப்பு கொண்ட இதன் எடை 800 டன். 12 மீட்டர் விட்டம் கொண்ட இதில் அமைக்கப்படும் சிறப்பு கண்ணாடி மூலம் சட்டசபை கூடத்துக்குள் இயற்கை ஒளி பரவும். இதன்மூலம் மின் ஆற்றலின் செயல்பாடு 20 சதவீதம் குறையும்.

இந்த கட்டிடத்துக்கு தங்க தர சான்று கிடைத் துள்ளது. தலைமை செயலக துறைகளுக்கான 7 கட்டிடங் கள் ரூ.279.56 கோடி செலவில் கட்டப்படுகிறது. கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் ரூ.171.78 கோடி செலவில் நவீன முறையில் கட்டப்படுகிறது.

இதை ஒரே நேரத்தில் 1250 பேர் பயன்படுத்தலாம். 1280 பேர் அமரக்கூடிய அரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. சென்னையில் பல் மருத்துவ மனைக்கு ரூ.13.66 கோடியில் புதிய கூடுதல் கட்டிடம், சென்னை எழும்பூர் மகப்பேறு குழந்தைகள் மருத்துவ மனையில் ரூ.56.32 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் ரூ.16.65 கோடி செலவில் குழந்தை நல சிறப்பு கட்டிடம்,

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.41.20 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை நந்தனம் வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.70.20 கோடி செலவில் புதிய கட்டிடம் இதுபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.1324.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.797.14 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது’’கூறப்பட்டுள்ளது.

0 comments: