தமிழகத்தில் சிகிச்சை பெற பிரபாகரன் தாய்க்கு நிபந்தனை

''எந்த அரசியல் கட்சியினருடனும், குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களுடன், எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில், தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வர, பிரபாகரனின் தாய் பார்வதிக்கு விசா வழங்க மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:கடந்த ஏப்ரல் 16ம் தேதி இரவு மலேசியாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாய் பார்வதி, சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார். இது குறித்து சட்டசபையில் நடந்த விவாதத்தில், 'பார்வதி, தமிழகத்தில் மருத்துவ வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது' என்று தெரிவித்தேன். ஏப்ரல் 30ம் தேதி மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட, பார்வதி பெருவிரல் ரேகை பதித்த கடிதத்தில், தன் சிகிச்சைக்காக கோலாலம்பூரிலிருந்து, திருச்சிக்கு விமானத்தில் வர மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்து தரும்படி, எனக்கொரு கோரிக்கை வந்தது.அவர் கேட்டுக் கொண்டபடி, தமிழகத்திற்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மத்திய அரசு ஆராய்ந்து அனுமதியளிக்கலாம் என பரிந்துரைக் கடிதம் மத்திய உள்துறை செயலருக்கு மே 1ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.மத்திய அரசு மே 7ம் தேதி மலேசியாவில் உள்ள இந்திய தூதருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் எனக்கு நேற்று வந்தது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள்:பார்வதி தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். மருத்துவமனையில் தான் தங்க வேண்டும், வேறெங்கும் அவர் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் விரும்பினால், அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். எந்த அரசியல் கட்சியினருடனும் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடன், எந்த தொடர்பும் அவர் வைத்துக் கொள்ளக் கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே, தொடர்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் பார்வதியை தொடர்பு கொண்டு ஆறு மாத காலத்திற்கு, 'விசா' வழங்கலாம் என்றும், சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குக்கு எவ்விதமான குந்தகமும் இல்லாமல், இந்த ஆணை மத்திய அரசால் பிறக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், மலேசியாவில் உள்ள அவரின் முடிவிற்கு ஏற்ப தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

0 comments: