தமிழக கடலோரப்பகுதிகளில் கெடுபிடி


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பீதி காரணமாக சென்னை, மெரீனா கடற்கரையில் போலீசார் மக்களை அப்புறப்படுத்தினர். இதே போல, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. மாலையில் சுனாமி அச்சம் குறைந்து நிம்மதி ஏற்பட்டது.


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், அசே மாகாணத்தின் கடலோர பகுதியில், மெவ்லாபோ என்ற இடத்திலிருந்து 66 கி.மீ., தொலைவில், நேற்று காலை 11.29 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 என, பதிவானது. இதனால், சுனாமி தாக்கலாம் என்று சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் எச்சரித்தன. இந்தோனேசியாவை தொடர்ந்து இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் சுனாமி முன்னெச்சரிக்கை பகல் பொழுதில் விடுக்கப்பட்டது. சென்னையில் நேற்று பிற்பகல் 1:45 மணியளவில் சுனாமி குறித்த எச்சரிக்கை தகவல் வந்தது. 'மாலை 3 மணியளவில் சுனாமி தாக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டதால் போலீசார் உஷாரடைந்தனர். விரைந்து செயல்பட்டு மெரீனா, பெசன்ட்நகர், சாந்தோம் பகுதிக்கு வாகனங்களில் சென்று, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கடற்கரையை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர்.


போலீசாரின் நடவடிக்கையால் அனைவரும் வந்தவழியே திரும்பிச் சென்றனர். கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு கடைகளும் அகற்றப்பட்டன. கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், கடற்கரையை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் மெரீனா கடற்கரை, ஆள் ஆரவமற்ற பகுதியாக வெறிச்சோடியது. மெரீனாவின் சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டதுடன், வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. பொழுதுபோக்க மெரீனா கடற்கரை வந்த பொதுமக்கள் அனைவரும் காமராஜர் சாலையில் இருந்து கடலை பார்த்தபடி சென்றனர். காமராஜர் சாலை முழுவதும் பொதுமக்கள் கூடி நின்று அலைகள் ஆர்ப்பரிப்பதைக் கண்டனர். ஆனால், மாலையில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.


சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இதுபற்றி கூறும் போது, ''சென்னையில் 3 மணிக்கு சுனாமி தாக்கும் என, கூறப்பட்டது. 5 மணிக்கு மேலாகியும் பிரச்னை ஏதும் இல்லாததால், பொதுமக்களை அனுமதிக்கும் படி கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்களை கடலின் அருகில் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது,'' என்றார்.


சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் இருந்தும், விவேகானந்தர் பாறை பகுதியில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும், அந்தமான் நிகோபர் தீவுகள் நிர்வாகத்தையும் மத்திய அரசு உஷார்படுத்தியது.


இதற்கிடையில், 'இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்திய கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் எதுவும் இல்லை. மக்கள் பீதி அடைய வேண்டாம். இருந்தாலும், முன்னெச்சரிக்கை கருதி கடலோர பகுதிகளில் உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, சம்பந்தபட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்தது.ஆறு ஆண்டுகளுக்கு முன் பெரிய அழிவை ஏற்படுத்திய சுனாமி அனுபவத்திற்குப் பின், கடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்றும் கூறப்பட்டது.


ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் பயமின்றி புனித நீராடினர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் கடற்கரையோரம் குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்தார். விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே கடலுக்கு செல்லாத நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் பெருக்கெடுத்து நிலப்பகுதிக்குள் வந்ததால், தனுஷ்கோடிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களில் உடனடியாக ராமேஸ்வரம் திரும்பினர். முகுந்தராயர் சத்திரம் செக்-போஸ்டில் போலீசார், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கடலில் இறங்க விடாமல் எச்சரிக்கை செய்து கண்காணித்தனர். ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் போலீசார் எச்சரிக்கை செய்த போதும் பக்தர்கள் எவ்வித பயமுமின்றி கடலில் இறங்கி புனித நீராடினர்.


சில்வர் பீச் வெறிச்சோடியது: கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 54 கடலோர கிராமங்களிலும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சுனாமி எச்சரிக்கை அறிவித்து மக்களை உஷார்படுத்தினர். ஏற்கனவே என்.ஜி.ஓ., மூலம் அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி கருவிகளைப் பயன்படுத்தி, கிராம மக்களிடையே ஊராட்சி உதவியாளர்கள் நேற்று கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.இந்த தகவல் காட்டுத்தீ போல் அனைத்துப் பகுதிக்கும் பரவியது. ஆற்றில், கடலில் மீன் பிடித்தவர்கள் உடனடியாக மொபைல் போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரைக்குத் திரும்பினர். ஆற்றங்கரை, கடற்கரையோரம் நிலத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வலியுறுத்தப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், தற்போது கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் கடற்கரைக்கு மதியம் முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். பஜ்ஜி, சிப்ஸ் போன்ற தள்ளு வண்டி கடைகளும் அதிக அளவில் இருந்தன. மக்கள் கூட்டத்தையும், கடைகளையும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரும் போராடி அப்புறப்படுத்தினர்.மக்கள், சில்வர் பீச்சிற்கு வருவதை தவிர்த்திடும் பொருட்டு கடற்கரைக்கு வரும் சாலைகளை எஸ்.பி., பங்களா அருகே தடை செய்யப்பட்டு மக்களை அங்கேயே திருப்பி அனுப்பினர். இதனால், ஞாயிற்றுக் கிழமையில் மக்கள் கூட்டம் அலைமோதும், 'சில்வர் பீச்' வெறிச்சோடியது.


சகஜ நிலையில் நாகை மீனவர்கள்: சுனாமி பீதியால் வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் நாகை மக்களிடம் மொபைலில் தொடர்பு கொண்டு எச்சரித்த வண்ணம் இருந்தனர். இருப்பினும், நாகை கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வழக்கம் போல் சகஜ நிலையில் தங்கள் பணிகளை கவனித்தனர். நேற்று விடுமுறை என்பதால் வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பூம்புகார் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீசார் அவர்களை கடற்கரை பகுதிகளில் இருந்து வெளியேற்றினர்.


கன்னியாகுமரியில் சுனாமி பீதி ஏற்பட்டதை தொடர்ந்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விவேகானந்தர் பாறையில் நின்று கொண்டிருந்த பயணிகள் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கடற்கரை கடைகள் அடைக்கப்பட்டன. கடற்கரையில் பயணிகள் நிற்க வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாலை 5 மணிக்கு பின், இயல்புநிலை திரும்பியது. அதன்பின், சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு சென்றனர். சுனாமி எச்சரிக்கையால் சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், போலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். படகு சவாரி சென்றவர்களும் மோட்டார் படகுகளில் திரும்ப அழைத்து வரப்பட்டனர். கடல் மற்றும் ஆற்றுப் பகுதிக்கு சென்றவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக கரையேற்றப்பட்டனர்.


குறிப்பாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்தவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்டனர்.கோடை விடுமுறை காலமாக இருப்பதால் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வரை வருகின்றனர். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக வந்திருந்தனர். பிச்சாவரம் காடுகளை சுற்றிப் பார்க்க படகு சவாரிக்கு மாலை 4 மணி வரை புக்கிங் செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.


மரக்காணம் பகுதியில் சுனாமி பீதி 19 மீனவ கிராம மக்கள் வெளியேறினர் : சுனாமி பீதியால் மரக்காணம் பகுதியில் கடலோரத்தில் உள்ள 19 மீனவ கிராம மக்கள், மீன்பிடி உபகரணங்களுடன் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரையையொட்டி உள்ள மீனவ கிராமங்களான முட்டுக்காடு, முட்டுக்காடு குப்பம், எக்கியார்குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.கடற்கரையோரம் யாரும் இருக்கக் கூடாது, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் கடந்து மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என, அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால், மீனவ கிராம மக்கள் தங்களின் படகுகள், கட்டுமரங்கள், மீன்பிடி வலை, இன்ஜின் உள்ளிட்ட பொருட்களை மேடான பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.கடற்கரை அருகில் வசித்த மீனவர்கள், வீட்டை காலி செய்து மேடான பகுதியில் தஞ்சம் புகுந்தனர். கடலின் சீற்றம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.


0 comments: