உயர் நிலை வகுப்புகளுக்கு புதிய கல்வி முறை : வரும் கல்வியாண்டில் அறிமுகம்

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம் படுத்தும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உயர்நிலை வகுப்புகளுக்கு 'படைப்பாற்றல் பிளஸ்' என்ற புதிய கல்வி முறை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மத்திய அரசு சார்பில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி திட்டத்தின் கீழும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படைப்பாற்றல் கல்வி திட்டத்தின் கீழும் பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, உயர்நிலை வகுப்புகளுக்கு புகுத்த திட்டமிடப்பட்டு; கடந்தாண்டு தேசிய அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் மேம்பாடு செய்யப்படவுள்ளது. இதில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் 'படைபாற்றல் பிளஸ்' என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


இக்கல்வி முறையின் கீழ் கடந்தாண்டு ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் பாடம் சார்ந்த இப்பயிற்சி வழங்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு, நடப்பாண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படவுள்ளது.


மேலும், உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த கல்வியும், ஆய்வக பயிற்சியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் ஆய்வகம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு; ஆய்வக உபகரணங்கள் வாங்க, பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடன், ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்கும், நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்குவதற்கும், இதர செலவுகளுக்காகவும் பள்ளிக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.


புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'படைப்பாற்றல் பிளஸ்' கல்வி முறையின் கீழ் ஜூலை மாதம் முதல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments: