அஜ்மல் கருணை மனு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா?




மும்பை தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிபட்ட முக்கிய குற்றவாளியான அஜ்மல்கசாப்பிற்கு மும்பை சிறப்பு நீதி மன்றம் தூக்குத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.


பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, அஜ்மலுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவிற்கு தண்டனை நிறைவேற்றப்படுவது
காலதாமதமாகிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


மேலும், அஜ்மலுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் பல ஆண்டுகள் ஆகிவிடும் என்ற பேச்சு நிலவுகிறது.




அஜ்மல் முதலில் கீழ் நீதிமன்றம் விதித்த மரணத்தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. அதன்படி மேல்முறையீடு செய்தால் அதன் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூற பல மாதங்கள்
ஆகலாம்.


மேல்முறையீடு செய்தாலும், செய்யாவிட்டாலும் சட்டவிதிகளின்படி ஒருவரது மரணத்தண்டனை தீர்ப்பை, உயர்
நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.


இதற்காக அஜ்மலுக்கு மரணத்தண்டனை விதித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தஹலியானி, தனது தீர்ப்பை உயர்
நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும்.



அந்த தீர்ப்பை உறுதிபடுத்தும் முன்னர், அனைத்து சாட்சிகளையும் உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கும்.அதன் பின்னரே
அஜ்மலுக்கு அளிக்கப்பட்ட மரணத்தண்டனை தீர்ப்புக்கு ஒப்புதல் கொடுப்பது குறித்தோ அல்லது தண்டனையை குறைப்பது குறித்தோ உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்.


அப்படியே உயர் நீதிமன்றம் மரணத்தண்டனை தீர்ப்பை உறுதி செய்தாலும், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு
செல்ல முடியும். அப்படி உச்ச நீதிமன்றம் சென்றால், அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் மற்றும் வாதங்களை மீண்டும் ஆராய்ந்தும், கேட்டும், அதன் பின்னரே தனது இறுதி தீர்ப்பை அது வழங்கும்.


அப்படியே உச்ச நீதிமன்றம் மரணத்தண்டனையை உறுதி செய்தாலும், அஜ்மல் குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல்
செய்ய முடியும்.


தற்போதைய நிலவரப்படி 29 கருணை மனுக்கள் குடியரசு தலைவரின் முடிவுக்காக காத்திருக்கின்றன.இதில்
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட முகமத் அஃபசலின் மனுவும் இருக்கிறது.இவரது மனு 22 ஆவது இடத்தில் உள்ளது.


இந்நிலையில் அஜ்மல் கருணை மனு அனுப்பினால்,பட்டியலில் அவனது மனு 30 ஆவது இடத்தில் இடம்பெறும்.


கருணை மனு தாக்கல் செய்பவர்களின் மனு மீதான முடிவு, பட்டியலில் உள்ள வரிசைப்படிதான் தெரிவிக்கப்படும்
என்று இருக்கிறது.அதன்படி பார்க்கும்போது அஜ்மல் கருணை மனு முடிவு தெரியவே பல ஆண்டுகள் ஆகிவிடும்.


கருணை மனு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்பதும் தெரியவில்லை.
ஆக, அஜ்மல் தூக்கிலிடப்பட பல ஆண்டுகள் ஆகலாம்.

0 comments: