கடைகளில் உணவு பொருட்கள் விற்பனை : நாகை கலெக்டர் ஆய்வு

நாகையில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கலெக்டர் முனியநாதன் ஆய்வு செய்தார்.


காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாகை கலெக்டர் முனியநாதன் திடீரென பெரியக்கடை தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, நீலா தெற்கு வீதி ஆகிய முக்கிய கடைவீதிகளில் செயல்படும் சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் பெயர் மற்றும் தேதி, காலாவதி தேதி ஆகியவை அச்சிடப்பட்டாமல் உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.


ஆய்வில் பெரிய கடைத்தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் காலாவதியான உணவு பொருட்கள், மாவுப்பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் குழந்தைகள் சாப்பிடும் நொறுக்கு தீனி உணவு வகைகளில் தயாரிப்பாளர் பெயர் மற்றும் தேதி, காலாவதி தேதி ஆகியவை குறிப்பிடப்படாமல் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் முனியநாதன் கூறியதாவது:நாகை மாவட்டத்தில் உணவு பொருட்களில் தயாரிப்பாளர் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை அச்சிப்படாமல் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டறியப்பட்டால்


தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டம் முழுவதும் பொது சுகாதாரத்துறை, நகராட்சி மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து காலாவதி மற்றும் பெயர் அச்சிடப்படாமல் விற்பனைக்கு வைத்திருக்கும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு வருகின்றன என்றார்.
ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன், நகராட்சி ஆணையர் (பொ) பாக்கியசாமி, பொது சுகாதாரத்துறை உணவு ஆய்வாளர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், வட்டவழங்கல் அலுவலர் பரிமளம், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பரசுராமன், ஜான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


வேதாரண்யம்:
இதேபோல் வேதாரண்யம் நகராட்சி செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் வட்ட வழங்கல் அலுவலர் ரவி, மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளர் அழகிரி பாலன், உணவு கட்டுப்பாட்டு ஆய்வாளர் கோதண்டபாணி, சுகாதாரதுறை ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் குழுவினர் வேதாரண்யம் பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் உணவு பொருள்களின் காலாவதி தேதி மற்றும் பொருள் தரக்கட்டுப்பாடு குறித்த சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு கடைகளில் இருந்து காலாவதியான மசாலா பொருள்கள் உட்பட ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் இதுபோன்று இனி காலாவதி பொருள்கள் மற்றும் பாக்கிங் செய்த தேதி இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

0 comments: