இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? * இன்று இலங்கையுடன் மோதல்

"டுவென்டி-20' உலககோப்பை அரையிறுதியை எட்ட, அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கி களமிறங்கும் இந்திய அணி, இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.
வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. செயின்ட் லூசியாவில் இன்று நடக்கும் "சூப்பர்-8' சுற்றுப் போட்டியில் குரூப் "எப்' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
அரையிறுதி வாயப்பு?:
இந்த முறை உலககோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி கிட்டதட்ட இழந்து விட்டது. இருப்பினும் ஏதாவது அதிசயம் நடந்தால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கலாம். இன்று நடக்கும் போட்டியில், இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக மிகப் பெரிய வெற்றி (அதாவது குறைந்தது 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இரண்டாவது பேட் செய்தால், 17. 3 ஓவரில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை எட்ட வேண்டும்) பெற வேண்டும். அதே வேளை, மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசை வீழ்த்த வேண்டும். இவை இரண்டும் நடந்தால், குரூப் "எப்' பிரிவில் 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறி விடும். இரண்டாவது இடத்தில் தலா ஒரு வெற்றிகளுடன் 2 புள்ளிகள் பெற்று இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகள் இடம் பெறும். ரன்-ரேட்டின் அடிப்படையில் இவற்றில் ஏதாவது ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறும். தற்போது இந்திய அணி (-1.578) ரன்-ரேட்டில் மிகவும் பின்தங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் (-1.057), இலங்கை (-0.600) அணிகள் இந்தியாவை விட சற்று வலுவான நிலையில் உள்ளன.
பேட்டிங் சொதப்பல்:
இந்திய அணியின் பேட்டிங் படு சொதப்பலாக அமைந்துள்ளது. துவக்க வீரர்களான காம்பிர், முரளி விஜய் இருவரும் ரன் சேர்க்க திணறி வருகின்றனர். சேவக்கிற்கு பதில் அணியில் வாய்ப்பு பெற்ற முரளி விஜய், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே, அணியில் நிரந்தர இடத்தை பெற முடியும். ரெய்னா, ரோகித், தோனி, யூசுப் பதான் ஆகியோர் இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 200 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாட வேண்டியது அவசியம்.
வேகம் அவசியம்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் ஏமாற்றம் அளித்துள்ளது. அனுபவ வீரர் ஜாகிர் விக்கெட் கைப்பற்ற திணறி வருகிறார். நெஹ்ரா ஆறுதல் அளிக்கிறார். கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை களமிறக்க வேண்டியது அவசியம். அறிமுக வீரர் உமேஷ் யாதவ் அல்லது வினய் குமாருக்கு வாய்ப்பு அளிக்கலாம். ஹர்பஜன் சுழலில் மிரட்டுவது இந்தியாவுக்கு பலம். தொடர்ந்து ரவிந்திர ஜடேஜாவை தேர்வு செய்து தவறுக்கு மேல் தவறு செய்து வரும் கேப்டன் தோனி, நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அணியின் பீல்டிங்கில் முன்னேற்றம் அவசியம்.
வெற்றி தேவை:
"சூப்பர்-8' சுற்றில் ஒரு வெற்றியை எட்டியுள்ள இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேற இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜெயவர்தனா, சங்ககரா, தில்ஷன், மாத்யூஸ், கபுகேதரா ஆகியோர் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். மலிங்கா, குலசேகரா, மெண்டிஸ், முரளிதரன் ஆகியோரை உள்ளடக்கிய பவுலிங் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணிகளும் இதுவரை...
இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 3 "டுவென்டி-20' போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா 2, இலங்கை ஒரு போட்டியில் வெற்றியை எட்டியுள்ளன.
* இவ்விரு அணிகளும் இதுவரை "டுவென்டி-20' உலககோப்பை தொடரில் மோதியது இல்லை.

ஆஸ்திரேலியா-வெ.இண்டீஸ் மோதல்
இன்று செயின்ட் லூசியாவில் நடக்க உள்ள மற்றொரு போட்டியில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. முன்னதாக "சூப்பர்-8' சுற்றில் 2 வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. இருப்பினும் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீசை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. அணியின் அனைத்து வீரர்களும் அசத்தி வருவது, ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது.
சொந்த மண்ணில் அரையிறுதி வாய்ப்பை எட்ட ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. சூப்பர் பார்மில் உள்ள கெய்ல், இன்றும் அசத்தும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீசின் கனவு நனவாகும். அதே சமயம் அணியின் மற்ற வீரர்களும் சாதிக்க வேண்டியது அவசியம்.

0 comments: