1,500 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் : மாநகராட்சி அதிரடி 'ரெய்டு'

சென்னை நகரில் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ எடையுள்ள காலாவதியான உணவுப் பொருட்களை, மாநகராட்சி அதிகாரிகளின் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.சென்னை நகரில் தெருவோர ஓட்டல்கள் மற்றும் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், அதை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.


அதன் பின்னணியில், காலாவதியான உணவுப் பொருட்களை அழிக்காமல், குடோன்களில் இருப்பு வைத்து, மீண்டும் சந்தையில் விற்கும் கும்பலின் கைவரிசை என தெரிந்தது.இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களிலும் அந்தந்த மண்டல உதவி சுகாதார அதிகாரிகள் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர் கள் கொண்ட குழுவினர், பல் பொருள் அங்காடிகள் மற்றும் உணவு கிடங்குகளில் சோதனை செய்தனர்.தண்டையார் பேட்டை, சவுக்கார் பேட்டை, புளியந்தோப்பு, புரசைவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டையில் இந்த சோதனை நடத்தப்பட்டன.
மாநகராட்சி உதவி சுகாதார அலுவலர் டாக்டர் ரேவதி ரோசலின், துப்புரவு அலுவலர் மற்றும் உணவுப் பொருள் ஆய்வாளர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் அண்ணாநகர் பகுதியில் சோதனை நடத்தினர்.எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், அமைந்தகரையில் உணவுப் பொருள் இருப்பு வைக்கப் பட்டிருந்த குடோன்களில் சோதனை நடத்தி தரமற்ற உணவுப் பொருட் களை பறிமுதல் செய்தனர்.இதில், பாலாடைக்கட்டிகள், வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, பருப்பு வகைகள், ரஸ்னா பாக்கெட்டுகள், சாக்லெட் பாக்கெட்டுகள், சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், மாவுப் பொருட்கள், நூடுல்ஸ் வகைகள் உட்பட, பல பொருட்கள் விற்பனை செய்ய தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.உணவுப் பொருள் கலப்பட தடை சட்டத்தின் கீழ் இந்த பொருட்களின் மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று சென்னை நகர் முழுதும் நடந்த சோதனையில் 1,500 கிலோ எடையுள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக, மாநகராட்சியின் சுகதாரத் துறையினர் தெரிவித்தனர்.

0 comments: