மும்பை சதிகாரன் அஜ்மல் கசாபுக்கு தூக்கு

மும்பைத் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 'இதுபோன்ற பயங்கரவாதிகளை உயிரோடு விட்டால் சமூகத்திற்கும், இந்திய அரசுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும்' என, நீதிபதி தகிலியானி கூறினார். கடந்த 2008 நவம்பர் 26ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் அமீர் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான். அத்துடன், பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இந்தியாவைச் சேர்ந்த இருவரும் கைதாகினர். இவர்கள் மீதான மும்பைத் தாக்குதல் வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அஜ்மல் கசாப் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டான். மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர். மொத்தம் 1,500 பக்கங்களுக்கு மேல் அடங்கிய தீர்ப்பில், 'நாட்டிற்கு எதிராக போர் தொடுத்த செயல்' என்றும் குறிப்பிட்டிருந்தார். கசாப்பிற்கான தண்டனையை சிறப்பு கோர்ட் நீதிபதி தகிலியானி நேற்று அறிவித்தார்.


அப்போது அவர் கூறியதாவது: ஒட்டுமொத்தமாக மக்களை கொலை செய்தல், அதற்கான சதி செய்தல், நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல், கொலைக்கு உதவி செய்தல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் -166ன் கீழ், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ், 22 வயதான கசாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கொலை முயற்சி, கிரிமினல் சதி மற்றும் வெடிமருந்துகள் சட்டம் உட்பட இதர ஐந்து சட்டப் பிரிவுகளின் கீழ், கசாப்பிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த கோர்ட்டின் கருத்துப்படி, கசாப் திருந்துவதற்கான வாய்ப்பு இல்லை. இதுபோன்ற பயங்கரவாதியை உயிரோடு விட்டு வைத்தால், அது சமூகத்திற்கும், இந்திய அரசுக்கும் மிகப்பெரிய அபாயமாகும். காந்தகாருக்கு இந்திய விமானத்தை கடத்தியவர்கள், அதிலிருந்த பயணிகளை விடுவிக்க வேண்டும் எனில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளை விடுவிக்கும்படி கேட்டனர். பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. கசாப்பை உயிரோடு வைத்திருந்தாலும், இதுபோன்ற நிலைமை உருவாகலாம். அவன் செயல் மன்னிக்க முடியாதது.


லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் கசாப் தானாக முன்வந்து சேர்ந்துள்ளான். புனிதப் போரில் பங்கேற்கவும் விருப்பம் தெரிவித்துள்ளான். இந்தியாவை தாக்க வேண்டும் என, கசாப் மனதளவில் தயாராகியுள்ளான். லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீது தூண்டுதலின் பேரில் அவன் செயல்பட்டான் என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதி தகிலியானி கூறினார். கசாப்பிற்கு, தீர்ப்பின் சுருக்கத்தை நீதிபதி கூறியதும் அவன் சற்று கலங்கி கண்ணீர் வடித்தான். ஆனால் தலையை அசைத்து, அக்கருத்தை ஏற்றுக் கொண்டான். அரசு வக்கீல் உஜ்வல் நிகாம் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், 'கசாப்பால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள், இத்தீர்ப்பில் நிம்மதி அடைவர்' என்றார். கசாபிற்கு ஆஜரான வக்கீல் பவார், ' கசாப் இனி அப்பீல் செய்யலாம்' என்றார்.


இத்தீர்ப்பைக் கேட்டு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் மக்கள், வெடி வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இங்கு தான் சம்பவத்தன்று கொலைவெறி தாண்டவமாடிய கசாப், முன்னர் பிடிபட்டான். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் கசாப் தரப்பில் அப்பீல் செய்யப்படலாம். மேலும், மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனில், சட்டப்படி அதை ஐகோர்ட் உறுதி செய்ய வேண்டும். தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தாலும், அதன்பின் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யமுடியும். பின், ஜனாதிபதிக்கு கருணை மனு போடவும் வாய்ப்பு உள்ளது. இத்தீர்ப்பை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், 'கசாப் வாக்குமூலத்தால் இந்த தண்டனை என்பதைவிட, வலுவான சாட்சி ஆதாரங்கள் இத் தண்டனை தரக் காரணமாக இருந்தது' என்றார்.

0 comments: