பலஸ்தீனில் யூதர்கள் குர்ஆனை அவமதித்ததை துருக்கிய யூதர்கள் கண்டித்து அறிக்கை

தீவிரவாத யூதர்கள் பலஸ்தீனின் மேற்குக் கரையில் குர்ஆனையும் மஸ்ஜிதையும் அவமதித்ததை, துருக்கிய யூதர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

துருக்கிய யூதர்களின் தலைவர் சபா சில்யோ மற்றும் தலைமைக்குரு இசாக் ஹலெவா ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், சமயப் புனிதத்தலங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
'சல்பிட் பகுதியிலுள்ள மஸ்ஜிதையும் அங்கிருந்த குர்ஆன் பிரதிகள் மற்றும் ஏனைய புனித வளங்களையும் தீவிரவாத யூதர்கள் கிழித்து அவமதித்த நிகழ்வு மிகவும் வருந்தத்தக்க துரதிஷ்டவசமான ஒரு நிகழ்வாகும்' என தமது அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

அரசியல் நோக்கங்களுக்காக, உலகிலுள்ள எந்தவொரு சமயப் புனிதஸ்தலத்தையும் அவமதிப்பதும், வன்முறைகளில் இறங்குவதும் மிகவும் கண்டிக்கத்தக்க சட்டவிரோதமான செயலாகும். துருக்கிய யூதர்களின் தலைவர்கள் என்ற வகையில், இச்செயலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்' எனவும் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இஸ்ரேலிய யூத சட்டவிரோத ஆக்கிரமிப்பு அடிப்படைவாதிகளின் குழுவொன்று, கடந்த வெள்ளிக்கிழமை, பலஸ்தீனின் மேற்குக் கரைக்கு அருகிலுள்ள யூசுப் கிராமத்தின் ஜும்ஆப் பள்ளிவாயலை எரித்துள்ளது.

அக்குழு மஸ்ஜிதின் கதவை உடைத்து உள்ளே சென்று, பெற்றோலை ஊற்றி அப்பகுதியை எரித்தது. அத்துடன், மஸ்ஜித் சுவர்களில், 'இழிவான பரிசு', 'நாம் உங்கள் அனைவரையும் எரிப்போம்' போன்ற வாசகங்களையும் எழுதி வைத்துள்ளது.

0 comments: