விலைவாசியை கட்டுப்படுத்த 'ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்'- தமிழக அமைச்சரவையில் முடிவு

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை தடுக்கவும், முக்கிய பயிர்களின் உற்பத்தித் திறனை பெருக்கவும் தேவையான வழிமுறைகளை ஆராய சிறப்பு முனைப்புக் குழு (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்) அமைக்க தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று கூடியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.


தொழில் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை, வணிக வரித்துறை, உணவுத்துறை, வருவாய் மற்றும் வருவாய் நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகம் சிறுதொழில்கள் ஆகியவை உள்பட 13 துறைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


பின்னர் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் வருமாறு:

கடந்த 2008ம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட அரியலூர், கடலூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருவாரூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நிலவரி, தண்ணீர்த் தீர்வை, தலவரி போன்றவற்றை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.இந்த வகையில் ரூ. 21 கோடியே 34 லட்சத்து 15 ஆயிரத்து 256 ரூபாயை தள்ளுபடி செய்ய தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் வடக்குசேத்தி கிராமத்தில் பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு மகளிர் பொறியியல் கல்லூரி கட்ட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,32,600 என்ற விலையில் 40 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு முனைப்புக் குழு (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்) அமைக்கப்படும். இக்குழுவில் உணவு, விவசாயத் துறை அதிகாரிகள் மட்டுமல்லாது விவசாயப் பல்கலை துணைவேந்தரும் இடம் பெறுவார்.


நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தேவையைவிட குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படும் பிற முக்கிய பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை பெருக்குவதற்கான வழிமுறைகள் போன்றவற்றை ஆராய்ந்து ஒரு நீண்டகால தீர்வை இக்குழுவிடம் இருந்து பெறுவதென்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

0 comments: