குறையும் இந்திய மாணவர்கள்...வருவாய் இழக்கும் ஆஸி

இனவெறி தாக்குதல் காரணமாக, வரும் ஆண்டில் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அயல்நாட்டு மாணவர்களின் வருகை குறையும் என்பதால், ஆஸ்ட்ரேலியாவின் வருவாய் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்ட்ரேலியாவில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது இந்த ஆண்டில் பல முறை இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் காரணமாக, கணிசமான மாணவர்கள் ஏற்கனவே தங்களது படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். மேலும் பல மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவலால் ஆஸ்ட்ரேலியா சென்று பயில திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர், தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக வருகிற ஆண்டில் ஆஸ்ட்ரேலியா வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 21 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாகவும், சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் மட்டுமே ஆஸ்ட்ரேலியா வரக்கூடும் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆருடம் கூறியுள்ளது.

விசா கோரி, இதுவரை வந்துள்ள இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இதனை தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டில் இந்திய மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆஸ்ட்ரேலியாவுக்கு, சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என்றும் அத்துறை மேலும் தெரிவித்துள்ளது

0 comments: