அதிக மாணவர்களை ஏற்றினால் உ‌ரிம‌ம் ரத்து: த‌மிழக அரசு எச்சரிக்கை

பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றால், அந்த வாகனங்களின் உ‌ரிம‌ம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை ஆணையரும், முதன்மை செயலாளருமான மச்சேந்திரநாதன் எச்சரித்துள்ளா‌ர்.


இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படவேண்டுமென்று பலமுறை அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 2006ஆம் ஆண்டு அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு தொடர்ந்து, அனைத்து பள்ளி வாகனங்கள் மேற்கண்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



இருப்பினும் மேற்கண்ட அறிவுரைகளுக்கு மாறாக, சில பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தபடி உள்ளது. இத்தகைய செயல், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எதிராக இருப்பதுடன் விபத்துகள் நடக்க வழிவகை செய்கிறது.



எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வகை வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வாகனத்தை கையகப்படுத்தி அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.



பள்ளிகள் தமக்கென்று சொந்தமாக வாகனங்களை வைத்துக்கொள்ளாமல், தனியார் வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும்போது நல்ல திறமையான ஓட்டுனர்களை நியமித்து அவற்றை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.



பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வகை வாகனங்களையும் முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்றும், வாகனங்களை முறையாக தினசரி சோதனை செய்ய வேண்டுமென்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எ‌ன்று மச்சேந்திரநாதன் தெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

0 comments: