ஒபாமா- நம்பலாமா?

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறேன். அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றம் தடைகள் நீக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.


ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், அதை நிறைவேற்ற ஒபாமா அரசு வேகம் காட்டவில்லை. இதனால் மத்திய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.


இந் நிலையில் ஒபாமா அதிபரான பின்னர் அமெரிக்காவில் முதன்முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மன்மோகன் சிங்.


நேற்று வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு 19 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இரு தலைவர்களும் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது ஒபாமாவின் மனைவி மிச்செல், மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கெளர் ஆகியோரும் உடனிருந்தனர்.


பின்னர் சம்பிரதாய முறைப்படி இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அதிபராக ஒபாமா பதவி ஏற்றபின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படும் முதல் வரவேற்பு நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.


மன்மோகன் சிங்கை வரவேற்ற ஒபாமா, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்காவுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார்.


ஒபாமா பேசுகையில், எனது தலைமையிலான ஆட்சியின் முதல் அதிகாரபூர்வ விருந்தினர் நீங்கள்தான். இந்த அங்கீகாரத்துக்கு நீங்களும் இந்தியாவும் முழுத் தகுதி பெற்றவர்கள். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உலகப் பொருளாதார சரிவை மீட்டு பலப்படுத்த முடியும். அமெரிக்கா திட்டமிட்டுள்ள வருங்கால உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக அதிகமாக இருக்கும்.


அணுசக்தி நாடான இந்தியா 'ஆசியாவின் தலைவர்'. (இதன்மூலம் இந்தியாவை அணு சக்தி நாடு என அமெரிக்கா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது).


அணுசக்தி நாடுகள் என்ற முறையில் உலகின் அதிபயங்கர அணு ஆயுத பரவலை நாம் தடுக்க முடியும் என்றார்.

0 comments: