பள்ளிகளில் நுழைவுத்தேர்வு கூடாது............

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: மெட்ரிக். பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 1 வரை 2010&11ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின்போது கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது: வகுப்பு வாரியாக மாணவர் சேர்க்கை விவரம், பள்ளி தகவல் பலகையில் மே மாதம் 2ம் வாரத்தில் அறிவிக்க வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுதி வாரியாகவும், பயிற்று மொழி வாரியாகவும், இடங்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். வகுப்பு வாரியாக மாணவர் சேர்க்கை விவரம் மெட்ரிக். பள்ளி ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்குதல், பதிவு செய்தல் போன்ற பணிகளை மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை மேற்கொள்ளலாம். அனைவருக்கும் விண்ணப்பம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வோ, பெற்றோர்களுக்கு நேர்முகத் தேர்வோ நடத்தக் கூடாது. எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை சேர்க்கை மே மாதம் 16ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம். பிளஸ் 1 சேர்க்கைகள், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் நடைபெற வேண்டும். ஜூலை 31ம் தேதிக்கு பிறகு நடைபெறும் சிறப்பு சேர்க்கைகள் அரசு அறிவிக்கும் காலம் வரை மேற்கொள்ளலாம்.

மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, எக்காரணத்தாலும் பிளஸ் 1 சேர்க்கையை மறுக்க கூடாது. உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும். சேர்க்கை முடிந்தவுடன் வகுப்பு வாரியாக சேர்க்கை செய்தோர் பட்டியலுடன் சேர்க்கை விண்ணப்பங்கள், சேர்க்கை நீக்கல் பதிவேடு ஆகிய ஆவணங்களை மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்க வழிகாட்டுதல்கள் வழங்கி அர சாணை வெளியிடப்பட்டுள்ளதால், தனியாக சேர்க்கை நீக்கல் பதிவேடு பராமரிக்க வேண்டும். 1&10, 11&12ம் வகுப்புகளுக்கு தனியாக சேர்க்கை நீக்கல் பதிவேடு பராமரித்து உரிய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிக். ஆய்வாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

0 comments: