காவல்துறை அதிகாரிகளுக்கு வாங்கப்பட்ட பாதுகாப்புக் கவசங்கள் தரம் வாய்ந்தவை அல்ல என்று கூறி சந்தோஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தரமற்றக் கவசங்களை அணிந்து சென்றதால்தான் கார்கரே, அசோக் காம்தே மற்றும் விஜய் சலஸ்கர் ஆகிய காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பட்டேல் மற்றும் அம்ஜத் சயீத் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வியாழக் கிழமையன்று நடைபெற்ற இவ்விசாரணையில் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் ஒய்.பி. சிங், கார்கரேயின் கவசம் காணாமல் போனது பற்றி உரிய விசாரணை மேற்கொள்ளாமல் முதல்வர் அசோக் சவான் அதிகாரிகளைக் காப்பாற்றுவது போல் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் கூறினார்.
மும்பை தாக்குதலின் போது பலியான ஹேமந்த் கார்கரேயின் கவசம் பாதுகாப்பாக உள்ளதாக முதல்வர் அசோக் சவான் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரேவின் குண்டு துளைக்காத கவசத்தை முதல்வர் அசோக் சவானுக்கு அளித்துவிட்டு, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள காவல் துறைப் பாதுகாப்பைத் திரும்பப் பெறுங்கள் என்றும் நீதிபதிகள் கோபமாகக் கூறினர்.
0 comments:
Post a Comment