புயல் சிறிது பலவீனம்! நாளை நல்ல மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று பலமாக உருவெடுத்தப் புயல் சின்னம் இன்று சிறிது பலமிழந்துள்ளது என்றாலும், நாளை தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, சென்னையிலிருந்து தென்கிழக்காக 500 கி.மீ. தூரத்திலும், நாகையிலிருந்து தென்கிழக்காக 350 கி.மீ. தூரத்திலும் நிலைகொண்டுள்ள புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், அது நாளை இரவு நாகைக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்றும் கூறிப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சின்னத்தின் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுவையிலும் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே மழை பெய்யும் என்றும், நாளை தமிழ்நாடு, புதுவை கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் கூறியுள்ள வானிலை மைய அறிக்கை, மீனவர்கள் கடலிற்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
நாளை கடலோர மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 வரையும், சில நேரங்களில் 85 கி.மீ. வேகத்திற்கும் புயல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த மழை!
இன்றுடன் கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டத்துடனேயே காணப்பட்ட சென்னையில் இன்று மாலை 6.30 மணியளிவில் பரவலாக பலத்த மழை பொழியத் தொடங்கியது. காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

0 comments: