Showing posts with label கார். Show all posts
Showing posts with label கார். Show all posts

கரென்ட்' இல்லாமல் கஷ்டப்பட வேண்டாம்: கார் பேட்டரியை பயன்படுத்தலாம்

எலக்ட்ரிக் கார்கள், போக்குவரத்துக்கு மட்டுமின்றி, மின் தொகுப்புக்குத் தேவையான மின்சாரத்தையும் கொடுக்க வல்லவை என்பதை, அமெரிக்க வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவில், டெலவேர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வில்லெட் கெம்ப்டன் என்பவர், இந்த முறையை செயல்படுத்த வெகிக்கிள் டூ கிரிட் என்ற தொழில்நுட்பத்தை, 1997ல் கண்டுபிடித்தார்.



வருங்காலத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சக்திதான் உலகின் மாற்று மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தியாக இருக்கும். அப்போது இவ்வகைக் கார்கள் பெருமளவில் உதவும்' என்கிறார் கெம்ப்டன்.இவர், எலக்ட்ரிக் கார் பேட்டரியிலிருந்து, 10 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என கூறுகிறார். தற்போது, டொயோட்டா சியான் மாடல் கார்களை இது போன்று மாற்றியுள்ளார்.



டெலவேர் பல்கலையில் மூன்று கார்களும், டெலவேர் மாநில அரசுத் துறையில், நான்கு கார்களும் இந்த முறையில் இயங்குகின்றன.காரின் முன்பகுதி வழியே, மின்தொகுப்பில் இணைப்பு தரப்படும். இதன் மூலம் மின்சாரத்தைப் பெறவோ, வழங்கவோ இயலும். நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற, 'சார்ஜர்' நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



நம் பயன்பாட்டைத் தவிர்த்து, மிச்சமுள்ள மின்சாரத்தை, அந்த மின்தொகுப்பில் கொடுத்து விட்டு, அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மின்மாற்று, இணையம் மூலம் கட்டுப்படுத்தப்படும்.தற்போது இந்த, 'வி2ஜி' தொழில்நுட்பம் பொருத்தப் பட்ட ஒரு காரின் விலை 36 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால், 'இவ்வகைக் கார்கள் அதிகளவில் உற்பத்தியானால் ஒரு காரின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை குறையும்' என்கிறார் கெம்ப்டன்.

ஒரு லட்ச ரூபாய் நானோ ரூ.1 கோடி கார் ஆகிறது

ஒரு லட்ச ரூபாய் நானோ காரை ரூ.99 லட்சம் செலவில் மாற்றி வடிவமைத்து ரூ.1 கோடி சொகுசு காராக மாற்றுவதில் டிசைனர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.டெல்லியை சேர்ந்த கார் டிசைனர் திலீப் சாப்ரியா. கார்களின் உள்புற வேலைப்பாடுகள், ஸ்டீரியோ, ஏசி, விளக்குகள், பம்பர் என பலவற்றை மாற்றி கூடுதல் சொகுசு செய்து கொடுப்பதில் பெயர் பெற்றவர் இவர்.

விஐபிக்களின் கார்களில் அவர்கள் விரும்பும் வகையில் கூடுதல் வசதிகளை செய்து தருவார். இப்போது உலகின் மிகவும் விலை குறைந்த காரான நானோவை விலை மதிப்பு மிக்க காராக மாற்றிக் காட்டுவதில் திலீப் ஈடுபட்டுள்ளார். காரின் 623 சிசி திறன் கொண்ட இன்ஜினுக்கு பதிலாக 1,600 சிசி திறனுள்ள இன்ஜின் பொருத்தியுள்ளார்.

அதிகபட்ச வேகத்தை மணிக்கு 100 கி.மீ.யில் இருந்து 200 கி.மீ.யாக உயர்த்தியுள்ளார். அதிநவீன கதவுகளை அமைத்து பக்கவாட்டில் திறப்பதற்கு பதிலாக வானை நோக்கி திறக்குமாறு வடிவமைத்துள்ளார். லம்பார்கினி, பெராரி போன்ற விலையுயர்ந்த கார்களில் மட்டுமே இதுபோன்ற வசதி உண்டு.மேலும் பல உள்புற மாற்றங்கள், வெளிப்புற அழகுபடுத்தல்கள் மூலம் ரூ.1 லட்சம் நானோ காரை ரூ.1 கோடி மதிப்புள்ள காராக திலீப் மாற்றி வருகிறார்.

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.
இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம்.
புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.
விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.
வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.
சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.
அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.