Showing posts with label பலி. Show all posts
Showing posts with label பலி. Show all posts

ரயில் தடம் புரண்டு 39 பேர் பரிதாப பலி

தண்டவாளத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் அந்த வழியாக வந்த ரயில் சிக்கி நொறுங்கியது. 3 பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 39 பயணிகள் உயிர் இழந்தனர்.

95 பேர் படுகாயம் அடைந்தனர். ரஷ்யாவில் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவில் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வரை செல்லும் நிவா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நவ்கோரட் பகுதியில் அடர்ந்த காடு வழியாக சென்று கொண்டிருந்தது.உக்லோவ்கா என்ற நகர் அருகே வந்தபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு டமார் என்ற சத்தத்துடன் பயங்கரமான வெடித்தது. இதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டன.

அடர்ந்த காடு என்பதால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. மீட்பு குழுவினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மீட்பு குழுவினர் சென்றபோது பயணிகளின் உடல்கள் தண்டவாளத்தை விட்டு வெளியேயும், ரயில் பெட்டிகளுக்குள்ளும் சிதறிக் கிடந்தன.39 பயணிகள் உயிர் இழந்து இருப்பதாகவும். 95 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய நெருக்கடி கால அமைச்சர் ஷோய்கு கூறினார்.
தண்டவாளத்தில் குண்டு வெடித்ததற்கான தடயம் கிடைத்துள்ளது என்று ரஷ்ய ரயில்வே தலைவர் விலாடிமிர் யுகினின் கூறினார். இந்த சம்பவம் பற்றி முழு அளவில் விசாரணை நடத்துமாறு அதிபர் டிமித்ரி மேத்வதேவ் உத்தரவிட்டுள்ளார். நிவா எக்ஸ்பிரஸ் ஆடம்பர ரயில் ஆகும்.

நீலகிரியில் பலி எண்ணிக்கை 43 ஆனது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்ரு 43 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த 4 நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. இதனால் 100க்கும் அதிகமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மழை காரணமாக மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளது.தற்போது மழையின் வேகம் குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கதர்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.மாவட்டம் முழுவதும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறைக்கு சொந்தமான சாலைகளை பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறந்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

குன்னூரில் 5வது நாளாக மின்சாரம், தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

படகு விபத்தில் பலியான 12 பேரும் இலங்கைத் தமிழர்கள்

ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய 11 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட 27 பேர் கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஓஷன் வைகிங் என்ற இந்தப் படகில் வந்தவர்கள் இந்தோனேஷியாவில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் ஆவர்.

கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும், அகதிகளை வர விடாமல் தடுப்பது தொடர்பாகவும், ஜான் மெக்கார்த்தி என்ற அதிகாரியை கொழும்புக்கு அனுப்பி வைக்கவும் ரூட் முடிவு செய்துள்ளார்.

கடலில் மூழ்கிய இலங்கைப் படகு, காக்கஸ் தீவுக்கு அருகே தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கித் தவித்தது. இதையடுத்து அவசர கால செய்தியை படகின் ஓட்டுநர் அனுப்பினார். இதைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய விமானக் கண்காணிப்புப் பிரிவினர் கடற்படைக்குத் தெரிவித்து மீட்புக் கப்பலை விரைந்து போகச் செய்தனர். மீட்புக் கப்பல் வந்த பின்னரே கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

மீட்கப்பட்டவர்கள் பெரும் குரலில் கதறி அழுததாகவும், அது மனதை இளகச் செய்வதாக இருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தாக செய்திகள் கூறுகின்றன.

இந்தப் படகில் 39 பேர் இருந்ததாக தெரிகிறது.

இதுவரை ஒரு தமிழரின் மரணம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேரைக் காணவில்லை என்று ஆஸ்திரேலிய உளதுறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 16 மணி நேரம் படகின் உடைந்த பாகங்களைப் பிடித்தபடி கடல் நீரில் தத்தளித்துள்ளனர்.

படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள் குறித்து அகதிகளுக்கான வழக்கறிஞர் பமீலா கர் கூறுகையில், இவர்கள் அனைவரும் நேரடியாக இலங்கையிலிருந்து வந்ததவர்கள் என்றும், மலேசியா அல்லது இந்தோனேசியாவின் பிடியில் சிக்கி விடாமல் இருப்பதற்காக நேரடியாக வந்ததாகவும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

சிலோன் தமிழர்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் என்ற அமைப்பின் தலைவர் ராமலிங்கம் விக்கிரமசிங்கம் கூறுகையில், படகு மூழ்கிய தகவல் பரவியதும் கொழும்பில் உள்ள தமிழர்கள் படகில் இருந்தவர்கள் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் கேட்டறிந்த வண்ணம் உள்ளனர்.

படகு விபத்தில் சிக்கியவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதால் நாங்கள் அச்சத்துடன் உள்ளோம் என்றார்.

அகதிகளை காப்பது நமது பொறுப்பு- ஆஸி. முதல்வர்:

இந் நிலையில் இந்தோனேசியாவில் சிக்கித் தவிக்கும் 78 இலங்கைத் தமிழர்களையும் காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் கெவின் ரூட் மேற்கொண்டு வரும் நிலை சரியல்ல என்று மேற்கு ஆஸ்திரேலியா மாகாண முதல்வர் காலின் பர்னெட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தோனேசிய துறைமுகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் 78 இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி அவர்களின் புகலிட கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்து வரும் நிலை சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. இப்படிப்பட்ட ஒரு நிலை நீடிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டு கப்பலில் அந்த 78 உயிர்களும் இன்று தவித்துக் கொண்டுள்ளன. எனவே அவர்களின் உயிரைக் காப்பதும் நமது பொறுப்பேயாகும்.

எனவே அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு வந்து பரிசீலிப்பதே சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் பர்னெட்.

படகு கவிழ்ந்து 23 பேர் பலி


ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் காகஸ் தீவுகளுக்கு அருகே நேற்று வாழ்விடம் தேடி சுமார் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தில் 23 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, எல்.என்.ஜி பயனியர் கப்பல் மற்றும் தைவான் நாட்டின் மீன்பிடி படகுகள், ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீட்புப் பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், படகில் வந்து உயிருக்குப் போராடி வருபவர்களைத் தேடி வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.17 பேர் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தெரிகிறது.ஆஸ்திரேலியாவிற்குள் புகலிடம் தேடிச் செல்லும் நோக்கில் அவர்கள் படகில் சென்றதாகக் கூறப்படுகிறது.மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்