திருச்சியில் கல்லூரிக்கு சென்ற விமானப்படை அதிகாரியின் மகள் மாயம்

திருச்சி: திருச்சியில் கல்லூரிக்கு சென்ற விமானப்படை அதிகாரியின் மகள் மாயமாகியுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மன்னார்புரம் ராணுவ குடியிருப்பு காலனியில் வசிப்பவர் சவுகாத். ராஜஸ்தான் மாநிலம் சிகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் திருச்சி கிராப்பட்டியில் உள்ள என்.சி.சி. விமானப்பிரிவு பட்டாலியனில் கமாண்டன்டாக உள்ளார். அவரது மகள் அனிதா(25). வேதியியல் முதுகலை பட்டப்படிப்பை முடித்த அவர் தற்போது திருச்சி பொன்னகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளார். அனிதா தினமும் தனது தந்தையுடன் காரில் தான் கல்லூரிக்கு செல்வார். மாலையில் கல்லூரி முடிந்தவுடன் சவுகாத் வந்து தான் மகளை அழைத்துச் செல்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் அனிதா தனது தோழியுடன் கல்லூரிக்கு சென்றுள்ளார். அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து சவுகாத் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அனிதா மதியமே வெளியே சென்றுவிட்டது தெரிய வந்தது. அவரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அனிதாவை யாராவது கடத்திச் சென்றுள்ளார்களா அல்லது காதல் விவகாரமா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: