Showing posts with label பந்த். Show all posts
Showing posts with label பந்த். Show all posts

திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் 'பந்த்':பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும் நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்து 189 பேரும், ரயில் மறியலில் ஈடுபட்ட 275 பேரும் கைது செய்யப்பட்டனர்.


திருவாரூரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மா.கம்யூ. மாவட்ட செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூ. சார்பில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 126 பெண்கள் உட்பட 262 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ரயில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திருவாரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.


ஒருசில மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கின. இதேபோல் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், நன்னிலம் உட்பட அனைத்துபகுதிகளிலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மன்னார்குடி அருகே சவளக்காரன், கோட்டூர், பெருகவாழ்ந்தான், தட்டாங்கோவில், திருமக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் சாலைமறியல் நடந்தது. மேலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் ரயில் மறியல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், நெடும்பலம், கட்டிமேடு, பாமணி, வேளூர், மணலி, ஆலத்தம்பாடி உட்பட பல இடங்களில் சாலைமறியல் நடந்தது.


நீடாமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பஸ் மறியலில் ஈடுபட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரடாச்சேரி, முகந்தனூர், அம்மையப்பனில் சாலைமறியல் செய்த 220 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொரடாச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை: நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.


நாகை ரயில்வே ஸ்டேஷனில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகையன், இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக்குழு செல்வம் ஆகியோர் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 175 பேரை இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் நாகைமாலி, இந்திய கம்யூ., வட்ட செயலாளர் இடும்பையன் ஆகியோர் தலைமையில் ரயில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டத்தில் அரசு பஸ்கள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. மணல்மேடு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடலங்குடி, சீர்காழி, பொறையார், திருமருகல், கொள்ளிடம் உட்பட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் வேதாரண்யத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.


காரைக்கால்: காரைக்கால் நகரில் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் இயங்கவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. காரைக்காலில் உள்ள 2 திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ஓடவில்லை.மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உட்பட கொம்யூன் பகுதிகளிலும் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கியமான இடங்களில் ஒரு சில மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. தமிழகம், புதுச்சேரி அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. காரைக்கால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் நடத்த முயன்ற 213 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர். காரைக்கால் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே புளியங்கொட்டை சாலையில் சென்னை சென்ற தமிழக அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.

இன்று நடக்கும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது: தங்கபாலு

'எதிர்க்கட்சிகளால் நாளை (ஏப்.27) நடத்தப்படும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது, '' என தமிழக காங்., தலைவர் தங்கபாலு கோவையில் நிருபர்களிடம் கூறினார்.தமிழ்நாடு காங்., சேவாதள தொண்டர்களுக்கான மாநில பயிற்சி முகாம், போத்தனூரில் நேற்று துவங்கியது.


முகாமில் நிருபர்களிடம் தங்கபாலு கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை (இன்று) சில கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இரு அரசுகளின் செயல்பாடும் குறை கூற இயலாதவாறு உள்ளது. அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில், சம்பந்தமே இல்லாத சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு இந்த போராட்டத்தினை அறிவித்துள்ளனர். மக்கள் பிரச்னைக்காக சட்டசபையிலும், லோக்சபாவிலும் ஜனநாயக ரீதியாக விவாதிக்க தயாராக இல்லாதவர்கள் இந்த 'பந்த்'க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது மக்களுக்கு எதிரான ஒன்றாகும்.


பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற எந்த அமைப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை. தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பவில்லை. அவர் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை பயன்படுத்தி, சிலர் குறுக்கு வழியில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.கார்த்தி சிதம்பரம், மாநகர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளர் தங்கம் பழனிசாமி, அகில இந்திய அமைப்பாளர் மத்நாயக், கங்காதரராவ், டென்னிஸ் செல்வராஜ், செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இன்று 'பந்த்' போராட்டத்தை சமாளிக்கஒரு லட்சம் போலீஸ்

Front page news and headlines today

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் அறிவித்த நாடு தழுவிய ஒரு நாள், 'பந்த்' இன்று நடக்கிறது. தமிழக போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 'பந்த்'தை வெற்றி பெற வைக்க மும்முரமாகக் களமிறங்கியுள்ளன. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளையும், ஒரு லட்சம் போலீசாருடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என அரசு அறிவித்துள்ளது.


பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது முறையாக காங்., கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல் ஏறி வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் ஏறி வருவதாகவும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்பப் பெறப்படவில்லை.இந்நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.


தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் நடக்கும் வேலை நிறுத்தத்தில், இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் - ம.தி.மு.க., மற்றும் ஆதரவு தொழிற் சங்கங்கள் முழு அளவில் பங்கேற்கின்றன. தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தவிர, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள், 'பந்த்'துக்கு ஆதரவு இல்லையென தெரிவித்துள்ளன.


பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோரியும் நடக்கும் போராட்டம் என்பதால், பொது மக்கள் ஆதரவு தர வேண்டுமென, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் முழு அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கும் என கூறப்படுகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று வழக்கம் போல் பணிக்கு வர உள்ளனர்.


அரசு அதிரடி ஏற்பாடு:


எதிர்க்கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து, குடிநீர், பால், தொலைபேசி, மருத்துவமனை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுத்துள்ளது.


பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் ஸ்ரீபதி,


''மக்களுக்கோ, பொதுச் சொத்துகளுக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்போர் மற்றும், 'பந்த்'தை சாதகமாகப் பயன்படுத்தி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்துள்ளார்.


சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன்,


''பஸ், ரயில் வழக்கம் போல் ஓடும். இதற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட சரக டி.ஐ.ஜி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு லட்சம் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை பெரியசாமி,


'பந்த்'தில் வர்த்தகர்கள் பங்கேற்க மாட்டார்கள்; கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்' என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.