Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

பேச்சுவார்த்தைக்கு தயார்!

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எந்த அமைப்பினருடனும் அல்லது தனிநபர் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் வன்முறைச் சம்பவங்கள் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பாக விவாதிக்க இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மன்மோகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வன்முறையாளர்கள், போலீசார், பாதுகாப்புப் படையினரால் பலர் உயிரிழந்தது குறித்தும், காயமடைந்தது குறித்தும் கவலை தெரிவித்த பிரதமர், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், ஆனால் வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் இல்லாத சூழ்நிலையில் பேசுவது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதுதான் உண்மை என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

கோலாலம்பூரில் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சென்னையில் செய்தியாளர்களிடம்,

’’கடந்த பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7 ந் தேதிகளில் கோவையில் எனது தலைமையில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதற்காக உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோலாம்பூரில் தொடங்கப்பட்டது.

இங்கு, உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பது குறித்தும், ஈழத்தமிழர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட உள்ளது. வரும் 2012 ம் ஆண்டு 2 வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோலாலம்பூரில் நடத்தப்படும்.

கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் கொத்து குண்டுகளால் மறைந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் 12 ந் தேதி முதல் 18 ந் தேதி வரை மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.

சென்னை ஏர்போர்ட்டிற்கு பலத்த பாதுகாப்பு

பயங்கரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் டில்லியில் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. பயணிகள், பார்வையாளர்கள் கண்காணிக்கப் படுகின்றனர். பேக்கேஜ்கள் இரண்டு அடுக்கு முறையில் சோதனையிடப்படுகின்றன. கேட்பாரற்ற பொருட்கள் குறித்து, அதிக கவனம் செலுத் தப்படுகிறது. வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே, விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையத்தின் பல இடங்களிலும், தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, இந்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்துடன் ஆலோசனை நடத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று 'பெர்த்' என்ற இடத்தில் ஆஸி., வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து, ஸ்மித், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 'ஆஸி.,யில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்கு ஆஸி., அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டது. மேலும், இருதரப்பிலான கல்வி தொடர்பான உறவுகள் பற்றியும் விவாதிக்கப் பட்டது. இருதரப்பு அரசியல் ரீதியான உறவுகளில் கபில் சிபல் உறுதியான ஆதரவோடு உள்ளார்' என்று தெரிவித்தார்.


ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், கல்வித் துறை அமைச்சருமான ஜூலியா கில்லார்ட்டையும் கபில் சிபல் சந்திக்க உள்ளார். அதையடுத்து, ஆண்டுதோறும் நடக்கும் இருதரப்பு கல்விக் கூட்டுறவு தொடர்பான அமைச்சக கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார். ஆஸ்திரேலிய பல்கலைகளின் பிரதிநிதிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்களையும் அவர் சந்தித்துப் பேச இருக்கிறார்.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் .ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், அலுவலகங்களில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை என மொத்தம் 3,080 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில், பஸ் பயணிகள் கடுமையான சோதனை களுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களின் எல்லா பகுதிகளும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர். நாளை வரை பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர்.மத்திய அரசு அலுவலகங்களான சென்னை தொலைபேசி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம், தமிழ்நாடு அஞ்சல் வட்ட அலுவலகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டன. இரண்டு வாயில்களில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப் படுகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் 600 போலீசார், சிறப்பு பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் போலீசார் மாறு வேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே குமரி, நாகை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் தங்கும் லாட்ஜ்களில், விவரங்களை சேகரித்தனர். பதற்றம் நிறைந்த கோவை, திருப்பூர், வேலூர் மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.