நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் .ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், அலுவலகங்களில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை என மொத்தம் 3,080 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில், பஸ் பயணிகள் கடுமையான சோதனை களுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களின் எல்லா பகுதிகளும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர். நாளை வரை பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர்.மத்திய அரசு அலுவலகங்களான சென்னை தொலைபேசி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம், தமிழ்நாடு அஞ்சல் வட்ட அலுவலகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டன. இரண்டு வாயில்களில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப் படுகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் 600 போலீசார், சிறப்பு பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் போலீசார் மாறு வேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே குமரி, நாகை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் தங்கும் லாட்ஜ்களில், விவரங்களை சேகரித்தனர். பதற்றம் நிறைந்த கோவை, திருப்பூர், வேலூர் மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments: