கலைஞர் - ராணுவ அதிகாரி சிறப்பு சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கான தென்பிராந்திய ராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் நிதின் கோஹ்லி இன்று சந்தித்துப் பேசினார்.

பின்னர், அங்கிருந்த நிருபர்களிடம் நிதின் கோஹ்லி, தமிழகத்துக்கு புதியவன் என்ற முறையிலும், மரியாதை நிமித்தமாகவும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன்.
மாநிலத்துக்கு ராணுவ உதவிகள் தேவைப்பட்டால் அதைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்று உறுதி அளித்தேன்’’ என்று குறிப்பிட்டார்

ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?

ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது.
‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு திரண்டனர்.

ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்த ராஜபக்சவிற்கு அனுமதி அளிக்காதே! திருப்பதி தேவஸ்தானமே ராஜபக்சவை திருப்பி அனுப்பு! என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் தேவஸ்தான கோயிலின் முன்பு மறியல் செய்தனர்.


கொலைக்கார ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?
இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா?
என்று முழக்கங்கள் இட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவலர்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

சென்னை சிட்டி சென்டரில் சாகச நிகழ்ச்சி

சென்னைராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகமான சிட்டி சென்டரில் வெளிநாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபெறும் `த்ரபேஸியா -09' எனும் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியில் பல்கேரியா, ஹங்கேரி மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் - பெண்களும் கலந்து கொண்டு தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.ஹங்கேரியைச் சேர்ந்த ஸோலி மற்றும் ஸான்ட்ரா பங்குபெறும் ஏரியல் டான்ஸ் எனப்படும் அந்தரந்தில் தொங்குதல், ஹங்கேரி நாட்டின் கிங்கா ஷோ, பல்கேரியாவைச் சேர்ந்த இருவர் பங்கேற்கும் வண்ணமிகு நடனம், எகிப்தின் தனுரா நடனம் ஆகியவை இடம்பெறுகின்றன.சிட்டி சென்டருக்கு வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து வேறுவேறு நடனங்களாகவும், கலை நிகழ்ச்சிகளாகவும் நடத்தப்படும் என்று இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அப்பாஸ் தெரிவித்தார்.
சிட்டி சென்டருக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்நிகழ்ச்சி கட்டணம் ஏதுமின்றி இலவசமாக, இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு ஷோ இப்போதுதான் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.தொடக்க நிகழ்ச்சியாக தங்களின் சாகசங்களை வெளிநாட்டுக் குழுவினர் செய்து காண்பித்தனர்.
சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் இயக்குனர் அப்துல்லா, சாகசம் நடத்தும் வெளிநாட்டு வீரர்-வீராங்கனைகள் உடனிருந்தனர்.

பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌‌க்க‌ப்ப‌ட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராம‌ன் கவலை‌க்‌கிட‌ம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வந்தவாசி தொகுதி தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஜெயராமன் கவலைக்கிடமாக உள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.ஜெயராமன். அவருக்கு வயது 60. தி.மு.க.வை சேர்ந்த இவர் சுமார் 8 மாதங்களாக இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட்டு, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வாரம் அவரது உடல் நிலை மோசமானதால் சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மரு‌த்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மரு‌த்துவ‌ர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு ஜெயராமன் எம்.எல்.ஏ. உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு மரு‌த்துவ‌ர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால், அவருடைய மகன் கமலக்கண்ணன், எஸ்.பி.ஜெயராமனை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர முடிவு செய்தார்.அதன்படி செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் செங்காடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்‌றிரவு ஜெயராமன் எம்.எல்.ஏ.வை கொண்டு வந்தனர்.

தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

சோப்பூரில் இருந்து 55 கி.மீ தொலவில் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

காவல்துறையினரும், ராணுவத்தினரும் அங்கு சென்ற போது அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருவதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

என்றாலும் இதுவரை தீவிரவாதிகள் தரப்பிலோ, பாதுகாப்புப் படையினரோ உயிரிழந்ததாக தகவல் ஏதும் இல்லை.

நாகையில் கடும் எதிர்ப்பு

நாகை அருகே அனல் மின் நிலையம் அமைவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரைக் கண்டித்து கோஷம் போட்டதால் பெரும் பரபரப்பு எழுந்தது. நாகை அடுத்த கீவளூர் வட்டத்தில் காரப்பிடாகை, விழுந்தமாவடி, கீழப்பிடாகை கிராமங்களில் நிலக்கரியைப் பயன்படுத்தி, "டிரைடம் போர்ட் அண்ட் பவர் கம்பெனி' - "நாகப்பட்டினம் எனர்ஜி பிரைவேட் லிட்.,' கம்பெனி சார்பில் 1,820 மெகா வாட் மற்றும் 150 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க, 9,830 கோடி ரூபாய் மதிப்பில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், காரப்பிடாகையில் நேற்று நடந்தது. காரப்பிடாகை, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளியைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனல் மின் நிலைய அதிகாரிகள் இத்திட்டத்தைப் பற்றி விளக்கி கூறியவுடன், பொதுமக்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அவர்கள் பேசியதாவது: கடைமடையின் வடிகால் பகுதியில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், வடிகால்கள் அடைக்கப்பட்டு, வரும் காலங்களில் பெரும் சேதத்தையும், கடலோரக் கிராமங்களுக்கு அரணாக இருக்கும் வனப்பகுதிகளை அழிப்பதன் மூலம், மீனவர்கள், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
தமிழகத்தில் தரிசு நிலங்கள் அதிகமாக இருக்க, நாகை மாவட்டத்தில் மட்டும் ஏழு பவர் பிளான்ட்களை அமைக்க அரசு தீவிரம் காட்டுவதால், கடலோரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், மீனவர்களும் அகதிகளாக்கப்பட்டு, இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களை, சொந்த பூமியில் வாழ விடுங்கள்; எங்கள் உயிர் உள்ளவரை, அனல் மின் நிலையம் இப்பகுதிக்கு வர அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். "உங்கள் கருத்துக்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும்' எனக் கூறி அதிகாரிகள் வெளியேறியதால், ஆத்திரமடைந்த மக்கள், கலெக்டரைக் கண்டித்து கடுமையாக கூச்சல் போட்டனர். பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், அனைவரையும் வெளியேற்றினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாதனைக்கு வயது தடையல்ல

ஸ்போர்ட்ஸ் ஷூ அணியாத வெற்று கால்களுடன், சீனியர் மாணவர்களுடன், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ஏழாம் வகுப்பு மாணவன், நான்காம் இடத்தில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு குழுமம் (பைக்கா) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அவிநாசி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி, அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. நிறைவு நாளான நேற்று தடகள போட்டிகள் நடந்தன. இதில், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. விதிகளின் படி, பள்ளியின் பெரிய மைதானத்தை 15 முறை (ஒரு சுற்றுக்கு 200 மீட்டர்) சுற்றி வர வேண்டும். ஏழாம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 15 பேர் பங்கேற்றனர். போட்டி துவங்கியதும், மிக வேகமாக ஓடிய நான்கு பேர் பாதி சுற்றிலேயே வெளியேறினர். மொத்த இலக்கான 3000 மீட்டரையும் நிறைவு செய்ய 14 நிமிடங்களாகும். ஓடத்துவங்கிய 10வது நிமிடத்தில், தொடர்ந்து ஐந்து பேர் வெளியேறி விட்டனர். இருப்பினும், வெற்று கால்களுடன், பள்ளி சீருடையிலேயே சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த கவுதம் என்ற சிறுவனை பார்த்து அனை வரும் ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர். 15வது நிமிடத்தில், முதலிடத்தை லோகேஷ் (பொங்குபாளையம்), இரண்டாமிடத்தை மணிகண்டன் (பழங்கரை), மூன்றாமிடத்தை விக்னேஷ் (பழங்கரை), ஜெயப்பிரகாஷ் (சேவூர்) ஆகியோரும் பிடித்தனர். அனைவராலும் ஊக்கப் படுத்தப்பட்ட சிறுவன் கவுதம், நான்காவதாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபித்த சிறுவன் கவுதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். கவுதம் கூறுகையில்,
""என்னுடன் படிக்கும் நண்பர்கள் தினேஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் 3000 மீட்டரில் கலந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினர். அவர் களுடன் நானும் ஓடினேன். ஆரம்பம் முதலே சீராக ஓடி, நான்காவது இடத்தை பெற்றேன். முதலிடம் பெற வேண்டுமென்ற லட்சியத்துடன் ஓடிய போதும், 15 ரவுண்ட் முடித்தது மகிழ்ச்சியளிக் கிறது,'' என்றார்.தலைமையாசிரியர் பிலோமின்ராஜ் கூறுகையில், ""மாணவன் கவுதமிடம் விளையாட்டு திறமை இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. சீனியர் மாணவர்களுக்கு இணையாக 3000 மீட்டர் ஓடியதோடு மட்டுமின்றி, நான்காவதாக வந்தான். சிறப்பு பரிசு வழங்கப் படும். கவுதமுக்கு விரைவில் "ஸ்போர்ட்ஸ் ஷூ' வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளேன்,'' என்றார். "பைக்கா' விளையாட்டு போட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ""நன்றாக பயிற்சி பெற்ற மாணவர்களாலேயே 3000 மீட்டர் ஓடுவது சிரமமான விஷயம். எவ்வித பயிற்சியும் இல்லாமல், கவுதம் ஓடியதோடு மட்டுமின்றி, நான்காவதாக வந்துள்ளான். முறையான பயிற்சியை வழங்கினால் இன்னும் பல சாதனைகளை செய்வான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து கவுதமுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்

துபாய் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் இணைய‌த்த‌ள‌ம்

துபாய் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ஆத‌ர‌வுடன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் இணைய‌த்த‌ள‌ (www.icwcdubai.com) துவ‌க்க‌ விழா வியாழ‌க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இணைய‌த்த‌ள‌த்தை இந்திய‌ வெளியுற‌வுத்துறை இணைய‌மைச்ச‌ர் ச‌சி த‌ரூர் துவ‌க்கி வைத்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் ப‌ணிக‌ளைப் பாராட்டினார்.

நிக‌ழ்வில் இந்திய‌ தூத‌ர் த‌ல்மிஷ் அஹ்ம‌த், க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி, இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி, ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பொதுச்செய‌லாளர் ஜெக‌ந்நாத‌ன், துபாய் த‌மிழ் ம‌க‌ளிர் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், ப‌ல்வேறு இந்திய‌ அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ஜப்பான்-இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தேனேஷியாவின் சுலவேசி பகுதியி்ல் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந் நாட்டு நேரப்படி காலை 7.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவானது.

இப் பகுதியி்ல் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை பலியானது நினைவுகூறத்தக்கது.

ஜப்பானிலும்

இதற்கிடையே நேற்று மாலை 4.20 மணியளவில் ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமாமி ஒஷிமா கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 புள்ளிகளாகப் பதிவானது. கடலுக்கடியில் 45 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட பாதிப்பு ஏதும் ஏற்படவில்

விரைவில் 8 புதிய ரயில்கள்

தமிழகத்தில் விரைவில் 8 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்த முழு விவரம்...

- நெல்லை - பிலாஸ்பூர் இடையே விரைவில் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து செவ்வாய்கிழமை தோறும் காலை 8.10 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2787) வியாழக்கிழமை காலை 5.05 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

இதேபோல், நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2788) மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூரை சென்றடையும்.

- நெல்லை - ஹபா இடையே வாரம் இருமுறை ரயில் இயக்கப்படுகிறது. ஹபாவில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் (2998), ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

இதேபோல், நெல்லையில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் (2997), புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 2.10 மணிக்கு ஹபாவை சென்றடையும்.

- ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே வாரம் 3 முறை அதிவேக ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சனி, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (2789), ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4.05 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.

இதேபோல், கன்னியாகுமரி யில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் (2790), திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.

- கோவையில் இருந்து சோரனூர் இடையே ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வார நாட்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து தினமும் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் (605), மதியம் 12.35 மணிக்கு சோரனூரை சென்றடைகிறது.

இதேபோல், சோரனூரில் இருந்து தினமும் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் (606), மாலை 5.30 மணிக்கு கோவையை வந்தடையும்.

இவை தவிர சோரனூர் - நிலாம்பூர், எஸ்வந்த்பூர் - கொச்சுவேலி, மட்கான் - எர்ணாகுளம், மங்களூர் - கொச்சுவேலி இடையேயும் வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இவை தவிர 6 ரயில்களின் தூரத்தை ரயில்வே நீட்டித்துள்ளது.

அந்த விவரம்...

- மங்களூர் - சென்னை சென்டிரல் வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படுகிறது. இது
சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

- ஜம்முதாவி - மதுரை - ஜம்முதாவி வாரம் 2 முறை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை செல்வதற்கு இணைப்பு ரயிலாக நீட்டிக்கப்படுகிறது. இது விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

- எர்ணாகுளம் - திருச்சி - எர்ணாகுளம் தினசரி எக்ஸ்பிரஸ் நாகூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் நிலையங்களில் நின்று செல்லும்.

- திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே தினசரி இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு வரையிலும், யஸ்வந்த்பூர் - மங்களூர் சென்டிரல் - எஸ்வந்த்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணூர் வரையிலும், எர்ணாகுளம் - ஜெய்ப்பூர் - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆஜ்மீர் வரையிலும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் தமிழக ரயில்களின் நேரம் மாற்றம்

பாண்டியன், வைகை, முத்துநகர், அனந்தபுரி, லால்பாக் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அப்போது பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்ட விவரம் வெளியிடப்பட்டது. இந்த மாற்றங்கள் நவம்பர் 1ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது.

புறப்படும் நேரம் மாற்றம் குறித்த முழு விவரம்:

சென்னை சென்டிரல் ரயில்கள்...

- தன்பாத்-டாடா - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் காலை 3.45 மணிக்கு பதில் 20 நிமிடம் முன்னதாக 3.25 மணிக்கு புறப்படும்.

- குவஹாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.

- குவஹாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.

- குவஹாத்தி - எர்ணாகுளம் சந்திப்பு எக்ஸ்பிரஸ் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.

- திருவனந்தபுரம் - குவஹாத்தி எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.

- பெங்களூர் - குவஹாத்தி எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.

- எர்ணாகுளம் சந்திப்பு - பாட்னா எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.

கோவை எக்ஸ்பிரஸ்...

- ஜெய்ப்பூர் - கோவை எக்ஸ்பிரஸ் காலை 11 மணிக்கு பதில் 50 நிமிடம் முன்னதாக 10.10 மணிக்கு புறப்படும்.

- சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் மதியம் 1.20 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 1.35 மணிக்கு புறப்படும்.

- சென்னை - வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் மதியம் 1.40 மணிக்கு பதில் 30 நிமிடம் தாமதமாக 2.10 மணிக்கு புறப்படும்.

- சென்னை - ஹூப்ளி எக்ஸ்பிரஸ் மதியம் 1.40 மணிக்கு பதில் 30 நிமிடம் தாமதமாக 2.10 மணிக்கு புறப்படும்.

- பெங்களூர் - தர்பங்கா பக்மடி எக்ஸ்பிரஸ் மதியம் 3.25 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3.30 மணிக்கு புறப்படும்.

- பெங்களூர் - பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் மதியம் 3.25 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3.30 மணிக்கு புறப்படும்.

லால்பாக் எக்ஸ்பிரஸ்...

- சென்னை - பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ் மதியம் 3.30 மணிக்கு பதிலாக 3.35 மணிக்கு புறப்படும்.

- சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மாலை 4 மணிக்கு பதில் 35 நிமிடம் முன்னதாக 3.25 மணிக்கு புறப்படும்.

- சென்னை - கூடூர் பயணிகள் ரெயில் மாலை 4.10 மணிக்கு பதிலாக 4 மணிக்கே புறப்படும்.

- சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (செவ்வாய் தவிர) மாலை 5 மணிக்கு பதிலாக 4.10 மணிக்கே புறப்படும்.

- சென்னை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.

- சென்னை - கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.

- கோவை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்...

- சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மாலை 6.05 மணிக்கு பதில் 10 நிமிடம் தாமதமாக 6.15 மணிக்கு புறப்படும்.

- சென்னை - திருவனந்தபுரம் மெயில் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7.45 மணிக்கே புறப்படும்.

- சென்னை - மங்களூர் மெயில் இரவு 8.15 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கே புறப்படும்.

- சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் இரவு 10.20 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கு புறப்படும்.

ஏற்காடு எக்ஸ்பிரஸ்...

- சென்னை - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் இரவு 10.30 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும்.

- ஆலப்புழா - டாடா-தன்பத் எக்ஸ்பிரஸ் இரவு 10.35 மணிக்கு பதில் இரவு 11 மணிக்கு புறப்படும்.

- திருவனந்தபுரம் - கோரக்பூர் எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

- திருவனந்தபுரம் - கோர்பா எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

- எர்ணாகுளம் - பராணி எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

- திருவனந்தபுரம் - இந்தூர் எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

ஹவுரா மெயில்...

- சென்னை - ஹவுரா மெயில் இரவு 11.35 மணிக்கு பதிலாக 11.40 மணிக்கு புறப்படும்.

- கோரக்பூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

- கோர்வா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

- பராணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

- இந்தூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

வைகை எக்ஸ்பிரஸ்

- சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 12.25 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 12.40 மணிக்கு புறப்படும்.

- சென்னை - திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ் மதியம் 3.30 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 3.45 மணிக்கு புறப்படும்.

- நிஜாமுதின் - மதுரை தமிழ்நாடு சம்பக்கிராந்தி எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு பதில் 6.35 மணிக்கே புறப்படும்.

- நிஜாமுதின் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு பதில் 6.35 மணிக்கே புறப்படும்.

- சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.05 மணிக்கு பதிலாக 7.15 மணிக்கு புறப்படும்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்...

- சென்னை - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.35 மணிக்கு புறப்படும்.

- ஹவுரா - திருச்சி எக்ஸ்பிரஸ் இரவு 8.25 மணிக்கு பதிலாக 8.20 மணிக்கே புறப்படும்.

- ஹவுரா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரவு 8.25 மணிக்கு பதிலாக 8.20 மணிக்கே புறப்படும்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ்...

- சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரவு 9.40 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும்.

- சென்னை - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை) மாலை 3.40 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் முன்னதாக 2.40 மணிக்கே புறப்படும்.

- சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் இரவு 11.20 மணிக்கு பதிலாக 11 மணிக்கே புறப்படும்.

28 ரயில்களின் வேகம் அதிகரிப்பு...

இதேபோல 28 ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவும் நாளை முதல் அமலுக்கு வரும்.

- விழுப்புரம் - மதுரை பாசஞ்சர் (90 நிமிடம்)

- ராமேஸ்வரம் - ஓக்கா எக்ஸ்பிரஸ் (80 நிமிடம்)

- ஜெய்ப்பூர் - கோவை எக்ஸ்பிரஸ் (75 நிமிடம்)

- ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (75 நிமிடம்)

- டேராடூன்-சண்டிகார் - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (60 நிமிடம்)

- ராஜ்கோட் - கோவை எக்ஸ்பிரஸ் (60 நிமிடம்)

- திருவனந்தபுரம் - கோர்பா எக்ஸ்பிரஸ் (60 நிமிடம்)

- எர்ணாகுளம் - பராணி எக்ஸ்பிரஸ் (35 நிமிடம்)

- எர்ணாகுளம் - புனே எக்ஸ்பிரஸ் (35 நிமிடம்)

- சென்னை சென்டிரல் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (35 நிமிடம்)

- ஜம்முதாவி - கன்னியாகுமரி இம்சாகர் எக்ஸ்பிரஸ் (30 நிமிடம்)

- கோவை - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (30 நிமிடம்)

- சாப்ரா - சென்னை சென்டிரல் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)

- திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (25 நிமிடம்)

- மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் (25 நிமிடம்)

- கொச்சுவேலி - சண்டிகார், கேரளா சம்பக்கிராந்தி எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)

- குவஹாத்தி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)

- திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)

- சென்னை சென்டிரல் - கோவை எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)

- திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)

- ஓக்கா - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)

- மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)

- கொச்சுவேலி - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)

- சென்னை சென்டிரல் - வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)

- எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்)

- திருவனந்தபுரம் - சோரனூர் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்)

- சென்னை சென்டிரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்)

- சென்னை சென்டிரல் - மங்களூர் வெஸ்ட்கோஸ்டு எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்).

831 நடுநிலை பள்ளிகளில் 100 கோடியில் புது கட்டிடங்கள்

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட 831 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 100 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகிறது என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. செயல் வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறைகளை வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு ரூ.863 கோடி பட்ஜெட்டில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டில் 831 தொடக்க பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கும் புதிய பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கும் ரூ.100 கோடி ஓதுக்கப்படுகிறது.

மாவட்டத்துக்கு 2 வீதம் 60 கணிணி மையங்கள் அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 நாள் கணிணி பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 37, 456 பள்ளிகளில் செய்லவழி கற்றல் நடைமுறையில் உள்ளது.

இவற்றிற்காக 45 ஆயிரம் செயல் வழி கற்றல் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. 4 வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் கற்றல் அட்டைகள் வழங்கப்படும் என்றார் அவர்.

டெல்லி காமன்வெல்த் போட்டி

டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்கான ஜோதியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இங்கிலாந்து ராணி எலிசபெத்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இதற்கான நிகழ்ச்சி லண்டனில் கோலாகலமாக நடந்தது. அப்போது காமன்வெல்த் போட்டிக்கான ஜோதியை கான்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் மைக்கேல் பென்னல், ராணி எலிசபெத்திடம் கொடுத்தார். அதை வாங்கிய எலிசபெத், பிரதீபா பாட்டீலிடம் வழங்கினார். அவர் அதைப் பெற்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லிடம் ஒப்படைத்தார். அவர் அதை, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் கொடுத்தார்.

கல்மாடி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவிடம் கொடுத்தார். இதையடுத்து ஜோதி ஓட்டம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ், இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மான்டி பனீசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக ஜோதி ஓட்டம் காமன்வெல்த் நாடுகளில் நடைபெறுவது வழக்கம். காமன்வெல்த் போட்டிகள் தொடங்கிய (முதல் போட்டி கார்டிப் நகரில் நடந்தது) நாள் முதலே இது நடைமுறையில் இருந்து வருகிறது.

காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாட்டிடம் ஜோதியை இங்கிலாந்து ராணி வழங்குவார்.

முன்னதாக பக்கிங்காம் அரண்மனையில் நடந்த கலை நிகழ்ச்சியில் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும், விளையாட்டு ப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி ராணி எலிசபெத்தின் விடுத்த செய்தி இடம் பெற்ற மடல், 18 காரட் தங்கத்தால் ஆன பனை இலை வடிவில் குடியரசுத் தலைவரிடம் தரப்பட்டது.

காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாட்டின் தலைவரிடம் இங்கிலாந்து ராணி போட்டி ஜோதியை ஒப்படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காமன்வெல்த் போட்டி...

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது காமன்வெல்த் போட்டி.

2010ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை
டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 71 நாடுகள் இதில் கலந்து கொள்கின்றன.

காமன்வெல்த் போட்டி ஜோதி ஓட்டம், இந்த 71 நாடுகளில் தரை, வான் மற்றும் நீர் வழியாக 240 நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கும் ஜோதி ஓட்டம் டெல்லியில் நிறைவடைகிறது.

இந்தியாவில், 28 மாநிலங்களில் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ஓட்டம் நடக்கிறது. டெல்லியில் அக். 3ம் தேதி நடக்கவுள்ள பிரம்மாண்டமான தொடக்க நிகழ்ச்சியின்போது நேரு ஸ்டேடியத்தில் காமன்வெல்த் சுடர் ஏற்றப்படும்.

17 வயது சிறுமியை மணந்த 112 வயது தாத்தா

சோமாலியாவைச் சேர்ந்த 112 வயது நபர், 17 வயதே ஆன சிறுமியை கல்யாணம் செய்த கொடுமை நடந்துள்ளது. இந்த அக்கிரமக் கல்யாணத்துக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து வாழ்த்தி ஆசிர்வாதம் செய்து விட்டுப் போயுள்ளனர்.

அந்த கொடூரத் தாத்தாவின் பெயர் அகமது முகம்மது டோரே. இவருக்கு 112 வயதாகிறதாம். ஏற்கனவே ஐந்து கல்யாணம் செய்தவரான இவருக்கு 18 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 17 வயதேயான சபீயா அப்துல்லா என்ற சிறுமியை தற்போது மணந்துள்ளார்.

இதுகுறித்து டோரே கூறுகையில், எனது கனவை இன்று கடவுள் நனவாக்கி விட்டார். சபியாவை பிறந்தது முதலே எனக்குத் தெரியும். அவரைக் கல்யாணம் செய்ய வேண்டும் என விரும்பினேன். வயதுக்கு வரும் வரை காத்திருந்து இப்போது கல்யாணம் செய்துள்ளேன் என்கிறார் பெருமையுடன்.

புதுக் கணவருடன் சபியா சந்தோஷமாக இருப்பதாக அவரது பெற்றோர் பெருமையுடன் கூறுகின்றனர்.

தாத்தா தொடர்ந்து கூறுகையில், நான் சபியாவை வற்புறுத்தவில்லை. எனது அனுபவத்தை பயன்படுத்தி, அவர் மீதான எனது காதலை பக்குவமாக தெரியப்படுத்தி சம்மதிக்க வைத்தேன் என்றும் பூரிப்போடு கூறுகிறார்.

இந்தக் கல்யாணக் கூத்து நடந்த பகுதியின் பெயர் குரிசீல். இப்பகுதியில் இதுவரை இப்படி ஒரு கல்யாணமே நடந்ததில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.

ஓடும் பஸ்சி்ல் டிரைவருக்கு திடீர் வலிப்பு

விழுப்புரத்தில் அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய் தாக்கியதால் அவர் செயலிழந்தார். ஆனாலும் அவர் சிரமப்பட்ட பஸ்ஸை நிறுத்திவிட்டதால் பயணிகள் தப்பினர்.

விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூருக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்சை டிரைவர் மனோகர் (49) என்பவர் ஓட்டிச் சென்றார்.

விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகே சென்றபோது டிரைவருக்கு திடீரென வலிப்பு தாக்கியது. இதனால் அவர் செயலிழந்து போனாலும் பெரும் சிரமப்பட்டு பஸ்சை நிறுத்திவிட்டார்.

அரசு மருத்துவமனை அருகிலேயே பஸ் நின்றதால் உடனே பயணிகள் அவரை அங்கு சேர்த்தனர்.

இது குறித்து விழுப்புரம் காவல் நிலையத்திற்கும், போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுக்கம் தகவல் தரப்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாருமே வரவில்லை.

விபத்து நடந்து உயிர் பலிகள் ஏற்பட்டால் தான் வர வேண்டுமா?.

மின்னலுக்கு 2 பேர் பலி

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மின்னல் தாக்கி 2 பேர் இறந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிக்கு ஒட்டியுள்ள இலங்கை, தமிழ்நாடு, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இதனால், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியில் அனேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஓரிரு கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள்...

நேற்று மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

நேற்று 2-வது நாளாகவும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

நேற்று மதியம் 1.45 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்தது. பின்னர் லேசானதூறலுடன் காணப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு 17 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இது நேற்று காலை 12 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 3 மணியளவில் 8 ஆயிரம் கனஅடியாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.06 அடியாக இருந்தது.

திருச்சியில் சூறாவளி - மழை...

திருச்சியில் நேற்று பிற்பகல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருச்சியை அடுத்த நத்தமாடிபட்டி பகுதியிலும் நேற்று மதியம் இடி மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது நத்தமாடிபட்டி மேலத்தெருவை சேர்ந்த தாமஸ் (40) என்ற விவசாயி தனது வயலில் நடந்து வந்த நாற்று நடவு பணிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். திடீர் என மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. அரியலூரில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

மரத்தடியில் நின்றவர் பலி...

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (53). நேற்று பிற்பகல் 3 மணிக்கு கே.ஆலங்குளத்துக்கு சென்றார். அங்கு ரேஷன் கடை அருகே உள்ள மரத்தடியில் நின்றபோது மின்னல் தாக்கியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் ஆகிய இடங்களில் நேற்று காலை லேசான மழை பெய்தது. அதன்பின்னர் விட்டு, விட்டு மழை தூறிக் கொண்டே இருந்தது.

வால்பாறை பகுதியில் நேற்று காலை முதலே கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குமரியில் விடிய விடிய மழை...

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்தது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், அருமனை, களியக்காவிளை, கொல்லங்கோடு, கருங்கல் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. பெருஞ்சாணி அணை மூடப்பட்டது.

அணைகளில் நீர்மட்டம் உயர்வு:

நெல்லை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

மழை காரணமாக மாவட்டத்தில் கிணறுகள், கால்வாய்கள், அணைகளில் நீர் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரி்த்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணை 64.90 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 370 கனஅடி தண்ணீர் வருகிறது. 1398 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மணிமுத்தாறு அணையில் 57.70 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

சேர்வலாறு அணையில் 63.15 அடி நீர்மட்டம் உள்ளது. தொடர்ந்து அணைபகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணைகளில் மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுமியரை வெட்டிய சட்ட மாணவர்

மதுரை அருகே பள்ளி மாணவ-மாணவிகள் 9 பேரை சட்டக் கல்லூரி மாணவர் வழிமறித்து அரிவாளால் வெட்டினார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள நகரி பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகன் விஜய பிரதீப், சென்னை சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருடைய அக்கா மகன் சுமன், நகரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார். சில நாட்களுக்கு முன் சுமனை அவருடன் படிக்கும் சில மாணவர்கள் தாக்கினர்.

இது குறித்து சுமன் தனது மாமா விஜய பிரதீப்பிடம் கூறவே ஆத்திரமடைந்த அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பிய புவனேஸ்வரி (9), மாரீஸ்வரி (11), வினிதா (11), விவேக் (12), மணிராஜ் (9), தினேஷ்குமார் (9), தியாகு (9), குமார் (9) உள்பட 9 பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயடைந்த 9 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போகிறபோக்கி அங்கிருந்த மலைச்சாமி என்பவரின் டீக் கடையையும், வீட்டையும் விஜய பிரதீப் தாக்கி சூறையாடினார்.

இதையடுத்து விஜய பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.

30ஆண்டுக்கு பிறகு அடக்கம்.

சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 1979-ம் ஆண்டு நர்சாக பணியாற்றி வந்தவர் ஹெலன் ஸ்மித். இவர் கட்டிடம் ஒன்றில் தவறி விழுந்து உயிர் இழந்தார். அப்போது அவரது வயது 23. ஆனால் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை ரான்ஸ்மித் புகார் செய்தார். ஹெலன்ஸ்மித் டென்மார்க் கப்பல் கேப்டன் ஒருவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் புகார் கூறினார்.

எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என வற்புறுத்தி வந்தார். இதனால் ஹெலன் உடல் அடக்கம் செய்யப்படாமலே 30 ஆண்டுகளாக சவுதி அரேபியா ஆஸ்பத்திரி பிண அறையிலேயே வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலை அக்கம் செய்யும்படி தந்தையிடம் சொன்னதற்கு அதை ஏற்க மறுத்து விட்டார். இப்போது தந்தை ரான் ஸ்மித்துக்கு 83 வயதாகி விட்டது. உடல் நலமும் குன்றி விட்டது. இதையடுத்து அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு மகள் உடலை பெற்று அடக்கம் செய்ய முன் வந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை

முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை நடந்தது.இன்று நடக்கும் பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க காலையில் முதலமை‌ச்சர் கருணாநிதி செல்ல திட்டமிட்டிருந்தார்.இந்த நிலையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மரு‌த்துவமனைக்கு சென்று அங்கு வழக்கமான உடல்நல பரிசோதனை செய்து கொண்டார்.உடல் பரிசோதனைக்குப் பின் அங்கு சிறிது நேரம் ஓய்வுஎடுத்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கி‌ன்றன.

மதராசாக்களில் ஹிந்து மானவர்கள் !!!


உத்தர் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்துக்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரசாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.


இஸ்லாமியா அராபியா ஆலிமுல் உலூம் என்ற மதரசாவில் முஸ்லீம் மாணவர்களுக்கு அரபி மற்றும் உர்துவும் இந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரப் படுகின்றது. இந்த மதரசா உ.பி யின் பாரபங்கி பகுதியில் உள்ளது.இந்த ஆய்வறிக்கையை லக்னோவை மையமாக கொண்டு செயல்படும் Better Education through Innovation (BETI) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஐந்து மதரசாக்களில் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மதரசாக்களும் அரசு உதவியின்றி அப்பகுதி மக்களின் பொருளாதார உதவியைக்கொண்டும், நன்கொடைகள் மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை கொண்டுமே நடத்தப் பட்டு வருகின்றன.


இந்த ஐந்து மதரசாக்களில் மூன்று மார்க்கக் கல்வியை தவிர உலக கல்வியையும் கற்றுத் தருகின்றன.UNICEF -இன் தலைவர் வினோபா கவுதம் இது பற்றி கூறுகையில், "மதரசாக்கள் குழந்தைகளுக்கு ஒரு முழுமையான கல்வியின் சூழலை உருவாக்கி தருகின்றது. இது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும்.


இது போன்ற கல்விச் சூழல் கல்வி கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்" என்று கூறினார்.UNICEF சார்பில் கவுதம் இந்த மதரசாக்களை தான் அடிக்கடி பார்வையிட்டு வருவதாகவும் அதற்கான புத்தகங்களை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இவர்களும் குழந்தை தொழிலாளர்களா?

சென்னையில் குழந்தைகளை வைத்து பெற்றோர்களே பிச்சை எடுக்கும் தொழிலை செய்கிறார்கள். தினமும் ரூ.1,000 வருமானம் வருவதாக பெண் போலீசாரிடம் பிடிபட்ட 2 குழந்தைகள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பிச்சை எடுப்பவர்களை வேட்டையாடி பிடித்து, அதற்கான இல்லங்களில் ஒப்படைக்க வேண்டுமென்று அரசு கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காக பூந்தமல்லியில் அரசு தனி விடுதியே நடத்தி வருகிறது. போலீசார் பிச்சை எடுப்பவர்களை வேட்டையாடி பிடித்து அரசின் மறுவாழ்வு விடுதிக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கிறார்கள்.

பிச்சை எடுப்பவர்களை வேட்டையாடி தனி படை இயங்கி வருகிறது.
நேற்று காலையில் இன்ஸ்பெக்டர் இன்பகுமார் தலைமையில் பெண் போலீசார் வேடியம்மாள், வரலட்சுமி ஆகியோர் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர்களை கண்காணித்தபடி நின்றனர்.
அப்போது ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் மேளம் அடித்து பாட்டுப்பாடியபடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். மாறுவேட போலீசாரை பார்த்ததும் அவர்கள் இருவரும் மின்சார ரெயிலில் ஏறி தப்பி ஓடினார்கள்.

அதே ரெயிலில் பெண் போலீசார் விரட்டி சென்றனர். எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது ரெயிலை விட்டு இறங்கி பிச்சை எடுத்த சிறுவனும், சிறுமியும் தப்பி ஓட பார்த்தார்கள். அவர்கள் இருவரையும் பெண் போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே அவர்கள் இருவரும் கதறி அழுதனர்.
விசாரணையில் சிறுவனின் பெயர் அஜய் (வயது 5) என்றும், சிறுமியின் பெயர் சோனாபாய் (10) என்றும் தெரிய வந்தது. அவர்கள் மீஞ்சூரில் பெற்றோருடன் வசிப்பதாக தெரிவித்தனர்.

விசாரணையில் அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் கூறினார்கள். பெற்றோரே தங்களை படிக்க வைக்காமல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினார்கள். அவர்களது அப்பாவும், அம்மாவும், 2 சகோதரர்களும் பிச்சை எடுப்பதாக தெரிவித்தனர்.

பிச்சை கலாசாரத்தை ஒழிப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் இது போன்றநிகழ்வுகளை கிரீம்ஸ்ரோடு,மன்னடி போன்ற வெளிநாட்டவர் வந்துபோகும் இடங்களில் இவர்கள் தரும் தொல்லைகள் ஏராளம்... கொஞ்சம் இந்தஏரியாவையும் விஸிட் பன்னுங்க.

சிறுவனுக்கு அவசரமாக இரத்தம் தேவை

10 வயது சிறுவன் இருதய சத்திர சிகிச்சைக்காக சென்னை மெரியட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டே சிகிச்சைக்கான நிதியை சேகரித்து அங்கு வந்துள்ளனர்.
தற்போது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சிறுவனுக்கு அவசரமாக O Possitive fresh Blood ஏற்றப்பட வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ள சிறுவனின் தகப்பனுக்கு யாரிடம் போய் கேட்பது என்ன செய்வதென்று புரியாமல் உள்ளார்.
எனவே அல்லாஹ்வுக்காக இச்சிறுவனின் தேவையைப் பூர்த்தி செய்ய சகோதரர்கள் முன்வந்து இரத்த தானம் செய்து உதவுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.
சகோதரர்கள் அங்கிருக்கும் முஹம்மட் பைசல் எனும் சிறுவனின் தகப்பனுடன்
00918056127827
என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களால் முடியுமான உதவியைச் செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் சிறுவனின் சிகிச்சை வெற்றிபெற்று பூரண சுகமடைய அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறும் வேண்டுகிறேன்.

ஆஸியை வீழ்த்திய இந்தியா

நாக்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியி்ல் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. டோணி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாக்பூரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது.

முதலில் இந்தியா பேட் செய்தது. ஷேவாக் 40, கம்பீர் 76, யுவராஜ் சிங் 23 ரன்களைக் குவித்தனர். சச்சின் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

கேப்டன் டோணி ஆஸ்திரேலிய பந்து வீச்சை தவிடுபொடியாக்கி ரன்களைக் குவித்தார். 107 பந்துகளைச் சந்தித்த அவர் 124 ரன்களைக் குவித்தார். சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு 62 ரன்கள் குவித்தார்.

இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களைக் குவித்தது.

இமாலய ஸ்கோரை துரத்தும் பணியை ஆஸ்திரேலியா தடுமாற்றத்துடன் தொடங்கியது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு வித்திட்டனர்.

வாட்சன் 19, பெய்ன் 8, பான்டிங் 12, காமரூன் ஒயிட் 23 எடுத்தனர். மைக் ஹஸ்ஸி மட்டும் தாக்குப் பிடித்து 53 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 48.3 ஓவர்களி்ல் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலியா 255 ரன்களில் சுருண்டது.

ஆட்ட நாயகனாக டோணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த போட்டி டெல்லியில் 31ம் தேதி பகல் இரவு போட்டியாக நடைபெறும்.

டோணியின் சாதனைகள்..

நேற்றைய போட்டியில் சில சாதனைகளை நிகழ்த்தினார் டோணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்பது முதல் சாதனை.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த கேப்டன் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. முன்பு ஜெயசூர்யாவிடம் (122) இந்த சாதனை இருந்தது.

அடுத்து, ஆஸ்திரேலியா வுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் டோணிக்குக் கிடைத்தது. முன்பு பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் இதை வைத்திருந்தார்.

செப்பேடு கண்காட்சி

""மக்களிடையே பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, செப்பேடு கண்காட்சி உதவும்,'' என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சென்னை எழும்பூர், அரசு அருங்காட்சியக அரங்கில், அரசர்கள் ஆட்சி செய்த கால அரசியல் மற்றும் வரலாற்றுச் செய்திகளின் பதிவுகளைத் தாங்கிய செப்பேடுகள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
பண்டைய காலத்து வரலாறுகளை நினைவு கூறும் செப்பேடுகளை, தொல்லியல் துறை சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. நாணயங்கள் கண்காட்சியைத் தொடர்ந்து, செப்பேடுகள் பற்றிய கண்காட்சியை நடத்துவது சிறப்பு. சோழ, பாண்டிய, பல்லவர் உள்ளிட்ட அரசர்களின் வரலாற்றை விளக்கும் செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசர்களின் ஆட்சி முறை, கொடை, நிபந்தனைகள் பற்றி விளக்கும் வரலாற்று ஆவணமாக இந்த செப்பேடுகள் விளங்குகின்றன. பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்த கண்காட்சி உதவும். இவ்வாறு அமைச்சர் பேசினார். தொல்லியியல் துறை ஓய்வு பெற்ற இயக்குனர் நாகசுவாமி, செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள எழுத்துகள் கூறும் வரலாற்றை பார்வையாளர்களுக்கு விளக்கினார். ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியதற்கான விவரம் அடங்கிய செப்பேடுகள், தஞ்சை தமிழ்ச் சங்கத்தில் இருந்து பெறப்பட்ட கரந்தை பகுதி செப்பேடுகள் மற்றும் நடனத்தில் காளியை வென்ற சிவன் பற்றிய வரலாறு கூறும் திருவாலங்காடு செப்பேடுகள் உள்ளிட்ட ஏராளமான புராதனமான செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், இன்று முதல் நவம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்கலாம்.

புதிய பேருந்துகள்

சென்னை மாநகரில் ஓடும் 200 பழைய பஸ்களுக்குப் பதிலாக இன்று முதல் புதிய பஸ்கள் விடப்படவுள்ளன.

இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பஸ்களை இயக்கி வைக்கிறார்.

சென்னை மாநகரில் தினமும் 3,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் விடவும், புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்கவும், ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் கூடுதல் பஸ் வசதி அளிக்கவும் 1,000 புதிய பஸ்கள் வாங்கப்படுகி்ன்றன.

இதில் முதல் கட்டமாக 200 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை இன்று இயக்கப்படுகின்றன. இன்று அறிமுகப்படுத்தப்படும் 200 பஸ்களும் பழைய பஸ்களுக்கு பதிலாக இயக்கப்படுகின்றன.

மேலும் 800 பஸ்கள் டிசம்பர் மாதத்திற்குள் இயக்கப்படவுள்ளன.

'பொள்ளாச்சி' விளம்பரம்- ஸ்டாலின் கிண்டல்!

திமுகஅரசு விழாவுக்கு அதிமுகஎம்.எல்.ஏ. ஒருவர் முழுப் பக்க விளம்பரம் செய்துள்ளாரே என்று நினைத்து பெருமைப்படுகின்றேன். அவர்களும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். அதனால் விளம்பரம் கொடுத்து இருக்கலாம் என்று, பொள்ளாச்சியில் நடந்த விழாவில் ஸ்டாலின் பேசினார்.

பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிநீர் திட்டம், குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்கான திறப்பு விழாவும், பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ள உள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் ரூ. 260 கோடி மதிப்பிலான 4,684 திட்டப் பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,

பொள்ளாச்சியில் 2007, நவம்பரில் இந்த திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இரண்டு ஆண்டுக்குள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று திறப்பு விழா நடத்தப்படுகிறது.

ஆனால், பொள்ளாச்சி தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயராமன், இந்த திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்று கூறி பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளார். அவரது இந்த செயல் எனக்கு சிரிப்பை ஏற்படுத்துகிறது.

திமுகஅரசு விழாவுக்கு அதிமுகஎம்.எல்.ஏ. ஒருவர் முழுப் பக்க விளம்பரம் செய்துள்ளாரே என்று நினைத்து பெருமைப்பட்டேன். அவர்களும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். அதனால் விளம்பரம் கொடுத்து இருக்கலாம்.

இதனால், அந்த எம்எல்ஏ நிலை என்னவாகப் போகிறதோ? அவர்கள் இந்த விழாவுக்கு வரவில்லை என்றாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

தமிழனை தேடி கொண்டிருக்கிறேன்-ராமதாஸ்

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனத்தில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழப் பிரச்சனைக்காக இந்த இயக்கம் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒரு ஆண்டாக நாம் போராடிய போதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை. தமிழனையே தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

''தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்?'' என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர். மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர்.

இலங்கை பிரச்சனைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் இல்லை.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி அல்ல.

இலங்கை பிரச்சனையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எதிர்க் கட்சியாக இருந்த திமுக, இலங்கை பிரச்சனைக்காக எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன?.

பிகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால் பிகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால், தமிழர்களிடையே ஒற்றுமை கிடையாது.

விடுதலைப் போர் என்றைக்கும் முடிவுக்கு வராது. விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும் என்றார்.

ராடவன் கராட்சிக்கின் விசாரணை இன்று துவங்கியது


போஸ்னியாவின் சர்வதேச குற்றவாளியான ராடவன் கராட்சிக் மீதான விசாரணை இன்று ஹாலந்தின் கேக் நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் துவங்கியது.தன்மீதுள்ள வழக்கை ஆரம்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டார், ஆனாலும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கவில்லை.1995ல் நடந்த இனப்படுகொலையில் 8,000 க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்தார் என்பது இவர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டாகும்.
மனிதஇனத்திற்கு எதிராக நடந்து கொண்டமை, போர் விதிகளை அப்பட்டமாக மீறியமை, மனிதஇன படுகொலை, மனிதத்தன்மையற்ற பெரும் கொலையாளி ஒரு இனத்தின் தலைவனாக இருந்தமை போன்ற 11 குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.இந்த அத்தனை குற்றங்களையும் ராடவன் கராட்சிக் நிராகரித்துள்ளார்.
கடந்த 12 வருடங்களாக தேடப்பட்டு வந்த ராடவன் கராட்சிக் 2008 ஜுலை மாதம் பயோகாட் நகரில் பிடிபட்டார்.ஒரு வருடம் கழித்து இப்போது தான் விசாரணை துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்குள் மழை !!!

தமிழகத்தில் இதோ, அதோ என்று போக்கு காட்டிய வடகிழக்கு பருவமழை, காலதாமதமாக துவங்கியுள்ளது. நீண்ட நாட்களாக கடும் வெயில் காய்ந்து வந்த நிலையில், திடீரென நேற்றைய வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சென்னை நகரில் நேற்று பல பகுதிகளில், "சில்'லென மழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.பொதுவாக அக்டோபர் மாதம் பருவமழை துவங்கிவிடும். வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி துவங்கும் என, டில்லி வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், குறித்த தேதி கடந்த பிறகும் மழை பெய்வதற்கான அறிகுறி தென்படவில்லை.

தொடர்ந்து கடும் வெப்பநிலையே நிலவியது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். கோடை காலம் கடந்தும், 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது. இந்நிலையில், நேற்றைய வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. காய்ந்து கிடந்த சென்னை நகரில், நேற்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னை மட்டுமில்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில் 13 மி.மீ., மற்றும் மீனம்பாக்கம் 3 மி.மீ., மழை பெய்தது.

இவ்வளவு நாளாக போக்குகாட்டிய பருவமழை, மிகவும் காலதாமதமாக துவங்கியுள்ளது. இதை, வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் உறுதி செய்தனர். இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி குழந்தைவேலு கூறியதாவது: பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி துவங்கும். 1984, 1988, 1992, 2000 ஆகிய ஆண்டுகளில் நவம்பரில் பெய்தது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வடகிழக்குப் பருவமழை துவங்கும் அறிகுறி இன்றி காணப்பட்டது. தற்போது, பருவமழை துவங்கி விட்டது என்பதன் அடையாளமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. வங்காள விரிகுடாவில், வலு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மட்டுமின்றி வடமாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். வங்காள விரிகுடாவில் இந்த காற்றழுத்தம் மேற்கொண்டு வலுவடைந்தால், பலத்த மழையை எதிர்பார்க்கலாம். பருவமழை தாமதமாக துவங்கினாலும், இந்தாண்டு வழக்கமான மழை அளவு இருக்கும்.

வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி !

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் திட்டக்குடி, நாட்டுச்சாலை, தம்பிக்கோட் டை வடகாடு வார்டுகளு க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.15 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஒன்றியக்குழு தலை வர் கூறினார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்கூட் டம் தலைவர் ரஞ்சனாதேவிமுருகப்பன் தலைமையில் நேற்று நடந் தது. ஆணையர் பானுமதி, வட்டார வளர் ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சசிகலா, மேலாளர் கூத்தரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் பிரபாகரன், அறிவானந்தம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கனிமொழிராஜா பேசுகையில், தம்பிக்கோட்டைவடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மருத்துவர் 5 நிமிடங்கள் மட்டுமே பணி செய்கிறார். இதை பல கூட்டங்களில் நான் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். பசுபதிநாகராஜன் பேசுகையில், திருமண உதவித்தொகை காசோலை வழங்கும் போது ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

பாலகிருஷ்ணன் பேசுகையில், ராஜாமடம் வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில் லை என்றார்.ஆரோக்கியசாமி பேசுகையில், வீரக்குறிச்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்க கணக்கெடுப்பு பணி முடிவடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் அடுப்பு வழங்கப்படவில்லை என்றார். அய்யப்பன் பேசுகை யில், கிருஷ்ணாபுரம் அக்ரஹாரத்திலிருந்து மயானத்திற்கு செல்லும் சாலை யை, தார்சாலையாக மாற்ற ரூ. 5 லட்சம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.ஒன்றியக்குழுத் தலைவர் ரஞ்சனாதேவிமுருகப்பன் பேசுகையில், கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேராதது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன்.கிழக்கு கடற்கரை சாலையில் கருங்குளம் அருகில் உள்ள நசுவினி ஆற்றை கடற்கரை வரை தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாரினால் கரை ஓரங்களில் உடைப்புகள் ஏற்படாது என்றார். மேலும் திட்டக்குடி, தம்பிக்கோட்டை வடகாடு, நாட்டுச்சாலை வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 15 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.இதே போல் பொன்னவராயன்கோட்டையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், திலகம், மலர்க்கொடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
முதல்வருக்கு நன்றி
கவுன்சிலர் முருகானந்தம் பேசுகையில், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாட்டுச்சாலை மற்றும் வெண்டாக்கோட்டையில் உள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என்றார். உமாமதியரசு பேசுகையில், அண்ணா விருது பெற்ற தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

கொடி கட்டி பறக்கும் குழந்தை விபச்சாரம்.

அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடுட்ட 52 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் . விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு காரணமான புரோக்கர்கள் 60 பேர் உள்பட 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சமீப காலமாக இந்த பிரச்சனை சற்று கொடி கட்டி பறக்க துவங்கியதுடன் அமெரிக்க போலீசாருக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள தேசிய குழந்தைகள் மீட்பு அமைப்பினர் மூலமாகவும் இது வரை 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது போன்ற செயலுக்கு காரணமானவர்கள் 500 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலிலிருந்து தூத்துக்குடிக்கு, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும், திருச்செந்தூருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரலிலிருந்து தூத்துக்குடிக்கு சேலம், ஈரோடு, மதுரை வழியாக, வரும் நவம்பர் 4ம் தேதியிலிருந்து டிசம்பர் 2ம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0611) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடியிலிருந்து நவம்பர் 5ம் தேதியிலிருந்து டிசம்பர் 3ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0612) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.சென்னை சென்ட்ரல் - திருச்செந்தூர் இடையே சேலம், ஈரோடு , மதுரை வழியாக 31-10-2009 முதல் 05-12-2009 வரை வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் (எண்.0659) சென்ட்ரலிலிருந்து வாரத்தில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். திருச்செந்தூரிலிருந்து நவம்பர் 1ம் தேதியிலிருந்து டிசம்பர் 6ம் தேதி வரை வாரத்தில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0660) பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இச்சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய, இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

குற்றால அருவிகளில் கொட்டுது தண்ணீர்


மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றால மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் அதிகளவு தண்ணீர் கொட்டியது. அதனால், இரு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, போலீசார் தடை விதித்தனர். மழை குறைந்ததால் நேற்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் தண்ணீர் விழுந்தது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இ.குழந்தைவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகம் , கேரளா பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு , இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

திருச்செந்தூரில் 3 செ.மீ.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பூதப்பாடியில் 2 சென்டி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கம், பொன்னேரி, தென்காசி, தக்கலை ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உட்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக 29-ந் தேதி அறிவிக்கப்படலாம் என்றார்.

இன்று அதிகாலையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேகம் சூழ்ந்து லேசான மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர்.

ரெயின் கோட் வி்ற்பனை சூடு பிடித்தது...

நேற்று மாலையே மழை வந்து விட்டதால் சென்னை நகர பிளாட்பாரங்களில் ரெயின் கோட் விற்போர் குவியத் தொடங்கி விட்டனர். மழையிலிருந்து தப்ப மழை வந்தவுடன்தான் ரெயின் கோட் வாங்கும் 'நல்ல' பழக்கம் உடையோர் இவர்களிடம் ரெயின் கோட் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன! மதுரையில் பதற்றம்!

காளையார்கோவில் மருதுபாண்டியர்களின் குருபூஜையையொட்டி, மதுரையின் பல்வேறு பகுதியிலிருந்து காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்திற்கு ஏராளமானோர், வாகனங்களில் சென்றனர் , நேற்று மதியம் 12 மணிக்கு வாகன மேற்கூரை மீது அமர்ந்து போலீஸ் தடையை மீறி சிலர் ஆபத்தான வகையில் பயணித்தனர்.

சிவகங்கை ரோடு செக்-போஸ்ட்டில் அவர்களை போலீசார் தடுத்தனர். வாகனத்திற்குள் அமர்ந்து செல்லுமாறு கூற, ஆத்திரமடைந்த சிலர் போலீஸ் மீது கல்வீசினர். ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் செந்தில் இளந்திரையனுக்கு தொடையிலும், சிறப்பு காவல்படை போலீஸ்காரர் பாலமுருகபூபதிக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். பின், வாகனங்கள் காளையார்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.

மதுரையில் இருந்து வந்த சிலர் படமாத்தூர் அருகே சிவகங்கை - மதுரை பஸ் மீது கல் வீசினர். பஸ் கண்ணாடி சிதறி டிரைவர் முத்துக்குமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. அரசனூர் விலக்கு அருகே மற்றொரு பஸ் மீது கல் வீசியதில் டிரைவர் நாகராஜன் காயம் அடைந்தார். நாட்டரசன்கோட்டை, திருமாஞ்சோலை, பையூரிலும் பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. ஆறு பஸ்கள் சேதமடைந்தன. காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் முன் பணியில் இருந்த தேவகோட்டை டி.எஸ்.பி., முருகேஷ், அஞ்சலி செலுத்த வரிசையாக செல்லுமாறு கூறினார். காரில் வந்த சிலர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டதால் தடியடி நடத்தி கலைத்தனர்.

பிற்பகல் 2 மணிக்கு, சிவகங்கையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய அரசு பஸ்கள் அரை மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டன. பதட்டம் தணிந்த பின் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. மதுரைக்கு மேலூர் வழியாகவும், தொண்டிக்கு சோழபுரம், காளையார்மங்கலம், நடராஜபுரம் வழியாகவும் பஸ்கள் இயக்கப்பட்டன பஸ்கள் மாற்று வழியில் சென்றதால் இடையே உள்ள கிராமத்தினர் பல மணி நேரம் சிவகங்கையில் காத்திருந்தனர். டி.ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், எஸ்.பி., ராஜசேகரன் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்

டான்ஸ் ஆடச் சொல்லி ராக்கிங் - 3 மாணவர்கள் கைது!

திருச்சி அரசு பிசியோதெரஃபி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை டான்ஸ் ஆடச் சொல்லி, அடித்து உதைத்து ராகிங் செய்த 3சீனியர் மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி பெரியமிளகுபாறையில் அரசு பிசியோதெரபி கல்லூரி உள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த கல்லூரியில் எலும்பு மற்றும் முடநீக்கியல் மருத்துவம் தொடர்பாக சுமார் 200 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இது 4 ஆண்டு படிப்பு ஆகும்.

இங்குள்ள விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சங்கர் (17). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி ஆகும். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மாணவர்கள் தன்னை சினிமா பாட்டு பாடி நடனம் ஆடச்சொல்லி ராகிங் செய்ததாகவும் தான் மறுத்ததால் அவர்கள் தன்னை அடித்ததாகவும் தனது தந்தை பழனிச்சாமிக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பழனிச்சாமி திருச்சிக்கு வந்து, கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி டீன் பாலசுப்பிரமணியனிடம் புகார் செய்தார். உடனே இதுபற்றி விசாரணை நடத்த டீன் உத்தரவிட்டார்.

மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் செல்வபாண்டியன், டாக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

இதில் முதலாமாண்டு மாணவர்களான சங்கர், கார்த்திக் , சிவனாண்டி ஆகியோரை நடனம் ஆடச் சொல்லி துன்புறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார் செய்தது. கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணைக்குப் பின்னர் முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை ராகிங் செய்ததாக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பிரகாஷ் (19), தர்மராஜ் (19), நான்காம் ஆண்டு மாணவர் அஜின் (20) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பந்தப்பட்ட 3 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு முடியும் வரை இவர்களால் தேர்வு எழுத முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தி்ல் கோவை பொறியியல் கல்லூரியில் மாணவர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உடனடியாக அனைவரும் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைக்காக பெண் கொலை: கணவர் தற்கொலை

நெல்லை யில் நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டார். மனைவியின் கொடூரமான மரணத்தை தாங்க முடியாத கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து. இவரது மனைவி கோமதி. கடந்த 22ம் தேதி கோமதி வயலுக்கு சென்றபோது 2 பேர் அவரை கொலை செய்து செயினை பறித்தனர்.

கோமதியின் உடலுடன் கல்லைக் கட்டி பிணத்தை அருகில் உள்ள கிணற்றுக்குள் போட்டுவிட்டுத் தப்பினர். இந்த கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மனைவி கொலைக்கு பின் முத்து மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார். வெறுப்படைந்த நிலையிலேயே திரிந்த அவர் இன்று காலை கரையிருப்பு ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

காதலனை தீ வைத்து எரித்த 8ம் வகுப்பு மாணவி

திருத்துறைப்பூண்டி அருகே காதலனை எட்டாவது வகுப்பு மாணவி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஏரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சத்யா (13). 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

பல்லம்கோவில் கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (28). இவர் ஒரு புரோட்டா மாஸ்டர். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

ஆனால் சமீப காலமாக ராமதாஸின் செயல்பாடுகள் பிடிக்காததால், அவரிடமிருந்து விலகத் தொடங்கினார் சத்யா. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ராமதாஸ்.

சத்யாவை சந்திக்க அவரது வீட்டுக்குப் போனார். வீட்டில் யாரும் இல்லை, சத்யா மட்டும் இருந்தார். அவரிடம், என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்னை எதற்காக வெறுத்து ஒதுக்குகிறாய். நீ இல்லாவிட்டால் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

ஆனால் கோபப்பட்ட சத்யா, முதலில் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் வேதனை அடைந்த ராமதாஸ் தீக்குளித்து விட்டார்.

இதுவரை நடந்தது முதலில் போலீஸார் தரப்பில் கூறப்பட்ட தகவல். ஆனால் சத்யாவை தற்போது விசாரித்துள்ள போலீஸார், ராமதாஸ் தானாக தீக்குளிக்கவில்லை, சத்யாதான் அவரை எரித்து விட்டார் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பலத்த தீக்காயத்துடன், தஞ்சை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் ராமதாஸ், மாஜிஸ்திரேட் வனிதாவிடம் இதுகுறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், சத்யா வீட்டுக்கு சென்று திருமணம் செய்ய வற்புறுத்தினேன். இல்லா விட்டால் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்வதாக கூறி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி மிரட்டினேன். ஆனால் அதற்குள் சத்யா நீ உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல் என்று கூறி என் மீது தீ வைத்து விடடார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருத்துறைப் பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்-இன்ஸ்பெக்டர் முரளி, ஏட்டுகள் ரவி, குணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காதலனை உயிரோடு எரித்த சத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலோர மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி

விளாத்திகுளம் வேம்பர் கடற்கரை கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்கும் பணியும், கிராமங்களில் வழக்கமாக வசிப்பவர்களுக்கான அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணியும் இன்று துவங்கியது.

இந்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்க தீர்மானித்தது. நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபரை பற்றிய குறிப்பிட்ட புள்ளி விபரங்களுடன் 15 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய நபர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவை உள்ளடக்கியதாக உள்ளது. இதற்கான புள்ளி விவர சேமிப்பு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்க்கப்பட உள்ளது.

இருப்பினும் கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடற்கரையை ஓட்டி உள்ள 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள கடற்கரை கிராமங்களுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி. அங்கு குடியிருப்பவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி இந்த ஆண்டிலேயே துவக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகா வேம்பார் பெரியசாமிபுரம், கீழ வைப்பார் சிப்பிகுளம், ஆகியவை உள்ளிட்ட கிராமங்களில் 33 கணக்கெடுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேம்பாரில் இன்று முதலாவதாக 10 கணக்கெடுப்பு மையங்களில் இருந்து பணியாளர்கள் வீடு வீடாக சென்று கடலோர கிராம மக்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை கேட்டு பதிவு செய்தனர்.

இன்று வானில் ஒர் அற்புதம்!

இன்று வியாழன் கிரகமும் (Jupiter) நிலவும் பூமிக்கு மிக அருகில் வருவதால் வெறும் கண்களால் இதைக் கண்டு ரசிக்க முடியும்.

இந்த வானில் அற்புதத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை காணலாம்.

தென்-கிழக்கு திசையில் இதை வெறும் கண்களாலேயே காண முடியும்.

ஒன்றுக்கொன்று 3.5 டிகிரி தொலைவில் இந்த நிலவும் வியாழன் கிரகமும் காணப்படும். சூரிய அஸ்தாமானத்துக்குப் பி்ன் சில மணி நேரங்கள் இதைக் காண முடியும்.

தேசிய கராத்தே போட்டிக்கு செல்ல வழியின்றி தவிக்கும் சிறுவன்


மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் நரேஷ்(11). ஆறாவது படித்து வருகிறார். கராத்தே, யோகாவில் ஆர்வமுள்ளவர். பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார். கராத்தே போட்டியில் "கிரீன் பெல்ட்' பெற்றுள்ளார். 11 வயதுக்குட்பட்டோர் போட்டியில் பங்கேற்ற இவர் இருமுறை மாவட்ட விருதும், மூன்று முறை மாநில அளவிலும், இருமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

அடுத்து மும்பையில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக ஜூலையில் செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் பங்கேற்று தேர்வு பெற்றுள்ளார். மும்பையில் "இஷிகாவா கப்' என்ற இப்போட்டி அக். 30 முதல் நவ. 2 வரை நடக்க உள்ளது. ஆனால் நரேஷ் மும்பை செல்ல தேவையான பணமில்லாததால் வேதனையில் தவிக்கிறார். அவரது தந்தை ஜெராக்ஸ் பிரதிகள் எடுக்கும் பணி செய்து வருகிறார். "தேசிய விருதுகளை பெற்றும் மேலும் தேசிய போட்டியில் பங்கேற்க இயலாமல் போய்விடுமோ என வருத்தமாக உள்ளது' என்றார். இவரை 98420 58467 ல் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் இணையதள மாநாடு

கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் சேர்த்து தமிழ இணையதள மாநாட்டை நடத்த முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனியின் கொலோன் நகரில் அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை 8வது தமிழ் இணையதள மாநாடு நடந்தது. இதில் மு. அனந்தகிருஷ்ணன் பங்கேற்றார்.

கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பண்பாடு, வரலாறு, இலக்கியத் துறை மற்றும் தமிழ் துறை (ஐ.ஐ.டி.எஸ்.) சார்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து , ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா , கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் மாநாட்டில் பங்கேற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு அரசு குழுவின் தலைவருமான ஆனந்தகிருஷ்ணன், கொலோன் பல்கலைக்கழகத்தின் தத்துவ இயல் துறை முதல்வர் பொன்கார்ட்ஸ் ஆகியோர் மாநாட்டுக்கு முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் அனந்தகிருஷ்ணன் பேசுகையில்,

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றில் தமிழ் மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான திட்டங்கள் 100-க்கும் குறைவாகவே உள்ளன. எனவே, தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பான புதுமைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் 2010-ல் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுடன், தமிழ் இணையதள மாநாடு 2010-ஐ நடத்த வாருங்கள். அதற்கான முழு வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தரும் என்று அழைப்பு விடுத்தார்.


அமெரிக்காவிலிருந்து தப்பி 2 ஆண்டாக தலைமறைவு- என்.ஆர்.ஐ. பெண் சென்னையில் கைது


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து தனது மகனுடன் தப்பி வந்து இந்தியாவில் தலைமறைவாக இருந்து வந்த என்.ஆர்.ஐ. பெண்ணை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் வைத்துப் பிடித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இப்பெண்ணை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்து பிடித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலிருந்து தனது மகனுடன் வேறு இடத்திற்கு மாற அந்தப் பெண்மணி முயன்றபோது சிபிஐ அதிகாரிகள் அவர்களைப் பிடித்தனர். உடனடியாக அவர்களை டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர்.

அதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி தருண் சாட்டர்ஜியின் இல்லத்திற்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தினர். அவர்களை 2 நாள் சிபிஐ காவலில் அனுமதித்த நீதிபதி, இருவரையும் செவ்வாய்க்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் விஜயஸ்ரீ வூரா. இவரது கணவர் ரவிச்சந்திரன். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வீடு உள்ளது.

2005ம் வருடம் செப்டம்பர் 8ம் தேதி திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி தனது மகனுடன் விஜயஸ்ரீ மாயமானார்.

இதுகுறித்து அமெரிக்க போலீஸில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். விசாரணையில், விஜயஸ்ரீ மகனுடன் இந்தியாவுக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில காவல்துறைக்கு அமெரிக்க காவல்துறை தகவல் தெரிவித்து தேடிக் கண்டுபிடிக்கும்படி கோரியது.

இந்த நிலையில் அமெரிக்க கோர்ட்டில் ரவிச்சந்திரன் - விஜயஸ்ரீ தம்பதிக்கு விவாகரத்து தீர்ப்பானது.

இதையடுத்து தனது மகன் ஆதித்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி ரவிச்சந்திரன், உச்சநீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயஸ்ரீயையும், ஆதித்யாவையும் கண்டு பிடித்து ஆஜர்படுத்தும்படி கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் இருவரையும் தேடத் தொடங்கினர். இதில் நேற்று இருவரும் சென்னையில் வைத்து சிக்கினர்.

விஜயஸ்ரீ வூரா சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸுக்கு சீல்!!

பிரபல ஜவுளி மற்றும் பல்பொருள் விற்பனை நிறுவனமான சரவணா செல்வரத்தினம் கடைக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (எம்எம்டிஏ) அதிகாரிகள் இன்று திடீரென்று சீல் வைத்தனர்.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ளது சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ். மிக பிரமாண்டமான இந்த கடையில் ஜவுளிகள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட பலவகை பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.

இந்தக் கடை அமைந்துள்ள கட்டடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முற்பகல், அந்தக் கடையை பூட்டி சீல் வைத்தனர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள்.

இந்தச் சம்பவம் தி.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.நகரில் கட்டப்பட்டுள்ள பல பிரமாண்ட கட்டடங்களிலும் இதுபோன்ற விதிமீறல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோலத்தான் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள பல பிரமாண்ட கட்டடங்களும் விதி மீறலில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுள்ளன.

1.5 லட்சம் சத்துணவு ஊழியர்களுக்கு ஏடிஎம்மில் சம்பளம்- நவம்பர் முதல் அமல்

1.5 லட்சம் சத்துணவு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஏ.டி.எம்மில் ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 33,000 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என ஓன்றரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் முறையே ரூ.4500, 2500, 1500, 1000 என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 335 யூனியன், 148 நகராட்சி அலுவலங்களில் ஊதியம் பெற்று வருகின்றனர்.

ஊதியம் பெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று காத்து கிடக்கும் நிலை ஏற்படுவதுடன், சம்பந்தப்பட்ட யூனியன் அலுவலகத்திற்கும், சத்துணவு ஊழியர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கும் வெகுதூரம் இருக்கும் நிலையில் ஊதியம் பெருவதற்கு வரும் நாளில் விடுமுறை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

இதையடுத்து தங்களுக்கு மற்ற அரசு ஊழியர்களை போல் வங்கி ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டுமேன சத்துணவு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக முதல்வரின் உத்தரவுபடி சமுக நலத்துறை 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

சத்துணவு ஊழியர்களுக்கு ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்கிடும் வகையில் முதல்கட்டமாக சத்துணவு அமைப்பாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு தொடர வலியுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அடுத்த மாதத்திற்குள் வங்கியில் ஏடிஎம்முடன் கூடிய கணக்கு தொடங்கிய சத்துணவு அமைப்பாளர்கள் குறிதத பட்டியலை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

இனி ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தமிழிலும் பெறலாம்

சென்னை [^] மாநகராட்சி எல்லைக்குள் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை இனிமேல் ஆன்லைனில் தமிழிலேயே பெற முடியும். நவம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து பெறும் நடைமுறையை மாநகராட்சி ஆரம்பித்தது.

இந்த நிலையில் தற்போது தமிழிலேலேய சான்றிதழ் பெறும் முறை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான தகவல் பதியும் நடைமுறைகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். நவம்பர் மாதம் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறியுள்ளார்.

முன்பு ஆங்கிலத்தில் மட்டும் சான்றிதழ்கள் தரப்பட்டு வந்தன. ஆனால் அதில் ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குள் இருப்பதாக புகார் [^]கள் வந்தன. இதையடுத்து ஆன்லைனிலேயே பிழைகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கிட்டத்தட்ட 9488 பேர் பிறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும், 1458 பேர் இறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். இதையடுத்தே தமிழிலும் சான்றிதழ்களை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சி டேட்டா பேஸில் 50 லட்சம் பிறப்பு தகவல்களும், 25 லட்சம் இறப்புத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தினசரி 5000 பேர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

மாநகராட்சியின் இணையதளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 5.31 லட்சம் ஹிட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்கள்தான்.

இதுவரை 2.97 லட்சம் பிறப்பு சான்றிதழ்களும், 78,000 இறப்பு சான்றிதழ்களும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துக்களுக்காக யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தப்படவுள்ளதாம். பெயர், பாலினம், பிறப்பு தேதி, பிறப்பிடம், தந்தை- தாய் பெயர்கள், நிரந்தர முகவரி, குழந்தை பிறந்தபோது பெற்றோர் இருந்த முகவரி, பதிவுத் தேதி, விநியோக தேதி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் மருத்துவமனைகள், தங்களது மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை [^]கள் குறித்த விவரங்களை தமிழ் [^] மற்றும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யலாம்.

தற்போது பிறப்பு விவரங்களைப் பதிவு செய்து கொள்ள மாநகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நேரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

ரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை!ரகசிய குறியீடு இல்லாமல் வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார்.

கொரியா, சீனா [^], தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன.

இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

மாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வகை செல்போன்களில், 'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.

இத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு [^] [^] முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது.

தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பது மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் [^] உறுதிப்படுத்தியுள்ளார்.

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம்

இறக்கை இல்லாத, காற்றை அள்ளி வீசக்கூடிய நவீன மின்விசிறியை பிரிட்டன் தொழிலதிபர் அறிமுகப்படுத்தியுள்ளார்.வீட்டில் குனிந்து பெருக்கும் சிரமத்தை தவிர்த்து "வேக்வம் கிளீனர்' என்ற சாதனத்தை அறிமுகப்படுத்திய பிரிட்டனின் ஜேம்ஸ் டைசன், தற்போது பிளேடு இல்லாத மின்விசிறியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வட்டவடிவில் உள்ள இந்த மின்விசிறி காற்றை ஒரு பக்கம் வாங்கி மற்றொரு பக்கம் வேகமாக வீசுகிறது. இதற்குரிய வகையில் இந்த மின்விசிறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விசிறி மூலம் இறக்கையில் தூசி படியுமே என்ற கவலை இல்லை. குழந்தைகளுக்கும் இந்த மின் விசிறியால் ஆபத்தில்லை.கதவை திறந்து வைப்பதன் மூலம் இந்த மின்விசிறி அதிகப்படியான காற்றை உறிஞ்சி அறையை குளுமைப் படுத்தும். "ஏசி' மிஷினை விட இந்த மின்விசிறியால் அதிக பலன் உண்டு, என்கிறார் ஜேம்ஸ் டைசன்.தற்போது தான் இந்த மின்விசிறி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் 10 ஆயிரம் ரூபாய் வரை இதன் விலை உள்ளது.

செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்கள் * மன்னார் வளைகுடாவை பாதுகாக்க முயற்சி


மன்னார் வளைகுடாவை பாதுகாக்கும் பொருட்டு, செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களை உற்பத்தி செய்யும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகில் உள்ள கடல் பகுதிகளில், மன்னார் வளைகுடா விசித்திரமானது. அதனால் தான், ஐக்கிய கூட்டுறவு அமைப்பின், 31 கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், மன்னார் வளைகுடாவும் இடம் பெற்றுள்ளது. பவளப்பாறைகள் அதிகம் நிறைந்துள்ளதால், "அலங்கார மீன்கள்' என அழைக்கப்படும் வண்ண மீன்கள் உற்பத்தி, பெரிய அளவில் உள்ளது. இவற்றுக்கு ஏற்பட்டிருக்கும், "கிராக்கி'யால், வண்ண மீன்கள் சேகரிப்பின் போது, பவளப்பாறைகள் சேதமடைவது, ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதை தடுக்க, கடல் வாழ் வண்ண மீன்களை செயற்கை முறையில் உற்பத்தி செய்ய, மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் களமிறங்கினர்.
கடலின் உவர்ப்பு தன்மையில் தாங்கி வளரும் இவற்றை, தூய நீரில் உயிர்பிக்கச் செய்து, சாதனை படைத்துள்ளனர். வண்ண மீன்கள் தொடர்பான ஆய்வு வெற்றி பெற்றதை தொடர்ந்து, இறால் மீன்கள், அரிய வகை கடல் வாழ் தாவரங்களையும், செயற்கை முறையில் உற்பத்தி செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
ஆராய்ச்சி நிலைய பொறுப்பு அதிகாரி கோபக்குமார் கூறுகையில், "செயற்கை முறையில் அலங்கார மீன்கள் வளர்க்கும் முறை குறித்து, இந்திய கடலோர மாநில அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம். விரைவில் அனைத்து மாநிலங்களில், செயற்கை முறையில் கடல் மீன்கள் உற்பத்தி செய்யப்படும்' என்றார்.

கோவை மருத்துவ கல்லூரியில் நிர்வாண ராகிங்- 4 மாணவர்கள் கைது

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த நான்காம ஆண்டு பயிலும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 4ம் ஆண்டு மாணவர்கள் முத்துக்குமார், ரமணன், லோகேஷ் மற்றும் கார்த்திக்.

இரு தினங்களுக்கு முன் 4 பேரும் ‌சேர்ந்து, 2ம் ஆண்டு மாணவர்கள் 14 பேரை மிகக் கொடூரமாக ராகிங் செய்துள்ளனர்.

அவர்களை உடைகளைக் களையச் செய்து நிர்வாணப்படுத்தி தரையில் நீந்தச் செய்துள்ளனர்.

இதையடுத்து 2ம் ஆண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரி டீன் குமரனிடம் புகார் கொடுத்தனர். குமரன் இது குறித்து 4ம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அதில் ராகிங் செய்தது உறுதியானதையடுத்து இது குறித்து புகார் அறிக்கையை பீளமேடு காவல் நிலையத்துக்கு அனுப்பினார்.

இதன் அடிப்படையில் முத்துக்குமார், ரமணன், லோகேஷ், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்தும் டீன் உத்தரவிட்டுள்ளார்.