தமிழகம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இ.குழந்தைவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகம் , கேரளா பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு , இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

திருச்செந்தூரில் 3 செ.மீ.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பூதப்பாடியில் 2 சென்டி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கம், பொன்னேரி, தென்காசி, தக்கலை ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உட்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக 29-ந் தேதி அறிவிக்கப்படலாம் என்றார்.

இன்று அதிகாலையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேகம் சூழ்ந்து லேசான மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர்.

ரெயின் கோட் வி்ற்பனை சூடு பிடித்தது...

நேற்று மாலையே மழை வந்து விட்டதால் சென்னை நகர பிளாட்பாரங்களில் ரெயின் கோட் விற்போர் குவியத் தொடங்கி விட்டனர். மழையிலிருந்து தப்ப மழை வந்தவுடன்தான் ரெயின் கோட் வாங்கும் 'நல்ல' பழக்கம் உடையோர் இவர்களிடம் ரெயின் கோட் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

0 comments: