செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்கள் * மன்னார் வளைகுடாவை பாதுகாக்க முயற்சி


மன்னார் வளைகுடாவை பாதுகாக்கும் பொருட்டு, செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களை உற்பத்தி செய்யும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகில் உள்ள கடல் பகுதிகளில், மன்னார் வளைகுடா விசித்திரமானது. அதனால் தான், ஐக்கிய கூட்டுறவு அமைப்பின், 31 கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், மன்னார் வளைகுடாவும் இடம் பெற்றுள்ளது. பவளப்பாறைகள் அதிகம் நிறைந்துள்ளதால், "அலங்கார மீன்கள்' என அழைக்கப்படும் வண்ண மீன்கள் உற்பத்தி, பெரிய அளவில் உள்ளது. இவற்றுக்கு ஏற்பட்டிருக்கும், "கிராக்கி'யால், வண்ண மீன்கள் சேகரிப்பின் போது, பவளப்பாறைகள் சேதமடைவது, ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதை தடுக்க, கடல் வாழ் வண்ண மீன்களை செயற்கை முறையில் உற்பத்தி செய்ய, மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் களமிறங்கினர்.
கடலின் உவர்ப்பு தன்மையில் தாங்கி வளரும் இவற்றை, தூய நீரில் உயிர்பிக்கச் செய்து, சாதனை படைத்துள்ளனர். வண்ண மீன்கள் தொடர்பான ஆய்வு வெற்றி பெற்றதை தொடர்ந்து, இறால் மீன்கள், அரிய வகை கடல் வாழ் தாவரங்களையும், செயற்கை முறையில் உற்பத்தி செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
ஆராய்ச்சி நிலைய பொறுப்பு அதிகாரி கோபக்குமார் கூறுகையில், "செயற்கை முறையில் அலங்கார மீன்கள் வளர்க்கும் முறை குறித்து, இந்திய கடலோர மாநில அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம். விரைவில் அனைத்து மாநிலங்களில், செயற்கை முறையில் கடல் மீன்கள் உற்பத்தி செய்யப்படும்' என்றார்.

0 comments: