லிப்ட் வசதியுடன் சென்னையில் 7 நடைமேம்பாலங்கள்

சென்னையில் பாதசாரிகள் சாலையை குறுக்கே கடக்க வசதியாக, ஏழு இடங்களில் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சைதாப்பேட்டை தாலுகா ஆபீஸ் சாலையில், மாஜிஸ்ரேட் கோர்ட் அருகில் 90 லட்ச ரூபாய் மதிப்பில், லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. ஐந்து, ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பணி மிகவும் மந்த கதியில் நடக்கிறது.


இந்நிலையில் மேயர், நடைமேம்பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த போது கூறியதாவது:சைதாப்பேட்டை நடை மேம்பாலம் கட்டும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். இதில், லிப்ட் வசதிகள் அமைக்கும் பணி நவம்பர் மாதத்திற்குள் முடிவுறும். இது போல், நகரில் மேலும் ஆறு இடங்களில் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, ஒப்பந்தங்கள் கோரியுள்ளது.


ராஜாஜி சாலையில், பீச் ரயில் நிலையம் அருகில் 70 லட்ச ரூபாய் மதிப்பிலும், எழும்பூர் ரயில் நிலையம் அருகில், காந்தி இர்வின் சாலையில், 90 லட்ச ரூபாய் மதிப்பிலும் பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் 80 லட்ச ரூபாயிலும், அடையார் தேஷ்முக் சாலையில் 80 லட்ச ரூபாயிலும், வாலாஜா சாலை- பெல்ஸ் சாøலா சந்திப்பில் 80 லட்ச ரூபாயிலும், வாலாஜா சாலை - காயிதே மில்லத் சாலை சந்திப்பில், 80 லட்ச ரூபாயிலும் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஐந்து கோடியே 70 லட்ச ரூபாய் செலவில், ஏழு இடங்களில் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.

0 comments: